இலங்கை பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில் ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர்
இலங்கையில், பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர் நடைபெற்றுவரும் நிலையில், பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இலங்கையில், கடந்த வாரம் நடைபெற்ற விமான தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலியானார். அதைத்தொடர்ந்து, விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து மிகப்பெரிய தாக்குதல் நடைபெறலாம் என்று இலங்கையில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் உஷார் நிலையில் உள்ள ராணுவம், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே தினசரி கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகள் இன்னும் பெரிய அளவில் அதிரடி தாக்குதலில் ஈடுபடவில்லை. இந்த நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ராஜபக்சே நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில் ராணுவத்துறைக்கு ஏறத்தாழ 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையின்போது 2 மணி நேரம் பேசிய ராஜபக்சே, “தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை. தீவிரவாதத்தை ஒழிக்காமல், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமுடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, முகமாலையில் இருந்து கிலாலி வரை எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே விடுதலைப்புலிகளுக்கு எதிராக விரிவான தாக்குதல் நடைபெற்றது. இதில், விடுதலைப்புலிகள் தரப்பில் 52 பேரும், ராணுவ தரப்பில் 11 பேரும் பலியானதாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.
ஹெலிகாப்டர் மற்றும் டாங்கிகளின் பக்கபலத்துடன் கனரக பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டதாகவும் 2 மணி நேரம் நீடித்த இந்த மோதலில், ராணுவத்தினர் 20 பேர் பலியானதாகவும் 100 பேர் காயம் அடைந்ததாகவும், தங்கள் தரப்பில் ஒருவர் மட்டுமே பலியானதாகவும் விடுதலைப் புலிப்படைகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்து இருக்கிறார்.
வவுனியா-மன்னார்
யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து அவர்களின் பழைய நிலைக்கே பின்வாங்க வைத்துவிட்டதாகவும், கிளிநொச்சியில் இருந்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறி இருக்கிறார். இரு தரப்பினரும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதால், உண்மை நிலவரம் பற்றி தெளிவாக தெரியவில்லை என்று போர்முனை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
யாழ்ப்பாணம் தவிர, வடக்கு மாவட்டமான வவுனியா, மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே தீவிர மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் விடுதலைப்புலிகள் தரப்பில் 8 பேர் வரை பலியாகி இருக்கலாம், அல்லது படுகாயம் அடைந்து இருக்கலாம் என்றும் ராணுவம் அறிவித்து உள்ளது.