இலங்கை விடயம்: நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம்!!

Read Time:5 Minute, 23 Second

1367203556Untitled-1இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், அல்லது இதற்கென்று அமைக்கப்படும் தனித் தீர்ப்பாயத்தில் கூண்டிலேற்ற வேண்டும் என்பதே தமிழீழ மக்களும் தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் எழுப்பிடும் நீதிக் கோரிக்கை.

ஐநா மனித உரிமை உயர் ஆணையர் இலங்கை அரசின் உள்நாட்டு நீதிப் பொறிமுறை என்ற கோரிக்கையை மறுத்து விட்டார். அதே போது கலப்பு நீதிமன்றம் அமைக்குமாறு இலங்கைக்கு யோசனை கூறியுள்ளார். இதுவும் கொலைக் குற்றத்தைக் கொலையாளியே விசாரிக்கும் நடைமுறைதான் என்று நாம் மறுதலிக்கிறோம்.

ஆனால், தமிழர்களின் கோரிக்கைக்கும் மனித உரிமை உயர் ஆணையரின் பரிந்துரைக்கும் முரணாக இப்போது மனித உரிமை மன்றக் கூட்டத்தில் அமெரிக்க வல்லரசு முன்வைத்துள்ள தீர்மானம் இலங்கை அரசைப் பாராட்டுவதாகவும், உள்நாட்டு விசாரணை என்ற அந்நாட்டின் ஆசையை நிறைவேற்றுவதாகவும் அமைந்திருப்பது உலகத் தமிழர்களுக்கும் மனித உரிமைப் பற்றாளர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்ட அமெரிக்காவின் வஞ்சகத் தீர்மானத்துக்கு இலங்கை அரசும் ஆதரவு தெரிவித்திருப்பதில் வியப்பில்லை.

சர்வதேச நீதிமன்ற விசாரணைதான் வேண்டும் என்று இலங்கையின் வட மாகாண சபையில் முதல்வர் விக்னேஸ்வரன் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்.

தமிழகச் சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவும் சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தித் தீர்மானம் கொண்டுவந்து அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

இந்த இரு தீர்மானங்களையும் இந்திய அரசு மதிப்பதாக இருந்தால், அமெரிக்காவின் வஞ்சகத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதோடு, தமிழர்களின் கோரிக்கையான சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி இந்தியாவின் சார்பில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

ஆனால் இந்திய அரசோ முன்போலவே இப்போதும் இலங்கை அரசுக்குத் துணை போகிறது. அண்மையில் இலங்கைப் பிரதமர் டெல்லி வந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, இரு நாடுகளும் படைத் துறையில் ஒத்துழைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் படி இந்திய-இலங்கைக் கூட்டு இராணுவப் பயிற்சி நாளை தொடங்க இருக்கிறது. இந்தத் தமிழினப் பகை நடவடிக்கையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய அரசே!

· தமிழகச் சட்டப் பேரவைத் தீர்மானத்தை மதித்து, இலங்கை அரசின் தமிழினப் படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு முன்முயற்சி எடு!

· ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களி!

· தமிழர்களின் நீதிக் கோரிக்கைக்கு ஆதரவாக ஐநா மனித உரிமை மன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவா!

· இலங்கையைப் புறக்கணி! இலங்கை மீது பொருளாதாரத் தடை விதி! இலங்கைக்கு இராணுவ உதவி, பயிற்சி எதுவும் வழங்காதே! இப்போதைய கூட்டு இராணுவப் பயிற்சியை உடனே கைவிடு!

போன்ற இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாளை (29. 09. 2015) நடத்தும் போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் படி தமிழக மாணவர்களையும் பொதுமக்களையும் அன்புரிமையோடு அழைக்கிறேன்!’’ என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடைக்கு வந்த சிறுவன் துஷ்பிரயோகம் – வர்த்தகருக்கு பிணை!!
Next post கஹவத்தையில் பெண் வெட்டிக் கொலை!!