ரெயில் கொள்ளைக்கு வழிகாட்டிய காக்கா முட்டை: கைதான 5 கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!
ஹவுரா – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 12–ந்தேதி அதிகாலை கொருக்குப்பேட்டை அருகில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.
அப்போது ரெயிலுக்குள் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் புகுந்த கொள்ளையர்கள். அங்கிருந்த கடற்படை வீரர் அஸ்லியை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த லேப்–டாப், ரூ.10 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பிடுங்கி சென்றனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அஸ்லி அசாம் மாநிலத்தில் கடற்படை வீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு சென்றுக்கொண்டிருந்த போதுதான் கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளானார்.
பலத்த காயம் அடைந்த அஸ்லி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் பற்றி துப்பு துலக்க ரெயில்வே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொள்ளையர்கள் பற்றி அஸ்லி கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் 50–க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
சண்முகம் (19), வினோத் குமார் (19), அஜித் என்ற வெள்ளை (20), இம்மானுவேல் பீட்டர் (20), அஜித் (21). இவர்கள் அனைவரும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள்.
கொள்ளையடித்த லேப்– டாப், செல்போன் எல்லாம் எங்கே? என்று அவர்களிடம் விசாரித்தபோது மூலக்கொத்தளம் சுடுகாட்டில் மறைத்து வைத்திருக்கிறோம் என்றார்கள்.
அதை கேட்டதும் போலீசாருக்கு அதிர்ச்சி. கொள்ளையடித்த பொருட்களை வழக்கமாக கொள்ளையர்கள் எங்காவது விற்று இருப்பார்கள் அல்லது யாரிடமாவது கொடுத்து மறைத்து வைத்திருப்பார்கள். அதை மீட்டு இருக்கிறோம்.
இது என்ன, புதுசா கதை விடுறானுங்க… என்று குழப்பத்துடனேயே சுடுகாட்டுக்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவர்கள் சொன்னபடியே ஒரு கல்லறைக்கு அருகில் பாலதீன் பையில் பாதுகாப்பாக பார்சல் பண்ணி குழிதோண்டி புதைத்து வைத்திருந்தார்கள்.
அதைமீட்ட போலீசாருக்கு ஆச்சரியம். இப்படியெல்லாம் எப்படிடா யோசிக்கிறீங்க…? என்று கேட்டார்கள்.
‘எல்லாம் காக்கா முட்டை’தான் சார் என்றான் ஒருவன்.
அதென்னடா காக்கா முட்டை? என்று கேட்ட போலீசாரிடம் அதான், ‘காக்கா முட்டை’ படம் சார். அதை பார்த்து தான் நாங்களும் இப்படி செய்தோம் என்றனர்.
ரெயிலில் தொலை தூரத்துக்கு பயணம் செய்பவர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்து இருந்தபடியே செல்போனில் ‘கேம்ஸ்’ விளையாடி கொண்டிருப்பார்கள். வெளியில் நிற்கும் சிலர் அவர்களை குறி வைத்து கட்டையால் கையில் அடிப்பார்கள். அவர்கள் கையில் இருந்து செல்போன் தவறி கீழே விழுந்ததும் எடுத்து செல்வார்கள். பறி கொடுத்தவர்களால் ரெயிலில் இருந்து இறங்கி வர முடியாது. இது கொள்ளையடிக்கும் சிறுவர்களுக்கு கொண்டாட்டமாகி விடும்.
–இதுதான் காக்கா முட்டை படத்தில் வரும் காட்சி.
இந்த காட்சிகள் சண்முகம், வினோத்குமார் கூட்டாளிகளின் மனதில் பொறிதட்ட வைத்தது. நாமும் இப்படி செய்தால் என்ன? என்று யோசித்தார்கள். களத்தில் இறங்கினார்கள்.
காக்கா முட்டை கற்று கொடுத்த பாடம் கைமேல் பலனை கொடுத்தது. பல விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பொருட்களை வேட்டையாடினார்கள்.
இவ்வாறு கிடைக்கும் பொருட்களை பாலிதீன் பையில் போட்டு மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கல்லறைகள் அருகில் புதைத்து வைப்பார்கள். அதன் அருகே அடையாளத்துக்கு கருங்கல் அல்லது செங்கல் போன்ற பொருட்களை போட்டு வைத்திருப்பார்கள்.
ரெயிலில் செல்போன்களையும், பொருட்களையும் இழப்பவர்கள் போலீஸ் கேசுக்கு அலைய முன் வருவதில்லை. இது கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாகி விடும்.
எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்ததும் சில நாள் கழித்து அவற்றை எடுத்து விற்பார்கள். அதில் கிடைக்கும் பணத்தில் குடிப்பது, பெண்களுடன் கூத்தடிப்பது என்று ஜாலியாக ஊர் சுற்றினார்கள்.
வெளியில் நின்று தட்டினால் ஆயிரக்கணக்கில்தான் கிடைக்கிறது. அதையே ரெயிலுக்குள் சென்று கைவரிசை காட்டினால் லட்சக்கணக்கில் பறிக்கலாமோ என்று எண்ணினார்கள்.
ஒரு முறை அப்படியும் செய்துதான் பார்ப்போமே என்று தங்கள் திட்டத்தை அரங்கேற்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டினார்கள்.
அதுவரை நல்லாத்தான் போய் கொண்டிருந்தது. ஆனால் ரெயிலில் முகமூடி கொள்ளை… கடற்படை வீரருக்கு அரிவாள் வெட்டு என்றதும் போலீஸ் வெகுண்டெழுந்தது.
அதன் விளைவாக கூண்டோடு மாட்டிக்கொண்டார்கள்.
ஒரு நிழல் காக்கா முட்டை இப்படி நிஜ சிறை கொட்டகையை அனுபவிக்க வைத்து விட்டதே என்று புழல் ஜெயிலுக்குள் மனம் புழுங்கி கொண்டிருக்கிறார்கள்.
Average Rating