Posted on July 2, 2009 with No Comments
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரான எம்.எம்.எஸ்.முஸ்தபாவின் வீட்டின்மீதும், கட்சியின் அலுவலகத்தின் மீதும் சிலர் கழிவு எண்ணெய் வீசியுள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. தில்லையடி ரஜ்மல் ஒழுங்கையிலுள்ள வீட்டின்மீதும் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தின் மீதுமே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted on July 2, 2009 with No Comments
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் மூலம் தெற்கிலும் வசந்தம் ஏற்படுமென மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். வடக்கின் மீன்பிடி நடவடிக்கைகள் தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள அனைத்து உற்பத்திப் பொருட்களும் தெற்கிற்கு அனுப்பி வைக்கப்படுமாயின் தெற்கிலுள்ள மக்களின் வாழ்க்கையிலும் நாளை விடிவு ஏற்படுமென்றும் பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்டுள்ளார். வடக்கில் கிடைக்கும் மீன்களை தெற்கிலுள்ள மக்களுக்கு குறைந்தவிலையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Posted on July 2, 2009 with No Comments
உள்ளக இடம்பெயர்வுக்குள்ளாக நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சுமார் ஒன்பதாயிரம் வயோதிபர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சிலரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இரண்டாயிரம் வயோதிபர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச சட்டத்தரணி ரியாஸ் ஹம்சான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பில் கொள்கையளவிலான தீர்மானத்தின் பிரகாரமே அரசாங்கம் செயற்படுவதாகவும், மாற்று வழிமுறைகள் இல்லையெனவும் அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
Posted on July 2, 2009 with No Comments
கிழக்கில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் களைவதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது கிழக்கு வாழ் முஸ்லிம்கள் விடுத்த வேண்டுகோளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது ஆயுதங்களைக் களைவதற்கான காலம் எதிர்வரும் நான்காம் திகதி 3.00மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காத்தான்குடியில் இயங்கி வந்த குறித்த முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஒரே நேரத்தில் ஆயுதங்களை களைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Posted on July 2, 2009 with No Comments
அடுத்தமாத இறுதியில் அரச சமாதான செயலகத்தை மூடி விடுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளதென சமாதான செயலக பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதுபற்றி எவ்வித விசேட காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இத்தீர்மானம் குறித்து ஊடகங்களை வெளிப்படுத்தவோ அலலது கருத்து தெரிவிக்கவோ அல்லது மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கவோ நான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான செயலக பணியகத்தில் பணிபுரிபவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றினர். அவர்களின் எதிர்காலம் தொடர்பாக நிச்சயமற்ற நிலையே காணப்படுகிறது. அரச சேவையில் அவர்கள் இணைந்து கொள்வார்களா? என்பது பற்றி இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றும் விஜேசிங்க கூறியுள்ளார்.
Posted on July 2, 2009 with No Comments
நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளவுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் தேர்தல்க் கடமைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு சென்றிருப்பதாலும், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் தங்கியிருப்பதாலும் கொழும்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எம்மிடம் கூறினார். எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன. எனினும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது பற்றி ஜே.வி.பி. இதுவரை தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Posted on July 2, 2009 with 2 Comments
இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கனடாவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ புகலிடம் வழங்குவது பற்றித் தான் அக்கறை கொள்ளவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், உள்நாட்டு மோதல்களால் இடம்பெயர்ந்து நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகளை இலங்கைக்கு அழைக்கவிருப்பதால், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவில் புகலிடம் கோர அனுமதிக்கக் கூடாதெனவும் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் ஜனாதிபதி கூறினார். “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் எத்தனை பேரையாவது ஏற்றுக்கொள்ளத் தயாரெனக் கனடா கூறியுள்ளது. இந்த நாடுகள் நலன்புரி முகாம்களுக்குள் அலுவலகங்களை அமைத்து அங்கிருந்தே இடம்பெயர்ந்த மக்களுக்கு வீசா வழங்கினாலும் நான் கவலைப்படவில்லை” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேநேரம், சில தூதரகங்கள் இலங்கைக்கு எதிராகப் பிழையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்த ஆரம்பித்திருப்பதுடன், சில இலங்கையர்களுக்கான வீசா அனுமதிகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
Read more
Posted on July 2, 2009 with No Comments
முன்னாள் போராளிக் குழுத் தலைவராகவிருந்து தற்பொழுது அரசியல்வாதியாக மாறியிருக்கும் ஒருவர் கூறியதைப் போன்று முன்னால் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இராணுவத்தில் விசேட படையணி எதுவும் உருவாக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தனது அமைப்பிலிருந்த உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இராணுவத்தில் தமிழ் படையணியொன்று உருவாக்கப் படவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அண்மையில் கூறியிருந்தார். எனினும், முன்னாள் போராளிகளுக்கெனத் தனியான படையணியொன்றை உருவாக்கும் திட்டமெதுவும் அரசாங்கத்துக்கு இல்லையென ஊடகத்;துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “இது நல்லதொரு சிந்தனை, ஆனால் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்ட இளைஞர்களே இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதுடன், அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும். வன்முறைகளைக் கைவிட்டு புனர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகள் ஏன் இதில் இணைவதில்லையென எனக்குத் தெரியவில்லை” என்றார் அமைச்சர். இதேவேளை, இலங்கையில் 192,000 பேர் வேலைகளை இழந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த ஊடகத்துறை அமைச்சர், வேலைகளை இழந்தவர்கள் உட்பட 203,000 மாற்று வேலைகளைப் பெற்றிருப்பதாகவும் கூறினார்.
Posted on July 2, 2009 with 1 Comment
எதிர்த்தரப்பினர் கையாண்ட தந்திரோபாயங்கள் மற்றும் அவர்களிடம் ஏற்பட்ட மாறுதல்களை விடுதலைப் புலிகள் அமைப்பு அறிந்துகொள்ளாமையே அவர்களுக்குப் பின்னடைவு ஏற்படக் காரணமாகவிருந்தது என இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்ட் அமைப்பு கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் எதிரிகளைக் குறைத்து மதிப்பிட்டதுடன், தமது பலம்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள 16 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் ஏற்பட்ட அனுபவம் எமக்கு மிகவும் முக்கியமானது. அதிலிருந்து நல்லதொரு படிப்பினையைப் பெற்றுள்ளோம். விடுதலைப் புலிகள் எதிரியின் உத்திகள், பலம், சர்வதேச ஆதரவு, சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவு போன்றவற்றை அறிந்துகொள்ளாததுடன், எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மேற்குவங்கப் பகுதியிலுள்ள கிராமமொன்றைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த புரட்சிக் குழுவான மாவோயிஸ்ட் அமைப்பு, அங்கு ஆட்சியமைத்திருந்த கொமியூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கி சேதப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை இந்திய மத்திய அரசாங்கம் தடைசெய்திருந்தது.
Posted on July 2, 2009 with No Comments
கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் பொலிஸ் பதிவை மேற்கொள்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சில் கணணி மூலம் பதிவை மேற்கொண்டிருந்தபோதிலும், இந்த மக்கள் பொலிஸில் பதியும்;போது சிரமங்களை எதிர்நோக்கிவருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள்; வெறொரு வீட்டிற்கு குடியிருக்கச் செல்லும்போது இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் பதிவை மேற்கொள்வதற்காக குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் கேட்கப்படுவதுடன், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வடக்கு, கிழக்கிலிருந்து முக்கிய தேவையாக கொழும்பிற்கு வருபவர்களிடம் 3 மாதங்களில் திரும்பிச்செல்லவேண்டுமெனப் பொலிஸ் நிலையங்களில் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Posted on July 2, 2009 with 3 Comments
”இனி தமிழ் ஈழம் பற்றி பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் நிலை குறித்து கொண்டுவரப்பட்ட சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையிலேயே கருணாநிதி இவ்வாறு கூறினார். திமுக நிறுவனர் மறைந்த அண்ணாதுரை, இந்தியாவில் பிரிவினைவாதத்தடை சட்டம் வந்தவுடன் திராவிட நாடு கொள்கையை கைவிட்டதைப்போல் சந்தர்ப்ப சூழலுக்கேற்பவே எந்தவொரு மக்கள் இயக்கமும் செயல்படவேண்டும் என்றும் அவர் வாதிட்டார். ”தவிரவும், மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைக்காமல், சிங்களர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட்டு தமிழர்நலன் காக்கவேண்டும், அதே நேரம் மத்திய அரசு இவ்விஷயத்தில் இன்னமும் தீவிரமாக செயல்படவேண்டும்” என்றும் முதல்வர் மேலும் கூறினார். இலங்கை அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டைமான் தன்னை சந்தித்து இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வு குறித்து விவாதித்திருப்பதாகவும் தான் நம்பிக்கையுடனேயே எதிர்காலத்தை நோக்குவதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
Posted on July 1, 2009 with No Comments
புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் வருடந்தோறும் ஜுலை மாதத்தில் நடத்தப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 05.07.2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் சூரிச் மாநகரிலுள்ள உன்ரர் அப்போல்ரன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்ப நிகழ்வாக வீரமக்கள் தினத்திற்குரிய மலராஞ்சலி மற்றும் அக வணக்கம் என்பன இடம்பெறுவதுடன், இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம அதிதியாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்போரின் உரைகளும் முக்கியஸ்தர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளது. அத்துடன் விசேட நிகழ்வுகளாக பின்னணி இசைக்கு ஆடுதல், வினோதவுடைப் போட்டி, பொது அறிவுப்போட்டி, நாடகம், நாட்டியம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. மற்றும் அண்மையில் சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியர்களுக்காக தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்க்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
வேறு மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 076- 368 15 46.. 076-310 82 17.. 078 -312 43 39.. 077- 203 88 81
வீரமக்கள்தின நிகழ்வு நடைபெறும் மண்டபம்.
GemeinsSchfts Zentrum Affolten,
Bodenacker.25
8049 Zürich
நன்றி.. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் -சுவிஸ்கிளை
Posted on July 1, 2009 with 3 Comments
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் நல்லாட்சி குறித்து அதிக அக்கறை காட்டப்பட வேண்டும் என இலங்கைக்கான ஜப்பானிய விஷேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார். ஆசியாவின் மிகப்பழைய ஜனநாயக நெறிமுறைகளைக் கொண்ட நாடு என்ற ரீதியில் இலங்கை நல்லாட்சி குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இலங்கைப் பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய அரிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதெனவும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்ககூடிய ஜனநாயக ரீதியான ஓர் ஆட்சிமுறைமையின் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் திறந்த மனதுடன் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபக்குவம் மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Posted on July 1, 2009 with No Comments
இலங்கையில் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றுமொரு அனைத்துக்கட்சி குழுவொன்றை உருவாக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் இந்த குழுவில் அங்கம் வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நாட்டின் நடைமுறைச் சிக்கல்கள் அரசியல் பிரச்சனைகள் குறித்தும் இந்த அமைப்பு ஆராயவுள்ளதாக குறி;ப்பிடப்படுகிறது. இந்த விஷேட அனைத்துகட்சி குழு மாதமொருமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியின் ஓர் அங்கமே இந்த புதிய அனைத்து கட்சி உருவாக்கம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Posted on July 1, 2009 with 6 Comments
கருணா கூறியுள்ளதைப் போல தமிழ் ரெஜிமென்ட் எதையும் உருவாக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை. அந்த செய்தி தவறு என்று கூறியுள்ளார் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. தமிழர்களைக் கொண்ட தனி படைப் பிரிவு உருவாக்கப்படும். அதில் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எங்களது பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அதில் சேர்ந்து வருகின்றனர் என்று கருணா கூறியிருந்தார். ஆனால் அதை பொய்ச் செய்தி என்று கூறியுள்ளார் கோத்தபாய ராஜபக்சே. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கருத்து அடிப்படை அற்றது. அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை. கருணா கூறியதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் கோத்தபாய. இதையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லாவும் தெரிவித்துள்ளார்.