ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

Read Time:3 Minute, 53 Second

நான்கு கால்கள், நான்கு கைகளுடன் ஒட்டிப் பிறந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு, பெங்களூரு மருத்துவமனையில் நேற்று டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பிரித்தனர். இந்த குழந்தை நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்புபூனம் தம்பதியின் இரண்டு வயது பெண் குழந்தை லட்சுமி. அக்குழந்தையின் உடலின் கீழ்பகுதியில் வளர்ச்சி அடையாத நிலையில், முகம் மற்றும் முக்கிய பகுதிகள் இல்லாமல் ஒரு குழந்தை ஒட்டிப் பிறந்துள்ளது. இதனால், அந்த குழந்தை நான்கு கைகள், நான்கு கால்களுடன் வித்தியாசமாக தோற்றமளித்தது. பெங்களூரில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் டாக்டர் ஷரன் பாட்டீல் தலைமையில் நரம்பியல் சிகிச்சை குழு, நேற்று முன்தினம் அந்த குழந்தையை பிரிப்பதற்கான முதல் கட்ட அறுவை சிகச்சையை மேற்கொண்டது. மொத்தம் 36 டாக்டர்கள் கொண்ட குழு, தொடர்ந்து 27 மணி நேரம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, குழந்தை லட்சுமியை, அதன் இன்னொரு உடல் பகுதியிலிருந்து பிரித்தெடுத்தனர். முதுகெலும்பு, இடுப்பெலும்பு என ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தனர். லட்சுமியின் உடலில் இருக்க வேண்டிய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று லட்சுமியின் உடலிலும், மற்றொன்று, முழு வளர்ச்சியடையாத பகுதியிலும் இருந்தது. இரண்டு சிறுநீரகங்களையும் லட்சுமியின் உடலில் டாக்டர்கள் பொருத்தினர். லட்சுமியின் உடலில் உள்ள உறுப்புகள் எதற்கும், எந்த பாதிப்பும் வராமல் மிகக் கவனமாக இந்த சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது குறித்து டாக்டர்கள் குழு தலைவர் ஷரன் பாட்டீல் கூறியதாவது:சிகிச்சையின் போது, முதலில் குழந்தையின் வேண்டாத பாகங்களை பிரித்து எடுத்தோம். பின்னர், குழந்தை லட்சுமியின் பாகங்களை ஒன்றிணைப்பதற்கான செயலில் ஈடுபட்டோம். இதை மிகவும் கவனத்துடன் மேற்கொண்டோம். பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் குழந்தையின் பாகங்கள் சேர்க்கப்பட்டன. லட்சுமியின் உடலுக்குத் தேவையான எலும்புகள், பிரித்தெடுக்கப்பட்ட, செயல்படாத பகுதியிலிருந்து எடுத்துச் சேர்க்கப் பட்டன. நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த முயற்சி மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. தற்போது, குழந்தை லட்சுமி மற்ற குழந்தைகளைப் போல நலமாக உள்ளார். ஒரு குழந்தையை உருவாக்குவது போல் இந்த சிகிச்சை அமைந்தது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைய வாழ்த்திய நாட்டு மக்கள் மற்றும் குழந்தை லட்சுமியின் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாட்டீல் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஏழு ரூபாய் பால் பாக்கெட்டுக்கு அடித்தது ரூ.5 லட்சம் “ஜாக்பாட்”
Next post பிரதமர் மன்மோகன்சிங் ரஷியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் 11-ந்தேதி புறப்படுகிறார்