புதிய பாதையை நோக்கி தமிழர் உரிமைப் பயணம்…. -ஸ்ரீ பரராஜசேகரன் (கட்டுரை)!!
அதிகாரம் என்பதை பலவாறு வேறுபடுத்தலாம். அதிலே மிகமுக்கியமானது மக்கள் வழங்கும் ஆணை அதிகாரம் மற்றும் தாமாகவே கையிலெடுக்கும் சர்வாதிகாரம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பத்தில் பல இயக்கங்களுடன் ஒரு இயக்கமாகத் துலங்கிய காலத்தில் அவர்களிடம் அதிகாரப்பலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
விடுதலைப்புலிகளின் அதிகார ஆசை அவர்களை மற்றைய இயக்கங்களை அழிப்பதற்கு தூண்டியது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளிடம் எந்தவொரு கட்டுக்கோப்பும் இருக்கவில்லை. அவர்களிடம் எப்போது சர்வவல்லமை பொருந்திய அதிகாரம் குவிந்ததோ அன்றே அவர்கள் எழுச்சி பெற்றார்கள்.
அவர்கள் சிங்கள அரசாங்கத்துடன் படைச்சமவலு மட்டுமல்ல அத்துடன் நிர்வாக ரீதியாகவும் சவால் விடுமளவிற்கு மிகவும் துணிச்சலுடன் காரியங்களைச் சாதித்தார்கள். அவர்களுக்கு அன்று உறுதுணையாக இருந்தவர்கள் இன்று அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடுவது வேறுகதை.
இராணுவப்பிரிவு, அரசியல்பிரிவு, நிதிப்பிரிவு, கல்விப்பிரிவு, ஊடகப்பிரிவு, முப்படை, பொலிஸ், நீதித்துறை என பிரபாகரன் என்ற ஜனாதிபதியின் கீழ் பல அமைச்சுக்கள் இருந்தன.
ஒருநாடு இருதேசம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கைத் திருநாட்டில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்ந்த இடங்கள் தமிழ் தேசமாகவும், சிங்களவர் செறிந்து வாழும் இடங்களாகிய மற்றைய மாகாணங்கள் சிங்கள தேசமாகவும் வகைப்படுத்தப்பட்டன.
ஆனால் இலங்கை அரசு தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு இனங்களையும் தனது சொந்த மக்களைப் போலவே பார்த்தது. அதற்குதாரணமாக தமிழ் அலுவலர்களுக்குரிய சம்பளம் இலங்கை அரசினாலேயே வழங்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் கூட வழங்கப்பட்டன.
சிங்கள அரசும், புலிகளும் உள்நாட்டில் யுத்தம் செய்து கொண்டிருந்த அதேவேளை வெளிநாடுகளிலும் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை அரசினுடைய இராஜதந்திரம் சர்வதேச ரீதியாக வெற்றி பெற்றாலும், புலிகளுடனான இராஜதந்திர நகர்வுகள் அன்று தோல்வி முகத்தையே காட்டின.
2002 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒரு சவாலான சக்தியாக விளங்கிய புலிகளுக்கு ரணில் கொடுத்த பரிசு போர் நிறுத்த உடன்படிக்கை.
புலிகள் ஆயுதங்களுக்கு ஓய்வுகொடுத்து ஜனநாயகச் சூழலுக்கு வருவதுபோல காட்டிக்கொண்டு, மீண்டும் ஒரு பாரிய யுத்தத்திற்கு தயாராகினர்.
அதன் பிறகு புலிகளிடம் ஏற்பட்டபிளவு அத்துடன் புலிகளின் மடமைத்தனமான முடிவாகிய ரணிலுக்கெதிரான ஜனாபதித்தேர்தல் வாக்குப்புறக்கணிப்பு அவர்களை வேரோடு அழித்தது என்றே கூறலாம்.
இலங்கை அரசியல் வரலாற்றில் புலிகள் செய்த தவறுகளில் மிகமுக்கியமானவை. முஸ்லிம்கள் வெளியேற்றம், இந்தியாவுடனான போர் மற்றும் மஹிந்தவுக்கான ஆதரவு.
இம் மூன்று நிலைப்பாடுகளிலும் முதல் இரண்டையும் மறப்போம் மன்னிப்போம், துன்பியல் நிகழ்வு என நியாயப்படுத்தினாலும் கடைசி விடயம் புலிகளுக்கு சாவுமணி அடித்து அவர்களை சாம்பலாக்கிவிட்டது என்றே கூறவேண்டும்.
அந்தக் காலகட்டத்தில் புலிகளுக்கு மதியுரைத்தவர்களும் அத்துடன் ஊடகச்சருகுப் புலிகள் சிலரும் புலிகளைப் பிழையாக வழிகாட்டி சர்வதேச நாடுகளுடன் மோதவைத்தனர்.
புலிகளுடைய எழுச்சியையும் வீழ்ச்சியையும் 1987 ற்கு முன்பு அதற்குப் பின்பு என வகைப்படுத்தலாம்.
1987 இற்கு முன்பு சிங்கள இராணுவத்தினரை வெற்றி கொண்ட புலிகள் பின்பு இந்திய இராணுவத்தினரையும் வெற்றி கொண்டனர்.
1987 இல் வடக்கு கிழக்கு மாகாண சபையைக் கைபற்றியவர்கள் அதனை சரிவர நடாத்த முடியாமல் தாங்களும் மாகாணசபைப் புலிகள் எனக்கூறி தமிழீழப் பிரேரணை மூலம் நாட்டைவிட்டு ஓடினர்.
அவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ்த் தேசத்தினை புலிகளுடன் சேர்ந்தோ அல்லது தனித்தோ நன்கு நிர்வாகம் செய்திருந்தால் இன்று வடக்கு கிழக்கு தனித்தேசமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.
இன்று நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாண சபைகளினை மீண்டும் ஒன்று சேர்க்கமுடியும்.
இரண்டு மாகாண சபைகளிலும் முடிசூடா மன்னர்களாகத் திகழும் த.தே.கூ வினர் இரண்டு மாகாணசபைகளும் சேரவேண்டும் என்ற பிரேரணை ஒன்றினை நிறைவேற்றி எதிர்காலத்தில் ஒன்று சேரமுடியும்.
வடக்கு மாகாணசபையில் இந்தப் பிரேரணையை சுலபமாக நிறைவேற்ற முடியும்.
ஆனால் கிழக்கு மாகாணசபையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றில் இருக்கின்ற தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் நினைத்தால் இதனை செய்யலாம்.
விடுதலைப்புலிகள் காலத்திலிருந்தே பிரதேசவாதம் என்பது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வேரூன்றியிருந்தது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை என அவர்களால் தமது தேவைக்கேற்றவாறு பிரதேசவாதம் பயன்படுத்தப்பட்து.
தற்போதுகூட த.தே.கூ வினரிடையே இந்தவாதம் செறிந்து காணப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு யுத்தத்துக்கு முன்பு புலிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழ்த்தலைவர்கள் பலர் புலிகளின் அழிவிற்குப்பின்பு அவர்களுடன் தொடர்பு வைப்பதற்கு அஞ்சுகின்றனர்.
விடுதலைப்புலிகளையோ அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தவர்களையோ த.தே.கூ வினர் குஸ்டரோகிகளைப்போலவே பார்க்கின்றார்கள்.
தேர்தல் காலங்களில் மட்டும் முன்னாள் புலிப்போராளிகளுடைய வீடுகளுக்கு த.தே.கூ வினர் விஜயம் செய்வார்கள்.
தாங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் வடமாகாணசபை மூலம் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு நலத்திட்ட நிதியத்தினையாவது த.தே.கூ வினர் ஆரம்பித்தார்களா? 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதா?
முன்னாள் சிங்கள அரசுதான் பில்லியன் கணக்கான ரூபாய்களை ஒதுக்கி முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம் வழங்கியது, புனர்வாழ்வு வழங்கியது, அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தது, வேலைவாய்ப்பு கொடுத்தது.
தற்போதைய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் சிருஸ்டிகள் எனக்கூறும் த.தே.கூ வினர் முன்னாள் புலிகளுடைய நலன்கள் தொடர்பில் ஒரு நாளாவது ஒரு வேலைத்திட்டமாவது போட்டார்களா?
அன்று தமிழீழ விடுதலைப் புலித்தலைவர் விட்ட அதே பிழையைத்தான் தற்போது த.தே.கூ தலைவர்களும் விடுகின்றார்கள். அன்றைய தினம் வெளிப்படையாக, நேரடியாக அரசுடன் இணக்கப்பாட்டினை மேற்கொள்ளாமல் எப்படி புலிகள் தம்முடைய பினாமிகளாக த.தே.கூ வினரை நாடாளுமன்றம் அனுப்பித் தோல்வியைத் தழுவினார்களோ, அதேபோர்வையில் த.தே.கூ வும் தமது பினாமிகள் சிலவற்றின் உதவியுடன் ரணிலுக்குத் தலையையும், மைத்திரிக்கு வாலையும் காட்ட முயற்சிக்கின்றார்கள்.
வடமாகாண சபைத் தேர்தல் வாக்களிப்புத்தினம் அன்று உங்கள் வாக்கு உரிமைக்கா? சலுகைக்கா? எனக் கேட்ட த.தே.கூ வினர் இன்று உரிமையை மறந்து சலுகைக்காக அரசிடம் பணப்பெட்டி வாங்கிவிட்டார்கள்.
உண்மையில் வடபகுதியில் வாழாவிட்டாலும் கொழும்புத்தமிழனாக, வடமாகாண சபையில் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களால் நம்பிக்கையுடன் மலர்ந்த தமிழர் அரசில் தமிழர்கள் ஆதரவால் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணப்பெட்டி வாங்கியதை வெளிப்படுத்தினார். உண்மையில் அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு இந்த விடயத்தில் துரோகம் இழைக்கவில்லை.
புலிகளைக்காட்டி தமிழ்மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட த.தே.கூ வினரை விடுதலைப்புலிகளின் ஆவிகள் மன்னிக்குமா? சாவினைத் தோள் மீதுதாங்கியே வாழ்ந்து மடிந்த புலிகள் சந்தனப்பேழைகளுக்குள் இருந்து ஆகஸ்ட் 17 ஆந் திகதி எழுந்துவந்து த.தே.கூ வினருக்கு அதிர்ச்சி அளிப்பர்.
வடமாகாண சபைத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் மாவீரர் மயானம் திருவில் பகுதியில் வைத்து புலிகள் ஆவிகளை அழைத்து தேர்தலில் வென்ற த.தே.கூ வினருக்கு இதே ஆவிகள் தேர்தலில் வெள்ளையடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாணசபை முறையினை சலுகைக்காக ஏற்று இன்று தங்கள் பெட்டிகளை நிரப்பிக்கொள்கின்ற த.தே.கூ வினருக்கு சவால் விடுவதற்கு புலிகளின் உத்தியோகப்பற்றற்ற ஊடகவியலாளர் வித்தியாதரன் முன்னாள் போராளிகளுடன் களமிறங்கியுள்ளார்.
கடந்தமுறை மாகாண சபைத்தேர்தலின்போது முன்னாள் போராளி அனந்திக்குக் கூட ஆசனம் ஒதுக்குவதற்கு மறந்த த.தே.கூ வினர் புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாகவே அவருக்கு சீட்கொடுத்து அவர் வெற்றிவாகை சூடினார்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் சீட் இல்லை என்ற த.தே.கூ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமுடிவு குப்பையில் போடப்படுகின்றது. வடமாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் மாவையுடன் சமர்புரியத்தயாராகின்றார்.
வடக்கு கிழக்கில் புலிகள் போட்டியிட்டால் தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு சாதகமாய் போய்விடும் என நீலிக்கண்ணீர் வடிக்கும் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கவலை உண்மையில் அதுவல்ல.
முன்னாள் புலிகள் போட்டியிட்டால் புலிகளைக்காட்டி தாங்கள் வாக்குப்பெற முடியாது. இதுதான் உண்மை.
காலாகாலமாக புலிகளை நியாயப்படுத்தும் தமிழ் ஊடகங்கள் தற்போது த.தே.கூ வினரை வசைபாடத் தொடங்கிவிட்டன.
ஆரம்பத்திலிருந்த த.தே.கூ தலைவர் சம்பந்தருக்கு புலிகள் என்றால் அலர்ஜி. அவருடன் தீவிர புலி எதிர்ப்பாளர் சுமந்திரனும் இணைந்திருப்பதனால் இம்முறை பெரும்பாலும் கடித்துக் குதறல்கள் பல ஏற்படும்.
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டு தற்போது கிடப்பில் கிடக்கும் இனப்படுகொலை என்ற விடயம் முன்னாள் புலிகளின் முக்கிய தேர்தல் பிரசாரப் பேசு பொருளாகலாம்.
பிரபாகரனின் உறவினர் எனக்காட்டிக்கொள்ளும் சிவாஜிலிங்கமும் புலிகளுக்கு ஆதரவாக அதிரடியாக த.தே.கூ விற்கு எதிராக சேம் சைட் கோல் அடிக்கலாம்.
தற்சமயம் த.தே.கூ வினரால் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழுள்ள அனந்தி புலிப்பிரச்சாரதாரர்களுக்கு அனுசரணை வழங்கலாம்.
இப்படியான செயற்பாடுகளுக்கு ஆதரவாக சிங்களக் கட்சிகளும் தங்களுடைய முயற்சிகளை தீவிரமாக எடுக்கும். முழுச்சந்திரனாக இருந்து பிறைவடிவில் தென்படும் த.தே.கூ வினரை வெல்ல வைப்பதற்குரிய கால எல்லை மிகவும் குறைவாகவே உள்ளது.
ஒருமுறை தந்தை செல்வா சொன்னது போல த.தே.கூ வினரை இம்முறை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
வடக்கு கிழக்கில் த.தே.கூ 7 ஆசனங்களையும் முழுமையாகப் பெறவேண்டுமெனின் அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது.
அவர்கள் ஒரு புதிய ஜனநாயக் கட்சி கூட்டுக்குள் செல்ல வேண்டும். அதிலே தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ,ஈ.பி.ஆர்.எல்.எவ்,ஈ.பி.டி.பி, த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு பொது உடன்பாட்டின் கீழ் தேர்தலுக்கு செல்ல வேண்டும்.
வடக்கு கிழக்கில் சரியான முறையில் ஆசன ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஒரு பேரெழுச்சியுடனான தமிழ் வாக்குப் பலத்தைப் பெற்று பாராளுமன்றத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியைப் பெறும் தேர்தல் ஒன்று கூடிவந்;துள்ளது.
உடனடியாகவே இந்தக்கட்சித் தலைவர்கள் கூடவேண்டும், மனம் விட்டுப்பேச வேண்டும், விட்டுக்கொடுப்புக்கள் வேண்டும், மாற்றம் வேண்டும், இல்லாவிட்டால் தமிழர்கள் வாக்குச் சிதறும்.
புலிகள் விட்ட அதே வரலாற்றுத் தவறை தமிழ்த்தலைவர்;கள் விடக்கூடாது.
எவ்வாறு தளபதி அமிர் இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாரோ அதேபோல் ஒரு தமிழன் எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும். அதற்கான பொன்னான வாய்ப்பு வந்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுடைய உறவுக்கு கரம் கொடுக்கப்பட வேண்டும், தமிழர்; தாயகம் மிளிர வேண்டும், சிங்கள அரசுக்கு சவாலாக தமிழர்கள் எழ வேண்டும்.
நித்திரையா தமிழா நீ எழுந்து பாரடா, வந்து ஆகஸ்ட் 17 இல் உனது பொன்னான வாக்கை சரியான பாதையில் போடடா…
—ஸ்ரீ பரராஜசேகரன்—
Average Rating