165 பேரை பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதல்: பின்லேடன் மகனின் வேலை என பெனாசிர் குற்றச்சாட்டு

Read Time:3 Minute, 45 Second

பாகிஸ்தானில் 165 பேரை பலி கொண்ட தற்கொலைப்படை தாக்குதல், பின்லேடன் மகனின் வேலை என்று பெனாசிர் குற்றம் சாட்டி உள்ளார். 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த மாதம் 18-ந் தேதி பாகிஸ்தான் திரும்பினார். அன்று அவர் கராச்சி நகரில் ஊர்வலமாக சென்றபோது, அவரை கொலை செய்யும் திட்டத்துடன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 165 பேர் பலியானார்கள். பெனாசிர் காயமின்றி உயிர் தப்பினார். இந்நிலையில், பெனாசிர், தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக, கடந்த 1-ந் தேதி துபாய் சென்றார். தற்போது அங்கே உள்ள அவர், அங்குள்ள ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- நோய்வாய்ப்பட்டு உள்ள எனது தாயாரையும் மற்றும் குடும்பத்தினரையும் பார்ப்பதற்காகத்தான், நான் துபாய் வந்துள்ளேன். ஆனால் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையோ, ராணுவ சட்டமோ அமல்படுத்தப்படலாம் என்று பயந்துதான் நான் துபாய்க்கு வந்து விட்டதாக வதந்தி பரப்பப்படுகிறது. பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டால், முஷரப்புடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். முஷரப் ராணுவ தளபதி பதவியில் நீடித்தால், ராணுவத்தினரின் மன உறுதி சீர்குலைந்து விடும். எனவே, அவர் ராணுவ தளபதி பதவியில் நீடித்தால், அதை எதிர்ப்பேன்.

பின்லேடன் மகன் வேலை

என்னை கொலை செய்யும் நோக்கத்துடன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடனின் வேலையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.

எனவே, இந்த தாக்குதல் குறித்து விசாரிக்க வெளிநாடுகளின் உதவியை பாகிஸ்தான் அரசு கேட்டுப்பெற வேண்டும் என்று கூறுகிறேன். ஸ்காட்லாந்து யார்டு மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. ஆகியவற்றின் துப்பறியும் நிபுணர்களை வரவழைக்க வேண்டும். ஆனால் இந்த தாக்குதலில் அதிபர் முஷரப்பின் தொடர்பை நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

தீவிரவாதிகளின் பிடி

தீவிரவாதிகளின் பிடியில் பாகிஸ்தான் சிக்கி தவிக்கிறது. பாகிஸ்தானை காப்பாற்ற, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது அவசியம். என் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, ஜனநாயகத்தை நிலைநிறுத்த போராடுவது என்ற எனது உறுதிப்பாடு மிகவும் தீவிரமாகி விட்டது. இவ்வாறு பெனாசிர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹைதி தீவுக்கு அமைதியை நிலைநாட்ட சென்றபோது பெண்களை கற்பழித்த இலங்கை ராணுவத்தினர் மீது ஐ.நா. நடவடிக்கை: கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…