கட்டுமான பணி நடந்தபோது விபத்து: துபாயில் பாலம் இடிந்து 5 தமிழர்கள் பலி, மேலும் 2 இந்தியர்கள் உயிர் இழந்தனர்
துபாயில் கட்டப்பட்டு வந்த புதிய மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உள்பட 7 இந்தியர்கள் இறந்தனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த பயங்கர விபத்து பற்றிய விவரம் வருமாறு:- அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் கட்டிடம் கட்டும் வேலையும் செய்கிறார்கள். துபாயின் மரினா பகுதியில் உள்ள சுபோக் ரோட்டில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் பாதி அளவில் கட்டப்பட்டு இருக்கிறது. நேற்று கட்டுமான வேலை நடந்தது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கட்டுமானத்துக்கு தேவையான இரும்புக்கம்பிகளை கிரேன் மூலம் தூக்கினார்கள். இதில் அந்த கிரேன், பாலத்தின் மீது வேகமாக இடித்தது. இதனால் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 7 இந்தியர்கள் பலியானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1. ஆர். மோகன் லட்சுமணன் 2. ஏ. கோவிந்தன் 3. மதியழகன் 4. கார்த்திக் 5. ஷாஜகான் (இவர்கள் அனைவரும் தமிழர்கள்) 6. சுரேந்திர சிங்( பாட்னா) 7.பி. ஜெகதீஷ்(லக்னோ).
ஷாஜகான் இறந்தவர்களில் ஒருவரான ஷாஜகான்( வயது 38), மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும் 3 மகன்களும் இருக்கிறார்கள். மற்றொருவரான மதியழகன் (28), தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே உள்ள காவாரப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர். பி.ஏ.பட்டதாரியான இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். உயிர் இழந்த கார்த்திக், திருமணம் ஆகாத 21 வயது வாலிபர். திண்டுக்கல்லை அடுத்த நத்தம் அருகே உள்ள மூங்கில் பட்டியை சேர்ந்தவர்.
24 பேர் காயம்
துபாய் விபத்தில் 24 பேர் காயம் அடைந்தனர். அவர்கள், அருகே உள்ள ரஷீத் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. காயம் அடைந்தவர்களில் அனேகம் பேர் தமிழர்கள்.
காயம் அடைந்த தமிழர்
பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு, காயம் இன்றி தப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் கூறியதாவது:- நாங்கள் வாடே ஆதம் கட்டுமான தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறோம். இந்த நிறுவனத்தின் மூலம் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
விபத்து நடந்தபோது, பாலம் திடீர் என்று பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. நானும், எனது அருகே நின்றவர்களும் அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் அருகே நின்ற ஒரு தொழிலாளி, இடிபாடுகளில் சிக்கி இறந்து விட்டார். இந்த சம்பவம் என் கண் முன்னே நடந்தது. அதை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு முத்து ராஜ் கூறினார்.
போலீஸ் அதிகாரி
இந்த சம்பவம் பற்றி துபாய் தலைமை போலீஸ் அதிகாரி தாகி கடபா தமீம் கூறுகையில், “இந்த விபத்துக்கு கிரேன் ஆபரேட்டர் தான் காரணம். இதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்றார். சம்பவ இடத்துக்கு இந்திய தூதரக அதிகாரிகளும் சென்று விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரிக்கும் சென்று காயம் அடைந்த இந்தியர்களை பார்த்து, பெயர் விவரம் சேகரித்தனர். இதுபற்றி இந்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இறந்த இந்தியர்களின் விவரம் சேகரித்து வருகிறோம். அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்வோம்” என்றார்.
காண்டிராக்ட் நிறுவன அதிகாரி நசூத் கூறுகையில், “இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு 120 மாத சம்பளம் இழப்பீட்டு தொகையாக கொடுக்கப்படும்” என்றார்.