மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன்- (கட்டுரை)!!

Read Time:14 Minute, 58 Second

timthumb (8)மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன்
தமிழ்த்தலைமைகளில் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கை பல அரசியல் பிரமுகர்களாலும், புத்திஜீவிகளாலும் தற்சமயம் விடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது.

தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்தத்தலைவர்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்மக்கள் ஏமாந்து அவர்களுக்கு வாக்குகளை அள்ளிப்போட்டார்கள். அதனுடைய விளைவு அந்தத்தலைவர்கள் பின்பு தங்களுக்கு வாக்களித்த மக்களைச் சந்திக்கவோ அல்லது தொகுதிப்பக்கம் தலைகாட்டவோ இல்லை.

மக்கள் சேவையே மகேசன் சேவையென வார்த்தைகளால் மட்டும் கூறிவிடமுடியாது. தமிழ்மக்களுக்கு உரிமை மட்டுமே பிரச்சினை அல்ல. அவர்களுக்கு இருக்கக்கூடிய பலதரப்பட்ட சிக்கல்களை ஆராய்ந்துநோக்கி அவர்களுக்கு உடனடித்தீர்வை வழங்கக்கூடிய தமிழ்த்தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கைதிகளின் விடுதலைக்காக பெருந்தொகைப்பணம் கேட்டு வழக்காடும் வழக்கறிஞர்களையும், அண்ணன் – தம்பி என குடும்ப அரசியல்வாதிகளையும், சித்தப்பன் – பெரியப்பன் என பங்காளிகளையும், தம்முடைய சக நண்பர்களை மட்டும் முன்னிலைப்படுத்தும் அரசியல் தலைமைகளே இன்று தமிழ்மக்களிடம் வேரூன்றி இருக்கின்றன.

மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மைதான். ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியாகியிருக்கின்றனர். எதிர்த்தரப்பினர் ஆளும் வர்க்கமாகியுள்ளனர்.

ஆனால் என்ன கொடுமையென்றால் மக்களினுடைய அடிப்படை வாழ்க்கையில் ஒரு பாரியமாற்றம் ஏற்பட்டு அவர்கள் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மக்களின் மனதை வெல்ல வேண்டுமென்ற தீவிர மனப்பாங்குடன் இருந்த சிங்கள அரசு வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்ற திட்டங்களின் மூலம் அபிவிருத்தி என்ற ரீதியில் கோடிக்கணக்கான டொலர்களை அள்ளிக்கொட்டி சடுதியான மாற்றத்தினை ஏற்படுத்தியது.

ஆனால் அங்கு போர்வடுக்களை மாற்றுவதற்குரிய வேலைகளை மஹிந்த அரசு செய்யவில்லை. இதன் காரணமாக வடமாகாண சபைத்தேர்தலில் மஹிந்த கூட்டணி வெல்லவில்லை.

மஹிந்தவினை அகற்ற வேண்டும் என மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் மைத்திரியைக் கொண்டுவந்தது. த.தே.கூ வில் ஏற்பட்ட பாரியமாற்றம் மைத்திரியையும் ரணிலையும் அரசில் இணைய வைத்தது. பின்பு த.தே.கூ வில் ஏற்பட்ட மாற்றம் ரணிலையும் மைத்திரியையும் விமர்சிக்க வைத்துள்ளது.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தென்னிலங்கையுடன் கூட்டணி சேர்ந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் மாற்றம் காரணமாக ஈ.பி.டி.பி யில் வீணைச்சின்னத்துக்கு மாறிப்போட்டியிடுகிறார்.

மஹிந்த, தேர்தல் தோல்வியுடன் ஆட்சியை ஒப்படைத்தது அவர் மனதில் ஏற்பட்ட திருப்பம். இதன் காரணமாக தென்னிலங்கையில் அரசியல் மாற்றம் முழுமையாக ஏற்பட்டது. அதனைவிட தற்சமயம் மஹிந்தவில் ஏற்பட்ட மாற்றம் அவரை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தூண்டியுள்ளது.

மஹிந்தவை ஒழிப்பதற்கு மைத்திரியைத் தயார் பண்ணிய மேற்குலக நாடுகள் தற்போது ரணில் – மஹிந்த எனப்பிரிந்துள்ளன.

இந்தியா, சீனா போன்ற நாடுகள், ரணில் அமெரிக்காவுடன் நிற்பதனால் மஹிந்த மைத்திரி சேர்க்கைக்காகப் பாடுபடுகின்றன.

மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாடுபட்ட த.தே.கூ தற்சமயம் மைத்திரிக்கு ஆதரவாகவும் அதேநேரம் ரணிலுக்கு எதிராகவும் தங்களுடைய அரசியல் மாற்றத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது.

டக்ளஸ் தேவானந்தா காலாகாலமாகத் தென்னிலங்கையுடன் ஒட்டி உறவாடி தமிழ்மக்களுக்கு பலசேவைகளைச் செய்திருந்தார். ஆனால் தமிழ்மக்கள் மனதில் அவர் தொடர்பாக சரியான மாற்றம் அப்போது வரவில்லை.

தற்சமயம் 6 மாதகாலத்தில் அவரிடம் ஏற்பட்ட மாற்றம் அவரை தனது சொந்தக் கட்சியில் தேர்தலிலி இறங்கத் தூண்டியுள்ளது. மக்கள் மனதில் இவர் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டால் இவருக்குரிய அங்கீகாரம் சரியான முறையில் வாக்குகளாக மாற்றம் பெற்றால் ஒரு உன்னத மாற்றத்தினை இந்தத்தேர்தல் ஏற்படுத்தும்.

தென்னிலங்கைத் தேர்தல் களத்தில் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீற் இல்லை என்பது கட்சித்தலைமையின் மனதில் ஏற்பட்ட மாற்றம்.

அவர்கள் வேறு ஒரு அணியில் களமிறங்க இருப்பது அவர்களுடைய தேர்தல் உத்வேகத்துக்கான மாற்றம்.

இம்முறை முஸ்லிம் தலைவர்கள் பலர் ஒற்றுமையைக்குலைத்து ஸ்ரீ.ல.சு.க கூட்டு மற்றும் ஐ.தே.க கூட்டு என இறங்குவது முஸ்லீம் மக்களுடைய வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படுத்துவதற்கே.

மஹிந்தவை மாற்றியது தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக வாக்குகள். தற்சமயம் மஹிந்தவுக்கு மாற்றம் ஒன்றை கொடுக்க போவதும் தமிழ் முஸ்லிம் மலையக வாக்குகள் தான். ஏனெனில் மஹிந்தவும் அவருடன் சேர்ந்துள்ளவர்களும் சிங்கள இனவாதத்தை கக்கியே அந்தந்தப் பிரதேசங்களில் வாக்குகளைப் பெறப்போகின்றார்கள்.

UNPஇதுமட்டுமல்ல ஐ.தே.க வும் ஒருமாற்றத்தை வேண்டிய தேர்தல் ஒன்றாக இதனைப் பார்க்கின்றது. ரணில் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் படுதோல்வியையே இதுவரைக்கும் ஐ.தே.க சந்தித்து வந்திருந்தது.

ஐ.தே.க வும் ஒருமாற்றத்தை விரும்பி சிலசந்தர்ப்பங்களில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசாவினை முன்னிலைப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் தற்சமயம்கூட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாங்கள் அமையப்போகின்ற அரசுடன் இணையமாட்டோம் என்ற நோக்கத்தினை த.தே.கூ பூடகமாக அறிவித்துவிட்டது.

முன்னர் தனித் தமிழ் ஈழம் என்றார்கள். பின்பு சமஸ்டிக்கு மாறினார்கள். அதன் பின்பு சுயாட்சி என்றார்கள். பின்பு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்கிறார்கள்.

மாறிமாறி மக்களை ஏமாற்றி இவ்வளவு காலமும் மக்கள் வாக்குகளைக் கொள்ளையடித்து நாடாளுமன்றக் கதிரைகளை அலங்கரித்தவர்கள் இன்று பல்வேறு கோணங்களில் மனம்மாறி அடுத்தவர் கோசங்களைத் தங்கள் கூற்றாக மாற்றி “மத்தியில் கூட்டாட்சி” “மாநிலத்தில் சுயாட்சி” “வடக்கு – கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு தீர்வு” என தேர்தல் மனமாற்றத்துடன் வந்துவிட்டனர் த.தே.கூ வினர்.

இதே கோசங்களை கடந்த காலங்களில் வைத்த அணியினரை ஒருபகுதி மக்கள் ஆதரித்திருந்தாலும் பலர் நிராகரித்திருந்தார்கள். ஆனால் ஒரு சடுதியான மாற்றமாக த.தே.கூ கூட இப்படிக் கூறியிருப்பது அவர்களிடம் உண்மையாகவே ஏற்பட்ட மாற்றமா? அல்லது தேர்தலுக்காகப் போடப்பட்ட மாறு வேடமா? என்ற சந்தேகங்களும் அவ்வப்போது எழுந்த வண்ணமே உள்ளன.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திற்குப்பின்பு அமைதிகாத்து வந்த முன்னாள் போராளிகள் போர்ச்சங்கு ஊதுவதனை மறந்து ஜனநாயகச் சங்கினை ஊதுவதற்கு தயாராகி விட்டார்கள்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிய அவர்கள் த.தே.கூ விடம் சீட் கேட்டனர். சம்பந்தரால் அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

tna.sum-ananthi-1a
முதலில் முன்னாள் போராளி அனந்திக்கு மறுக்கப்பட்ட சீட் இவர்களுக்கு கிடைக்குமா? என்ற வினா ஒருபுறமிருக்க, இவர்கள் கேட்டு த.தே.கூ மறுத்தது த.தே.கூ செய்த இமாலயத்தவறு. அதற்குப் போட்டியாக சுரேஸ்பிரேமச்சந்திரன் கொடுத்த வியாக்கியானம் த.தே.கூ வின் வாக்கு வங்கியில் இரண்டு மூன்று பெரிய கட்டுகளைச் சரித்து விட்டது என்றே கூறவேண்டும்.

தற்சமயம் சுயேட்சைக்குழுவாக வடக்கு – கிழக்கில் இறங்கும் முன்னாள் புலிகள் கடந்த காலத்தில் களமிறங்கிய டம்மி சுயேட்சைக்குழுக்கள் போல இருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

அவர்களுடைய முதலாவது எதிரியாக தமிழ்த் தேசியத்தை மறந்த கூட்டமைப்பினரை பார்க்கின்றார்கள்.

தற்சமயம் தமிழ்த் தேசியத்தை மறந்த கூட்டமைப்பு ஒருபுறமும், தமிழ்த் தேசியச் சாயத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அத்துடன் முன்னாள் புலிப்போராளிகளின் சுயேட்சைக்குழுவும் மும்முனைப் போட்டிக்குத் தயாராவது போலத் தெரிகின்றது.

வழமைபோல பழமைவாதச் சிந்தனை, புலி எதிர்ப்பு முகம், தமிழ்த் தேசிய எதிர்ப்பு முகம், கொள்கையற்ற நிலை ஆகியவற்றுடன் மிகவும் நலிந்த நிலையில் உதிக்க இருக்கின்ற உதயசூரியனும் த.தே.கூ வின் வாக்கு வங்கியில் ஒரு கண் வைத்துள்ளது.

ஏட்டிக்குப் போட்டியாக இம்முறை களமிறங்கவுள்ள இவர்களுக்கு ஒருகாலத்தில் துப்பாக்கியால் பதில் சொன்ன புலிகள் தற்சமயம் தேர்தல் மூலம் மக்கள் வாக்குகளால் பதில் சொல்லக் காத்துள்ளனர்.

புலிகளுடன் தொடர்ந்து மறைமுகமாக மோதி முதுகில் குத்திய த.தே.கூ வினருக்கு புலிகள் இந்தத்தேர்தலில் மிகக்கடினம் கொடுக்கவுள்ளனர்.

இது காலம் தந்த மாற்றம். இந்த மாற்றம் த.தே.கூ வினருக்குப் புலிகள் எப்படி கொடுத்தார்களோ அதேமாற்றம் அதேபுலிகளால் அவர்களுக்கு அழிவையே கொடுக்கப் போகிறது.

காலாகாலமாக ஒரு பெரிய எழுச்சியுடன் சிங்கள அரசுகள் தோன்றி எவ்வாறு தமிழர் உரிமைப் போராட்டத்தினை நசுக்க உதவினவோ. அவை எல்லாம் பல்வேறுபட்ட மாற்றங்கள் மூலம் தென்னிலங்கையிலே வலுவிழந்துள்ளன.

இதேபோல சிறுபான்மையினராகிய தமிழ் மக்களது வாக்குகளும் சிதைந்து போகாமல் இருக்க வேண்டுமெனின், தமிழர்களின் ஒற்றுமை வலுப்பெற வேண்டும்.

தமிழ்த்தலைவர்களே சிந்தியுங்கள். தயவுசெய்து உங்கள் தலைமையினை அடுத்த தலைமுறைக்கு விட்டுக்கொடுப்பதற்கு ஒரு மாற்றம் ஏற்படுத்துங்கள்.

நீங்கள் கூறும் ஆலோசனைகளின்படி இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்குங்கள்.

அரசியல் வேதமோதி பூதங்களை உருவேற்றாமல் நல்ல தேவர்களை அழைத்து மக்கள் பணி செய்வதற்கு வாய்ப்பளியுங்கள்.

முதலில் உங்களில் மனமாற்றம் ஏற்படட்டும். கட்சிக் கொள்கைகளில் நீங்கள் கொண்டுவந்த மாற்றம் போல… செயற்பாடுகளிலும் மாற்றம் வரட்டும்.

தென்னிலங்கையில் வெற்றிலையா, கதிரையா, மொட்டா, அன்னமா எனத்தடுமாறுவதுபோலத் தடுமாறாமல் மக்களுக்கு சேவை செய்த வேட்பாளர்களை இனங்கண்டு, அவர்கள் செய்த சேவைக்கு மதிப்பளித்து வாக்களித்து மீண்டும் மக்கள் தங்களைத்தாங்களே ஒருமாற்றம் மூலம் நல்வழிப்படுத்தும் காலம் வந்துவிட்டது.

காலம் மாறினாலும் கொள்கைகள் மாறக்கூடாது.

-இலங்கை வேந்தன்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகாசி அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: மாணவர் கைது!!
Next post ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!