ரூ.50 லட்சம் தராவிட்டால் கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டல் போலீசார் மாறுவேடத்தில் சென்று வாலிபரை கைது செய்தனர்
ரூ.50 லட்சம் கேட்டு கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர். கல்லூரி மாணவிகள் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவரது மகள் சரோஜினி (18), தாமோதரனின் அண்ணன் மகள் திவ்யா (20). ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் வாணியம்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் 2 பேரும் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதே ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மைக்கேல் என்கிற மகேந்திரன் (வயது 20). மகேந்திரனின் தந்தை ராஜேந்திரன் சில வருடங்களுக்கு முன்பு தாமோதரன் வீட்டில் வேலை பார்த்து வந்தார். ஒருதலை காதல் அப்போது மகேந்திரன் தனது தந்தையை பார்க்க சரோஜினி வீட்டிற்கு வந்து செல்வார். சரோஜினி வசதி படைத்தவர் என்பதால் மகேந்திரன் ஒருதலைப்பட்சமாக சரோஜினியையும் சுமதியையும் ஒரே நேரத்தில் காதலிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர்கள் மகேந்திரனை ஏறெடுத்தும் கூட பார்ப்பது இல்லை. இந்த நிலையில் சரோஜினியும், சுமதியும் விடுமுறை நாளில் ஊருக்கு வரும்போது மகேந்திரன் பாட்டுபாடி கிண்டல் செய்துள்ளார். அப்போது கல்லூரி மாணவிகள் 2 பேரும் மகேந்திரனை திட்டினர். இதனால் அவர்களை பழிவாங்கவும், அவர்களை கடத்தி வீட்டிலிருந்து பணம் பறிக்கவும் மகேந்திரன் முடிவு செய்தார்.
ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
இந்நிலையில் சரோஜினியின் தந்தை தாமோதரனுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் “உன் மகளையும், உனது அண்ணன் மகளையும் கடத்தி கொலை செய்வேன் அப்படி செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் பணம் தரவேண்டும். அந்த பணத்தை ஆலங்காயத்தில் இருந்து ஒடுக்கதூர் வரும் தனியார் பஸ் டிரைவரிடம் கொடுத்து விடு, அதை அங்கு வந்து ஒரு வாலிபர் பெற்றுக்கொள்வார்” என்று எழுதப்பட்டு இருந்தது.
கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமோதரன் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து மர்ம கடிதம் எழுதிய வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
மாறுவேடத்தில் சென்ற போலீசார்
அதன்படி போலீசார் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அளவில் வெற்று பேப்பரை வெட்டி பண கட்டு போன்று 10 கட்டுகளாக கட்டினர். அதை ஒரு மஞ்சள் பையில் எடுத்து கொண்ட போலீசார் லுங்கி, சட்டை அணிந்து தலையில் துண்டு கட்டி கொண்டு ஆலங்காயம் சென்று அந்த குறிப்பிட்ட தனியார் பஸ்சில் ஏறினர்.
மஞ்சள் பையை டிரைவரிடம் கொடுத்து விட்டு பயணிகள் போல் ஒடுகத்தூருக்கு டிக்கெட் எடுத்தனர். பஸ் பாக்கம்பாளையம் வந்ததும் பயணிகளோடு ஒரு வாலிபரும் பஸ்சில் ஏறினார். பஸ் ஒடுகத்தூர் சென்றதும் அந்த வாலிபர் டிரைவரிடம் சென்று மஞ்சள் பையை வாங்கிய போது மாறுவேடத்தில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் பாக்கம்பாளையத்தை சேர்ந்த மைக்கேல் என்கிற மகேந்திரன் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.