செல்போனில் மிரட்டல்: திருச்செங்கோட்டில் பள்ளி மாணவி தற்கொலை!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடி புதுநெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விசை தறி தொழிலாளி. இவருக்கு நவீன்குமார்(16) என்ற மகனும், சுஷ்மிதா (14) என்ற மகளும் உள்ளனர்.
மகன் நவீன்குமார் 10–ம் வகும்பும், மகள் சுஷ்மிதா 9–ம் வகுப்பும் திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மாணவி சுஷ்மிதா நேற்று மாலையில் வீட்டின் விட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.
வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மகள் சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தந்தை முருகன் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
எனது மகள் 9–ம் வகுப்பு திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். தினமும் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு தனியார் பஸ்சில் தான் சென்று வருவார்.
அப்போது அவருடன் படிக்கும் தோழிகள் தர்ஷினி, சத்யா ஆகிய இருவரும் எனது மகள் சுஷ்மிதாவுடன் அதே தனியார் பஸ்சில் தான் பள்ளிக்கு செல்வார்கள்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னை போனில் யாரோ மிரட்டுவதாக சுஷ்மிதா எங்களிடம் கூறி அழுதார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறினோம்.
போனில் மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்? என்று கண்டுபிடித்து, அந்த நபரை சத்தம் போடுகிறோம் என்று கூறினோம்.
எனினும் எனது மகள் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் பள்ளியில் பரீட்சை இருப்பதாக கூறி விட்டு, காலையில் பள்ளி கூடத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு நாங்களும் தறி வேலைக்கு சென்று விட்டோம். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மகள் இறந்துள்ளார். மகளின் சாவில் மர்மமாக உள்ளது. அவரது இறப்பிற்கான காரணங்களை கண்டு பிடித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு டார்சர் கொடுத்தவர்கள் யார்? மகளின் செல்போனுக்கு வந்துள்ள மர்ம நபரின் அழைப்புகளை வைத்து கண்டு பிடித்தால் குற்றவாளிகளை எளிதாக கைது செய்து விடலாம்.
இவ்வாறு அவர் அந்த புகாரில் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
மேலும் மகளின் செல்போனுக்கு அடிக்கடி மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல் வந்த 3 செல்போன் எண்களை போலீசாரிடம் தெரிவித்தார்.
அந்த செல்போன் எண்களை வைத்து போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரித்து வருகிறார்கள்.
மாணவி சுஷ்மிதா தினமும் தனியார் பஸ்சில் தான் பள்ளிக்கு செல்வார். எனவே அந்த பஸ்சில் செல்லும் கல்லூரி மாணவர்கள் மிரட்டினார்களா? அல்லது அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மிரட்டினாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவியை மிரட்டுவதற்கான காரணம் என்ன? இந்த மிரட்டல்களில் யார்? யார்? சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பன போன்ற விபரங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating