நாக் ரவிக்கு ‘க்ளீன் சிட்’!
மச்சக்காரன் படத்தை திருட்டு விசிடியாக மாற்ற விநியோகஸ்தர் நாக் ரவி முயற்சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நாக் ரவிக்கு ஆதரவாக மாறியுள்ளது. நாக் ரவியைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், நடிகை சினேகாவுக்கும் திருமணம் நிச்சயமானதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான புகைப்படங்களையும் ரவி வெளியிட்டார். ஆனால் சினேகா மறுத்தார். பின்னர் இதுதொடர்பாக சினேகா நீதிமன்றத்தை நாடவே, நாக் ரவி சினேகா தொடர்பான பேச்சுக்களை நிறுத்தினார். அத்தோடு இந்த விவகாரம் முடிந்தது. அதன் பின்னர் நாக் ரவி வேறு ரூபத்தில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி செய்வது, நிதிச் சிக்கலில் தொக்கி நின்ற தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்க உதவுவது என தமிழ் சினிமாவில் கால் பதிக்க ஆரம்பித்தார். நாக் ரவியின் உதவிக் கரத்தால் பல சிறு பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்திலிருந்து மீண்டனர். இதையடுத்து பட விநியோகத்தை பெரிய அளவில் மேற்கொள்ள ஆரம்பித்தார் நாக் ரவி. படத் தயாரிப்பிலும் ஈடுபடத் திட்டமிட்டார்.
நாக்ரவி ஆரம்பித்த இன்சைட் என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் சமீபத்தில்தான் தனது முதலாவது ஆண்டைப் பூர்த்தி செய்தது.
கார்பரேட் நிறுவன அளவுக்கு பெரிய லெவலில் தனது பிசினஸை சென்னையில் நடத்தி வந்தார் ரவி. இந்த நிலையில்தான் திருட்டு விசிடி தயாரித்தார் என்ற பெரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஜீவன், காம்னா நடித்துள்ள, தமிழ்வாணன் இயக்கியுள்ள மச்சக்காரன் படத்தை வெளிநாடுளில் திரையிடும் உரிமையை நாக் ரவி பெற்றிருந்தார். இதற்காக அவருக்கு 7 பிரிண்டுகள் கொடுக்கப்பட்டன. அந்த பிரிண்டுகளுடன் சிங்கப்பூர் செல்ல கிளம்பிய நாக் ரவி, ஒரு பிரிண்ட்டை மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டருக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அங்கு போய் திருட்டு விசிடிக்கு மாற்ற முயன்றாராம். இதையடுத்து அங்கு விரைந்து வந்த மச்சக்காரன் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஜீவன் உள்ளிட்டோர் வந்து கையும் களவுமாக நாக் ரவியைப் பிடித்ததாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் நந்தகோபால், நாக் ரவியைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். ஆனால் அவர்களின் அடியிலிருந்தும், பிடியிலிருந்தும் தப்பிய ரவி அங்கிருந்து ஓடி விட்டார்.
அவரது விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரையும் மச்சக்காரன் படக்குழுவினர் சரமாரியாக அடித்து சேதப்படுத்தி விட்டனர். பிரிவியூ தியேட்டரும் இந்த தாக்குதலிருந்து தப்பவில்லை. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பிரிவியூ தியேட்டர் மேலாளர் ஏக்நாத்தும், ஆபரேட்டரும் கூட அடியிலிருந்து தப்பவில்லை.
நாக் ரவி விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அறிய நாக் ரவியைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது அலுவலகமும் மூடிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நாக் ரவியே நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். தனது தரப்பு நியாயத்தை அவர் விளக்கினார். ரவி கூறுகையில், நான் திருட்டு விசிடி தயாரிக்கவில்லை. மச்சக்காரன் படத்தின் ஓவர்சீஸ் உரிமையை நான் பெற்றுள்ளேன். இதற்காக 7 பிரிண்டுகள் போடப்பட்டன.
அதில் நவம்பர் 6ம் தேதி, 2 பிரிண்டுகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. 4 பிரிண்டுகள் மலேசியாவுக்கும் அனுப்பப்பட்டன. இன்னொரு பிரிண்டை அடுத்த நாள் காலை (7ம் தேதி) சிங்கப்பூருக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தேன்.
என்னிடம் முதல் பிரதி நவம்பர் 4ம் தேதி தரப்பட்டது. அதை நானே ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மலேசியாவுக்கு கொண்டு சென்றேன். திருட்டு விசிடி தயாரிக்கும் எண்ணம் எனக்கிருந்தால், அதை நான் மலேசியாவிலேயே செய்திருக்கலாமே?
எனது நண்பர்களுக்காக தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் படத்தைப் போட்டுக் காட்டினேன். நான் செய்த தவறு, ஓவர்சீஸ் உரிமை பெற்ற பிரதியை திரையிட்டதுதான்.
சம்பவம் நடந்த நாளில் எனது செல்போனை நான் சுவிட்ச் ஆப் செய்திருந்தேன். இதனால் நான் தலைமறைவாகி விட்டதாக கருத்து எழுந்து விட்டது. உண்மையில் நான் அன்று மும்பையில் வேறு பணியில் இருந்தேன்.
மச்சக்காரன் படத்தை நான் எந்தக் கேமராவிலும் படம் பிடிக்கவில்லை. இதுதொடர்பாக மச்சக்காரன் படத் தயாரிப்பாளர் கூறியுள்ள புகார் பொய்யானது என்றார் நாக் ரவி.
இதற்கிடையே, நாக் ரவி தவறு செய்யவில்லை என்று போலீஸாரும் கூறி விட்டனர். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத் தரப்பில் கூறுகையில், விசாரணையில், நாக் ரவி திருட்டு விசிடி எதுவும் தயாரிக்கவில்லை என்று தெரிய வந்தது. தேவி ஸ்ரீதவி பிரிவியூ தியேட்டரில் திருட்டு விசிடி தயாரிக்கும் வசதி எதுவும் இல்லை.
தவறு செய்வதாக இருந்திருந்தால் அதை மலேசியாவிலேயே நாக் ரவி செய்திருக்கலாம். எனவே அவர் மீதான புகார் உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது என்றனர்.
இந்த நிலையில் மற்றும் ஒரு திருப்பமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலும் நாக் ரவிக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. இன்று நாக் ரவி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனை சந்தித்தார். அப்போது சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியனும் உடன் இருந்தார்.
இன்று நாக் ரவி, மச்சக்காரன் தயாரிப்பாளர் நந்தகோபாலை வரவழைத்து தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண முயற்சிக்கவுள்ளது.
நாக் ரவி விவகாரத்தில் சில அரசியல் புள்ளிகள் தலையிட்டு அவரைக் காப்பாற்றி இருப்பதாகவும் ஒரு பேச்சு கோலிவுட்டில் வலம் வந்து கொண்டுள்ளது.