சிடார் புயலால் வங்கதேசத்தில் பெரும் சேதம் – 250 பேர் பலி : ஆயிரம் மீனவர்கள் கதி என்ன?
கடலோர மாநிலங்களை அச்சுறுத்திய சிடார் புயல் வங்கதேசத்தில் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழைக்கு 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்தமான் தீவு பகுதிகளில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த மையம் மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக உருவெடுத்தது. . இதையடுத்து இந்தியாவின் கடலோர மாநிலங்களில் கடல் சீ்ற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை கடல் கொந்தளித்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னையில் திடீரென்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து எண்ணூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் புகழ்பெற்ற மெரினா கடற்கரை மற்றும் எண்ணூர், ராயபுரம் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில் இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆக அலைகளின் சீற்றம் அதிகரித்தது. திருவொற்றியூர் அப்பர் மேடு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதில் பத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. காசிமேடு பகுதியில் கடல் கொந்தளிப்பால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியது. இதனால் கடற்கரை சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடல் நீர் கடற்கரையை தாண்டி ரோட்டிற்குள் கடல் நீர் புகுந்தது. நேற்று இரவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சுனாமி ஏற்பட்டதாக மக்கள் பீதியில் உறைந்தனர்.
இதற்கிடையில் சிடார் புயல் ஒரிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாநிலங்களில் சேதத்தை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரிசா மாநிலத்தில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. புயலில் சிக்கியவர்களை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புயல் ஒரிசால் கரையை கடக்கவில்லை.
ஒரிசா பெரும் புயலில் இருந்து தப்பிய நிலையில் வங்கதேசத்தின் சதுப்பு நில காடுகளில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 250 கி.மீ. வேக சூறாவளி காற்றுடன் அங்கு கன மழை பெய்தது. கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இந்த பெரும் புயலால் வெள்ளம் உள்ளிட்ட சேதத்தால் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 300 படகுகளில் மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், புயல் சேதங்களை பற்றிய விவரங்கள் ஏதும் அறியமுடியவில்லை. அங்குள்ள விமான நிலையம் சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது. பரிசால் என்னும் இடத்தில் பள்ளி கட்டடங்கள் இடிந்தது. வீடுகள் பல இடிந்துள்ளது. மீட்புப்பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மீட்புப்பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து மருத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
புயல் கரையை கடந்தாலும் கடலின் சீற்றம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பலத்த காற்றும் வீசுகிறது. புயல் வங்கதேசத்தை தாக்கியதைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதியில் கடல் அலைகளில் சீற்றம் குறைந்துள்ளது. இருப்பினும் வடசென்னையை சேர்ந்த 50 மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் கவலையில் உள்ளனர்.
கடல் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.