ரூ.2½ லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: கைதான தந்தை– 5 பேர் ஜெயிலில் அடைப்பு!!
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(23).
இவர்களுக்கு 5 வயது, 3 வயது, 1 வயது என 3 பெண் குழந்தைகள் உள்னனர். ராமன் மனைவிக்கு தெரியாமல் கடைசி குழந்தை சாலினியை ரூ.65 ஆயிரத்துக்கு விற்று விட்டார். ஆனால் குழந்தை தொலைந்து விட்டதாக நாடக மாடினார். இது மீனாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராமனை பிடித்து விசாரித்தனர். இதில், ராமன் கோவையை சேர்ந்த புரோக்கர் குமாரசாமி மூலம் கன்னியாகுமரி மாவட்டம் பருத்திவிளையை சேர்ந்த புரோக்கர் தங்கசாமியிடம் (48) குழந்தையை விற்றதும், தங்கசாமி மார்த்தாண்டத்தை அடுத்த ஆற்றூரை சேர்ந்த நர்சு ரீட்டா(35) மூலம் தேங்காப்பட்டணத்தை சேர்ந்த தம்பதி விஜயகுமார் (42), ராணி பிரபாவிடம்(38) விற்றும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ராமன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தை சாலினியை மீட்டு மீனாவிடம் ஒப்படைத்தனர். விஜயகுமார்–ராணி பிரபா தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லை. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்ற போது இவர்களுக்கு நர்சு ரீட்டாவின் பழக்கம் கிடைத்தது. அவர் இவர்களிடம் இருந்து நிறைய பணத்தை வாங்கி விடலாம் என கருதி புரோக்கர் தங்க சாமி மூலம் பெண் குழந்தையை வாங்கி தருவதாக கூறி ரூ.2½ லட்சம் பெற்றுள்ளார்.
பின்னர் புரோக்கர்களின் திட்டப்படி ராமனை, மனைவி குழந்தைகளுடன் கன்னியா குமரிக்கு சுற்றுலா வரவழைத்து அங்கு குழந்தை தொலைந்து விட்டதாக நாடகமாகடி உள்ளனர். இதை மீனா நம்பி விட்டார். பின்னர் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்து விட்டு ஊருக்கு திரும்பி விட்டனர். என்றாலும், திடீரென ராமன் கையில் ஆயிரக்கணக்கில் பணம் புரண்டது மீனாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சம்பவத் தன்று குடிபோதையில் வந்த ராமனிடம் நிறைய பணம் இருப்பது பற்றி மீனா கேட்ட போது அவர் குழந்தையை விற்று விட்டதை உளறி விட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த மீனா போலீசில் புகார் செய்ததால் 6 பேரும் சிக்கிக் கொண்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 317–12 வயதுக்குட்பட்ட குழந்தையை நிராயுதமாக தவிக்க விட்டு செல்லுதல்), 370(4)– தாய் விருப்பத்துக்கு விரோதமாக குழந்தையை விற்றல், வாங்குதல், பிறருக்கு கொடுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் கோவை ஜே.எம்.6–வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய புரோக்கர்கள் குமார சாமி, தங்கசாமி மற்றும் நர்சு ரீட்டா ஆகியோர் இதுபோன்று வேறு குழந்தைகளை வாங்கி விற்பனை செய்திருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரிக்க 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படி காவலில் எடுக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
Average Rating