திருவொற்றியூரில் கடத்தப்பட்ட பிளஸ்–1 மாணவர் படுகொலை: 2 வாலிபர்கள் சிக்கினர்…!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் நாலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவர் எண்ணூர் அனல் மின்நிலையத்தில் அதிகாரியாக உள்ளார். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 16).
இவர் மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் ராஜேஷ் திருவொற்றியூர் வெற்றி விநாயகர் நகர் 4–வது தெருவில் உள்ள பெரியம்மா தனபாக்கியம் என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குமாருக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் ராஜேஷை கடத்தி வைத்துள்ளோம். ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம். பணத்தை எங்கே கொண்டு வருவது என பின்னர் சொல்கிறோம்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் பயந்து போன குமார் திருவொற்றியூரில் உள்ள உறவினரான சுபாஷ் (23) என்பவருக்கு போன் செய்து கேட்டார். அப்போது அவர் ராஜேஷ் இங்குதான் இருக்கிறான். இரவு அனுப்பி வைப்பதாக கூறினார்.
இரவு குமார் போன் செய்து கேட்டபோது ராஜேஷை அனுப்பி வைத்து விட்டதாக சுபாஷ் கூறியுள்ளார். ஆனால் நேற்று காலை வரை ராஜேஷ் வீட்டிற்கு வரவில்லை.
அப்போது குமாருக்கு மீண்டும் போனில் மிரட்டல் வந்தது. நான் கேட்ட பணத்தை ரெடி பண்ணி விட்டாயா? என்று கேட்டான்.
இதையடுத்து குமார் சாத்தாங்காடு போலீசில் புகார் செய்தார். மகனை யாரோ கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக கூறினார்.
இதற்கிடையில் தனபாக்கியம் வீட்டருகே துர்நாற்றம் வீசுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ராஜேஷ் பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். சுபாஷை பிடித்து சென்று விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தன.
சுபாசும், நரேஷ் (23) என்ற வாலிபரும் சேர்ந்துதான் ராஜேசை கை–கால்களை கட்டி அறையில் அடைத்து வைத்து உள்ளனர்.
சுபாஷின் போனில் இருந்துதான் குமாருக்கு ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். மகனை காணவில்லை என்று குமார் தேடியபோது கூட சுபாஷ் இங்குதான் இருக்கிறான் என்று கூறி நாடகமாடி உள்ளார்.
மேலும் போலீசில் புகார் கொடுக்க போகும்போதும் சுபாஷ் தனக்கு எதுவும் தெரியாததுபோல நாடகமாடியுள்ளார்.
நரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேசை நான் கொலை செய்யவில்லை. சுபாஷ்தான் கட்டி போட்டான் என்று கூறியுள்ளான்.
மேலும் இருவருக்கும் இடையே ஓரின சேர்க்கை இருந்துள்ளது. மாணவர் ராஜேசை ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதில் கொல்லப்பட்டாரா? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற காரணம் முழுமையாக தெரியவில்லை.
எதற்காக குமாரிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள், பின்னர் ஏன் மாணவனை கொன்றார்கள் என்பது மர்மமாக இருக்கிறது.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும். ஆனாலும் இந்த கொலை எந்த நோக்கத்திற்காக நடந்தது என்பது கண்டுபிடிப்பதில் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக கரீம் உள்பட மேலும் 4 பேரிடமும் விசாரணை நடக்கிறது.
Average Rating