ஓற்றை ஆட்சிக்குள் இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது!!

Read Time:6 Minute, 8 Second

18683984Untitled-1தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு, அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கை பத்திரிகைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு இடையில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் கேட்டு, போராடியதற்கும், இதற்கும் எதுவித வித்தியாசமும் இல்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கடும் போக்கினை கையாள ஆரம்பித்துள்ளதாகவும், இது சரியான விடயம் இல்லை என்றும் தென்னிலங்கை பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

அதேநேரம், வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி கேட்டிருந்தார்கள். தமிழ் மக்கள் நீண்டகாலமாக தன்னாட்டுக்காக போராடிய தேசிய இனம்.

தன்னாட்டுக்காக போராடியதென்பது தந்தை செல்வா காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

எமது முயற்சிகள் அனைத்தும் அரசாங்கத்தினால் மறுதளிக்கப்பட்டு விட்டது. மாற்றுத் தீர்வுகள் இல்லை என்ற அடிப்படையில் தான் செல்வநாயகத்தால், தமிழ் மக்கள் இழந்து போன இறையாண்மையினை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மிக நீண்டகாலமாக போராடி வந்தார்கள். பலமான இராணுவ அமைப்பாக இருந்து போராடி வந்தார்கள்.

போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதே தவிர, இனப் பிரச்சினை தீர்வுக்கு கொண்டு வரப்படவில்லை.

இனப் பிரச்சினைக்கான தீர்வினை தற்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றது.

அதில் முதலாவதாக வட, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு இருக்கின்ற சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலும், இறையாண்மை அடிப்படையிலும், வட, கிழக்கு இணைந்த பிரதேசத்தில், தமிழ் மக்களின் பாதுகாப்பு, தமிழ் மக்களின் நிலம், உள்ளிடங்கிய சுயாட்சியாக இருக்க வேண்டுமென்பது மட்டுமன்றி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் சொல்லியிருக்கின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற முற்போக்கு கட்சிகளும் சரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி எமது தீர்மானம் என்பது பிழையானது ஒற்றை ஆட்சிக்குள் தான் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சொல்லப்படுகின்றது.

ஓற்றை ஆட்சிக்குள் இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது. 13 வது திருத்தத்திற்குள் குறைந்த பட்ச பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் இருக்கின்றது.

இது கடந்த கால அரசுகளினால் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அதனால் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வினை எட்ட முடியாதென்றும் அதிகார பகிர்வினை பெற்றுக்கொள்ள முடியாதென்பதனையும் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

தனி நாட்டிற்காக போராடியவர்கள் இறுதியில் அதனை கைவிட்டு விட்டு, இணைப்பு ஆட்சிக்குள், சமஷ்டி அரசியலமைப்புக்குள் இந்த பிரச்சினையினை தீர்க்க முடியுமென்றும் சொல்வதாக அவர் கூறினார்.

இதனையும் இந்த அரசாங்கம் செய்ய மறுக்குமாக இருந்தால், நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தீர்விற்கு இந்திய அரசாங்கமும், உலக நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வைத்திருக்கின்ற கோரிக்கைகளை இந்தியாவும் உலக நாடுகளும், அதன் நியாய தன்மைகளை புரிந்து கொண்டு, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு எமது கோரிக்கைகள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அனைத்து கோரிக்கைகளும், இறையாண்மை மற்றும் சுயாட்சியின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுசிலுக்கு எதிராக FCID செல்கிறார் கெமுனு!!
Next post பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவருக்கு மீண்டும் விளக்கமறியலில்!!