ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்!!
இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தைப் பகுதியில் சனிக்கிழயன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சி, டெலோ, ஈபிஆர்எல்ஃப், புளொட் ஆகிய நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.
தமிழ் மக்கள் தனித் தேசிய இனம், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் – முஸ்லிம் தாயகப் பிரதேசம், தேசிய இனம் என்ற வகையில் உரித்தான சுயநிர்ணய உரிமை, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எந்தவொரு மக்கள் மீதும் முரண்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தாத அதிகாரப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வை தாம் கோருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
அதிகாரப் பகிர்வு என்பது காணி, சட்டம் – ஒழுங்கு, சட்ட அமலாக்கம், தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வளங்களைத் திரட்டிக் கொள்ளக் கூடியதாகவும், நிதி அதிகாரம் கொண்டதாகவும் அதிகார பகிர்வு இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறாதவர்களுக்கு அவர்களுக்கு உகந்த துறையில் கல்வியைத் தொடர்வதற்கான மாற்று வழிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2012, 2013ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீரமானங்களின் பரிந்துரைகளும், வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள சர்வதேச அறிக்கையின் பரிந்துரைகளும், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.
வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இராணுவக் குறைப்பு, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளுடன் கூடிய கௌரவமான மீள் குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போயுள்ளவர்கள் விவகாரத்திற்கு அந்தக் குடும்பங்களின் துயரங்களைக் கையாளவும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட விமோசனத் திட்டங்கள் ஆகியவை தேவை என இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள சுமார் ஒரு இலட்சம் பேர் உள்ளிட்ட இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருப்பவர்கள் கௌரவமாக தாயகம் திரும்புவதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டுமென்றும் இந்தத் தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது.
அத்துடன், விதவைகளுக்கான வாழ்வாதாரத் திட்டம், முன்னாள் போரளிகளுக்கான நலத் திட்டங்கள், மரபுவழி சமூகக் கட்டமைப்புக்களின் சிதைவு காரணமாக ஏற்பட்டுள்ள சமூக விரோதச் செயற்பாடுகள் என்பவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் தேவை என்பதை அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு, பங்களிப்பு என்பன அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ள இந்த தேர்தல் அறிக்கையை ஏற்று, அவற்றில் தெரிவிக்கப்பட்டவற்றை அங்கீகரித்து ஆணை வழங்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்தத் தேர்தல் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிட்டு வைத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
Average Rating