சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த 25 வார கரு கலைக்கப்பட்டது!!
இந்திய நீதித்துறை சார்ந்த மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் கற்பழிக்கப்பட்டதால் கருத்தரித்த 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்திருந்த 25 வார கரு நேற்று சட்ட அனுமதியுடன், பாதுகாப்பான முறையில் கலைக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற ஒரு டாக்டரிடம் சென்றிருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்துகளை கொடுத்த டாக்டர் அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம் இங்கு நடந்த சம்பவம் பற்றி வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டிய அந்த டாக்டரின் பிடியில் இருந்து தப்பிய அந்த சிறுமி, இதுதொடர்பாக யாரிடமும் கூறாமல் ரகசியமாக காத்து வந்தார்.
மூடிய வாய் வழியாக வெளியேறாத ரகசியம், நாளடைவில் வீங்கிய வயிற்றின் வழியாக வெளியாக தொடங்கியது. இதையடுத்து, அந்த சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று அவளது தந்தை குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சிறுமியின் வயது, மற்றும் கருவின் வளர்ச்சி நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்ட நீதிபதிகள் இந்த கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
இந்த பிரசவத்துக்கு ஏற்ற பக்குவப்பட்ட நிலையில் சிறுமியின் உடல்நிலை இல்லை. எனவே, இந்த பிரசவத்தின்போது அவள் உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் அச்சுறுத்தியதால் மீண்டும் இதே கோரிக்கையுடன் சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.
அதற்குள் அவளது வயிற்றில் வளரும் கரு 25 வார குழந்தையாக உருவெடுத்து விட்டது. இந்திய சட்டதிட்டங்களுக்குட்பட்ட வகையில் 20 வாரம் வரையிலான கருவை மட்டுமே அதிகாரபூர்வமாக, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்ய முடியும்.
ஆனால், இந்த சிறுமி விவகாரத்தில் அதையும் கடந்து கரு மேலும் ஒருமாத கால வளர்ச்சி அடைந்து விட்டதால், சிறுமியின் உயிரை கருத்தில் கொண்டு ஒரு மனோதத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறியல் நிபுணரின் ஆலோசனைப்படி கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம்அனுமதி அளித்தது. இதற்காக, ஒரு மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, நேற்று அகமதாபாத் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 5 டாக்டர்கள் கொண்ட குழுவினர் அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் கருவை கலைத்து, அவளது வயிற்று பாரத்துடன், மன பாரத்தையும் குறைத்தனர்.
சுமார் 24 மணிநேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்த கருக்கலைப்பு சிகிச்சை நிறைவு பெறலாம் என டாக்டர்கள் கருதி இருந்த வேளையில் அந்த சிறுமியின் மனோதிடத்தாலும், அவள் அளித்த ஒத்துழைப்பாலும் 12 மணி நேரத்துக்குள் இந்த சிகிச்சை நடந்து முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றில், 25 வாரங்கள் வளர்ந்த கரு.., அதுவும் ஒரு மைனர் சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கரு, சட்டபூர்வமான முறையில் கலைக்கப்பட்டது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating