த.தே.கூ காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்!!!
நடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வு, முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தினை நடைமுறைப்படுத்துவது போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
அதேபோன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் போதும், அனைவரும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதே மக்கள் ஏற்றுக்கொண்ட விடயம் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
தனித்துவமாக தனி ஒரு கட்சி மட்டும் தன்னிச்சையாக செயற்படுவது சரியான வழிமுறை அல்ல என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மக்கள் கூட்டாக இயங்க ஆணை கொடுத்திருக்கும் தருணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக இணைந்து முடிவுகளை எடுத்தால், இணைந்து செயற்படுகின்ற கட்சிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.
அவ்வாறு இல்லாமல் ஒரு கட்சி மட்டும் தானாக முடிவுகளை எடுப்பது கட்சிகளுக்கும் மக்களுக்கும் இருக்கும் நம்பிக்கையினை சீர்குலைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உள்ளக விசாரணை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைக் கொண்டு வராது. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய பாராளுமன்ற குழுவினர் காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டுமென சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் உள்ள விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்கி கீழ் மட்டத்தில் இருக்க கூடியவர்களுக்கு தண்டனையினை கொடுக்க முடியும்.
முக்கியமாக குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்பது கேள்விக்குறியான விடயம். இதேவேளை, உள்ளக விசாரணை ஒருவருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்துவிடும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை விட, தமிழ் மக்களின் பிரச்சினை என்ன, குற்றங்கள் ஏற்படாது எவ்வாறு தடை செய்வது, அதற்கு ஏற்றவாறு, இலங்கையில் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது போன்ற விடயங்களை சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செய்ய முடியும்.
சர்வதேச நாடுகள் பலதில் விசாரணை ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சர்வதேச புலம்பெயர் மக்கள், சர்வதேச நாடுகளின் அணுசரணையுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உந்து சக்தியாக இருக்குமென நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது இருக்கின்ற நிலமை மாற்றப்பட வேண்டும். புதிதாக வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினர் காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
மீள்குடியேற்றம் மற்றும் வலி. வடக்கில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது போன்ற விடயங்களும் இருக்கின்றதனால், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், என, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Average Rating