சேயா செதவ்மி சிறுமியை கொன்ற, மனித மிருகங்களை தேடி வேட்டை..!! –பஸீர்!!
சேயா செதவ்மி. ஐந்தே வயதான முன்பள்ளி சிறுமி. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதியின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் படல்கம-அக்கரங்கஹ பகுதியை சேர்ந்தவர்.
கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) பின்னிரவுக்கும் சனிக்கிழமை அதிகாலைக்கும் இடையில் சேயாவுக்கு நேர்ந்த கொடூரத்தை எழுத்துக்களால் முழுமையாக எழுதிவிட முடியாது.
ஆம், உறங்கிக் கொண்டிருந்த போது மாயமான சேயா சனிக்கிழமை (12 ஆம் திகதி) காலை முதல் 24 மணிநேர தேடுதலின் பின்னர் ஞாயிறு காலை சடலமாக கிடைக்கும் போது ஏமாற்றம், கவலை, ஆத்திரம், கோபம், இயலாமை, கொடூரம் என அத்தனை விடயங்களையும் அது ஏற்படுத்தியது.
சிரித்து ஓடிக்கொண்டிருந்த ஓடைக்கருகே, யாரும் எதிர்பார்த்திராத நிலையில் சேயா நிர்வாணமாக, அவளது கீழாடையின் ஒரு பகுதியான வெள்ளை துணியினால் கழுத்து நெரித்து கட்டப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்படும் போதுதான் கொடூரத்தின் உச்சக் கட்டத்தை உணர முடிந்தது.
கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று இரவு சேயா எல்லா சிறுமிகளையும் போலவே, தனது அம்மாவுடன் சேர்ந்து சின்னத்திரை நாடகங்களை ரசித்தவாறு கதிரையிலேயே தூங்கிவிட்டாள். தூங்கியவள் மீண்டும் எழும்பவே இல்லை.
சேயாவுக்கு ஒரு தங்கை ஒரு அண்ணன். அண்ணனுக்கு 7 வயது. தங்கைக்கு 2 ½ வயது, 37 வயதான பெற்றோர், பாட்டன், பாட்டி இதுதான் சேயாவின் உலகம்.
கடந்த வெள்ளியன்று (11 ஆம் திகதி) சேயாவின் பாட்டனும் பாட்டியும் மரண வீடொன்றுக்கு வீட்டில் இருந்து செல்லவே, தந்தையும் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் சேயாவும், அவள் தாய், அண்ணன், தங்கை ஆகிய நால்வரே இருந்துள்ளனர்.
தந்தை ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களுக்கு போக்குவரத்து சேவையினை நடத்திவந்த நிலையில் வழமையாக வீட்டுக்கு வர தாமதமாவதுண்டு. அன்றும் அப்படித்தான். தந்தை வீட்டுக்கு வரும்போது நேரமோ நள்ளிரவு 12.00 மணியைத் தாண்டியிருந்தது.
வெள்ளி மாலை மரண வீட்டுக்குச் சென்ற பாட்டனும் பாட்டியும் இரவு 10.00 மணியும் கடந்த நிலையிலேயே வீட்டுக்கு வந்துள்ளனர்.
பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும். சேயாவின் வீட்டில் ஒரு அறையில் சேயாவும் அவள் பெற்றோரும் சகோதர சகோதரியும் தங்கியிருக்க பிறிதொரு அறையில் பாட்டனும் பாட்டியும் தங்கியிருந்தனர். சேயாவின் அறையில் விசாலமான கட்டில் போடப்பட்டிருந்த நிலையில் அக் கட்டிலானது அறையின் ஜன்னலோடு சேர்ந்ததாக இருந்தது.
நான்கு ஜன்னல்கள் அந்த அறைக்கு இருந்த நிலையில், அதில் மூன்றுக்கு இரும்புக் கம்பியினால் சட்டகம் (கிரில்) அமைக்கப்பட்டிருந்தது. ஒன்றுக்கு அவ்வாறான பாதுகாப்பு சட்டகம் இருக்கவில்லை.
தொலைக்காட்சிக்கு முன்னாலேயே உறங்கிவிட்ட சேயாவை வெள்ளி இரவு 9.00 மணிக்கெல்லாம் கட்டிலில் கொண்டு போய் கிடத்தி நுளம்பு வலையையும் போட்டுவிட்ட தாய், தனது 2½ வயது குழந்தையுடன் இன்னும் சிறிது நேரம் சின்னத்திரை பார்த்துள்ளார்.
இதன்போது சேயாவின் அண்ணனும் உறக்கத்திலேயே இருந்துள்ளான். சிறிது நேரத்தில் சேயாவின் தாயும், குழந்தையுடன் உறக்கத்துக்கு சென்றுள்ளார். அப்போது சேயா கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.
தனது கணவன் மற்றும் சேயாவின் பாட்டன் பாட்டி ஆகியோர் வீட்டுக்கு வெளியே சென்றிருந்ததால் அவர்களின் வருகைக்காக வீட்டின் பிரதான கதவு தாழிடப்படாது திறந்து வைக்கப்பட்டிருந்துள்ளது.
மறுபுறம் சேயா உறங்கிக் கொண்டிருந்த கட்டிலுக்கு நேராக இருந்த பாதுகாப்பு சட்டகமற்ற ஜன்னல் கூட சரியாக மூடப்படாதே இருந்துள்ளது.
இரவு 10.30 மணிக்கெல்லாம் பாட்டனும் பாட்டியும் வீடு திரும்பி தமதுஅறையில் உறக்கத்துக்கு சென்று விடவே நள்ளிரவு 12.00 மணியை தாண்டி வீட்டுக்கு வந்த சேயாவின் தந்தை தாயிடம் சேயா எங்கே என வினவியுள்ளார்.
இரவு நேரத்தில் திடீரென விழிக்கும் சந்தர்ப்பங்களில் சேயா பாட்டன் பாட்டியிடம் சென்று உறங்கும் பழக்கம் கொண்டவள் என்ற ரீதியில் அவர்களது அறையில் உறங்குவதாக அரைத் தூக்கத்தில் தாய் பதிலளித்துள்ளார்.
சனி காலை விடிந்தது. வேலைக்கு புறப்பட தயாரான சேயாவின் பாட்டன் வழமை போன்றே, சேயா எங்கே என தாயிடம் கேட்டுள்ளார். அவள் பாட்டியுடன் உறங்குவதாக தாய் கூறவே தனது அறைக்கு சென்ற பாட்டன் சேயா எங்கே என வினவ அவள் தாயுடன் உறங்குவதாக பாட்டி குறிப்பிட்டுள்ளார்.
பாட்டன் சேயாவை பார்த்துவிட்டே வேலைக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் சேயாவின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கும் அவளைக் காணாததால் பாட்டன் வீட்டில் சப்தமிட்டு சேயாவை காணவில்லையென தேடித் தீர்த்துள்ளார். பாட்டனின் சப்தத்துடன் அந்த வீடே சேயாவை தேடியது.
ஈற்றில் சனி காலை 7.30 மணியளவில் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்துக்கு சென்ற சேயாவின் பாட்டனும் தந்தையும் சேயாவை காணவில்லையென முறைப்பாடளித்தனர்.
உடனடியாக செயற்பட்ட கொட்டதெனியாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதித்த குமார தலைமையிலான பொலிஸ்குழு, சேயாவின் வீட்டை நோக்கி விரைந்ததுடன் விசாரணைகளை உடன் ஆரம்பித்தது.
இதனிடையே சேயா காணாமல் போன செய்தி ஊர் முழுவதும் பரவவே, ஊராரும் சேர்ந்து தேடுதலை ஆரம்பித்தனர். இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் உதித் குமார தனது உயர் அதிகாரிகளுக்கு விடயத்தை அறிவிக்கவே, விசாரணைகள் மேலும் துரிதமானது.
மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, மேல் மாகாணம்- வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எல்.ஜி.குலரத்ன ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரமவின் வழிகாட்டலில் நீர்கொழும்பு பிரிவு 2 க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த அத்துகோரளவின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டன.
சிறுமியைத் தேட உடனடியாக கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக திவுலபிட்டிய, ராகம பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
நீர் கொழும்பு பொலிஸ் தடயவியல் பிரிவினர் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டதுடன் பொலிஸ் மோப்பநாயான ‘வீக்கி’ யும் வரவழைக்கப்பட்டு சேயாவை தேடும் பணி விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் சேயா இறுதியாக அணிந்திருந்த சிவப்பு நிற மேலாடை கழற்றி கட்டி லில் அப்படியே இருந்த நிலையில் அந்த அறையின் உள், மற்றும் வெளிப்பக்கங்களை குற்றப்பிரதேசமாக வரையறுத்து பொலிஸ் தடயவியல் பிரிவினர் தடயங்களை சேகரித்தனர்.
அதன்படி பாதுகாப்பு சட்டகமற்ற ஜன்னல் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான கைவிரல் ரேகைகளை அவதானித்த பொலிஸார், சேயா உறக்கத்துக்கு சென்ற கட்டிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சேற்று கால் தடமும் மேலும் 6 தடயங்களும் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்நிலையில் சனியன்று முழுவதும் சேயாவை தேடியும் அவள் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் ஞாயிறன்றும் தேடுதல் தொடர்ந்தது. கொட்டதெனியாவை பிரதேசமெங்கும் பொலிஸாரும் பொதுமக்களும் சல்லடை போட்டு தேடினர்.
பொலிஸாருடன் இணைந்து அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஞாயிறு காலையில், கெஹல் எல்ல கனத்தை பகுதியை நோக்கி தேடுதலை விஸ்தரித்தனர்.
எனினும் அதில் பலனில்லை. இந்நிலையில் தான் அப்பிரதேசத்தில் உள்ள தென்னந் தோப்பு ஒன்றுக்குள் இந்த குழு தேடுதலை நடத்தச் சென்றது. அந்த தோப்பின் காவலாளி வாயிலை திறந்து கொடுக்கவே, ஒவ்வொரு அடியாக தேடிய அந்தக் குழு அந்த தோட்டத்தின் எல்லைவரை சென்றது.
அப்போது நேரமோ காலை 9.00 மணியை கடந்திருந்தது. தோப்பின் எல்லையில் இருந்த அரச மரத்தின் அருகே, பற்றைக்குள் ஏதோ ஒன்றைக் கண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ‘அதோ…அது அந்த சிறுமிதானே…’ என குரல் எழுப்பவே எதிர்பார்ப்புக்கள், காத்திருப்புக்கள் அனைத்தும் சுக்கு நூறாகின.
எதைப்பார்ப்பது…. ஓடிக் கொண்டிருந்த ஓடையின் அருகே பற்றைக்குள் கழுத்தில் வெள்ளைத் துணி ஒன்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் நிர்வாணமாக, கைவிரல்கள் குவிந்த நிலையில், கால்கள் மடிந்த நிலையில் சேயா உயிரற்ற சடலமாக இருந்தாள்.
ஊரே ஒன்று திரண்டது. சேயாவின் நிலையை எண்ணி கண்ணீர் விட்டு கதறியழுதது. சேயாவை அஸ்தமிக்கச் செய்த மனிதமிருகம் யார் என்ற கேள்வியுடன் தமது இயலாமையை நொந்துகொண்டனர்.
தாய் சமந்தி ரேணுகா, தந்தை உபுல் நிஸாந்த ஆகியோரும் சேயாவின் பாட்டன், பாட்டி உள்ளிட்டவர்களும் கதறியழுதனர். என்ன பயன். கொடூர அரக்கர்களின் உலகத்துக்கு சேயா விடை கொடுத்து வெகு நேரமாகியிருந்தது.
அன்று மாலை ஸ்தலம் விரைந்த மினுவாங்கொடை மேலதிக நீதிவான் சிசிர விஜேசூரிய நீதிவான் விசாரணைகளின் பின்னர், சட்ட வைத்திய நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பினார்.
கடந்த திங்களன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் சுமார் இரு மணி நேரம் இடம்பெற்ற பிரேத பரிசோதனை மற்றும் ஆய்வுகளின் பின்னர், சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் தீர்ப்பை வெளியிட்டார்.
சேயா மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளாள் என தீர்ப்பளித்த சட்ட வைத்திய அதிகாரி சேயாவின் உடற்பாகங்களை மேலதிக ஆய்வுக்கு அனுப்பியதுடன் சடலத்தை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.
கடந்த 16ஆம் திகதி புதனன்று சேயா தனது 6 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாட இருந்த நிலையில் 15 ஆம் திகதி மண்ணுக்குள் புதைக்கப்பட்டாள்.
இந்நிலையில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் விசாரணைகளை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, சேயாவை கொன்ற மனித மிருகத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் நாகஹமுல்ல ஆகியோரின் கீழ் 3 பொலிஸ் குழுக்கள் கொட்டதெனியாவவிற்கு அனுப்பப்பட்டன.
மொத்தமாக 6 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் மனித மிருகத்தை அடையாளம் காணும் இறுதி கட்டத்தை நோக்கி விசாரணைகள் நகர்ந்துள்ளன.
குறிப்பாக சேயாவின் படுகொலையுடன் ஆரம்பத்தில் அவரது தந்தை, தாய் ஆகியோரும் சந்தேகிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பு என்ற ரீதியில் விசாரணைக்கு அது பாரிய சவாலை ஏற்படுத்தியது.
அந்த சந்தேகம் பாதுகாப்பு காரணங்களை உருவாக்கி தனது சொந்த மகளின் கல்லறை வரை செல்வதில் இருந்தும் அவர்களை தடுத்து விட்டது.
எனினும் பொலிஸார் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தாய், தந்தை தொடர்பிலான சந்தேகங்கள் எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் அவ்விடயம் குறித்து விவாதிப்பதையும் பேசுவதையும் தவிர்ப்பதும் சிறந்தது.
ஏனெனில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட விசாரணைகளில் கைதுகள் இடம்பெறாத போதும் பாரிய முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவே தோன்றுகிறது.
அதன்படி பெற்றோர், குடும்பத்தார் உள்ளிட்ட 30க்கும் அதிகமானவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ள பொலிஸ் குழுக்கள் முக்கியமான பல தடயங்களை சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளன.
விசாரணைகளின்படி, பாதுகாப்பு சட்டகம் அற்ற ஜன்னலால் வந்த சந்தேக நபர் ஒருவர் சேயாவை கடத்திக்கொண்டு திறந்திருந்த முன் கதவால் சென்றிருக்க வேண்டும் என நம்பும் பொலிஸார், அந்த சந்தேகநபர் சேயாவுக்கு மிக பரீட்சயமானவராக இருந்திருக்க வேண்டும் எனவும் அதனாலேயே சத்தம் போடாமல் அவள் இருந்திருக்க வேண்டும் எனவும் அனுமானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சேயாவை படுகொலை செய்துவிட்டு சந்தேக நபர் அவளது மேலாடையை கட்டிலில் மீண்டும் கொண்டு வந்து போட்டுச் சென்றாரா என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.
ஏனெனில் ‘வீக்கீ’ சேயாவின் மேலாடையை மோப்பம் பிடித்துவிட்டு சுமார் 100 மீற்றர் வரை முன்சென்று மீண்டும் சேயாவின் வீட்டுக்கு வரக் கூடிய பிறிதொரு வழியே வந்தது அவதானிக்கத்தக்கது.
இதனைவிட மிகக் கொடூரமாக சேயா பலாத்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவளின் கைகளில், வேதனையால் பிடுங்கி எடுக்கப்பட்டது என கருதத்தக்க சந்தேக நபருடையது என சந்தேகிக்கப்படும் கேசங்கள் இருந்தமையும் அவதானிக்கத்தக்கது.
குறித்த கேசத்தின் ஊடாக சந்தேக நபரை உறுதிசெய்ய முடியும் என நம்பும் விசாரணைக்குழு, பல தடயங்கள் கு றித்த டீ.என்.ஏ. பரிசோதனைகளை ஏலவே ஆரம்பித்துவிட்டனர்.
சேயாவின் சடலமானது அவளது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்திலேயே மீட்கப்பட்ட போதும் ஊர் முழுவதும் பரந்து தகவல் சேகரித்த உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர் தொடர்பில் ஊகிக்கத்தக்க பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர் போதைக்கு அடிமையானவராக இருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார், அதேநேரம் அவர் விகாரமான பாலியல் ஆசைகளைக் கொண்டவராகவும், பாலியல் உறவு குறித்த வீடியோக்களை அதிகம் பார்ப்பவராகவும் இருக்க வேண்டும் என நம்புகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் மூவரை பொலிஸ் பொறுப்பில் எடுத்த புலனாய்வுப் பிரிவு அவர்களை விரிவாக விசாரணை செய்து வருகிறது.
இவ்வாறு பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டவர்களில் சேயாவின் வீட்டுக்கருகில் உள்ள18 வயதான இளைஞர் ஒருவரும், சில வீடுகளுக்கு அப்பால் உள்ள 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையும் நடுத்தர வயதை உடைய மற்றொருவரும் அடங்குகின்றனர்.
சேயாவின் வீட்டுக்கு அருகில் உள்ள நபர் அவளை நன்கு அறிந்தவர் எனவும், சேயாவும் அவனை நன்கு அறிந்திருந்ததாகவும் குறிப்பிடும் பொலிஸார், பொலிஸ் பொறுப்பில் உள்ள மூவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், பாலியல் உறவு வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் எனவும் உளவுத் தகவல்களை ஆதாரம் காட்டுகின்றனர்.
எனினும் சாட்சியங்கள் ஊடாக குறித்த மூவரும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்படாத நிலையிலும் கைதாகாத நிலையிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகயாக மன்றின் அனுமதியுடன் டீ.என்.ஏ.சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது.
உளவுத் தகவல்களின் பிரகாரம் குறித்த ஊரில் பெரும்பாலானோர், கஞ்சா, கள்ளச் சாராயம் போன்றவற்றுக்கு அடிமையானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளதுடன் சேயாவின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் பலர் சாராயம் அருந்துவது குறித்தும் தகவல் வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்கள் அல்லது மனித மிருகங்களை தேடிய வேட்டை தொடர்கின்றது.
உண்மையில் இந்த சிறார்கள் மீதான கொடூரங்கள் தற்போது இலங்கைக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
யுனிசெப் தகவல்களின்படி ஒவ்வொரு வருடமும் உலகில் ஏதோ ஒரு வன்முறை காரணமாக 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உளரீதியிலான தண்டனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர்.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அண்மையில் முன்னெடுத்திருந்த ஆய்வொன்றில் 15ஆயிரம் வழக்குகளில் 5 ஆயிரம் வழக்குகள் (மேல் நீதிமன்றில்) சிறுவர் துஷ்பிரயோகம் குறித்தானது என்பது நிரூபனமாகியுள்ளது.
இவற்றைவிட பொலிஸ் புள்ளி விபரங்களை பொறுத்தவரை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் கடந்த இருவருடங்களில் சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
2012 ஆம் ஆண்டு இவ்வாறான 91 முறைப்பாடுகள் பொலிஸில் பதிவாகியுள்ள நிலையில் 2013 ஆம் ஆண்டு 440 சம்பவங்களும் 2014 ஆம் ஆண்டு 377 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த புள்ளி விபரங்கள் சிறுவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய மிகையான அக்கறையையே எமக்கு சொல்லுகின்றது.
எனவே சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கும் பொறுப்பை காவல்துறையினர். மட்டும் சுமத்திவிடாது ஒவ்வொருவரும் ஏற்கவேண்டும்.
அப்போதுதான் நேற்யை சரண்யா, வித்தியா, இன்றைய சேயாவுடன் மனித மிருகங்களின் கொடூர காமப்பசிக்கு முடிவு கட்டலாம். இல்லையேல் நாளை மற்றொரு ….. யாவைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும்.
எச்சரிக்கை!!!
Average Rating