சங்கரன்கோவில் அருகே மாணவி திருமணத்தை தடுக்க சென்ற சப்–இன்ஸ்பெக்டர், வக்கீல் அறையில் பூட்டி சிறைவைப்பு!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாலா (வயது17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அப்போது சிவகாசியை சேர்ந்த ஒரு வாலிபருடன் மாலாவுக்கு காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த மாலாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த சில நாட்களாக அவரை கல்லூரிக்கு அனுப்பாமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி மாலாவுக்கு குளக்கட்டாகுறிச்சி பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே மாலாவின் காதலர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு 17 வயதே ஆன மாணவிக்கு குளக்கட்டாகுறிச்சி கிராமத்தில் திருமணம் நடைபெற உள்ளது. எனவே, அதனை தடுத்து நிறுத்துங்கள் என கூறினார்.
இதையடுத்து சிறுமிக்கு நடக்க உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து குருவிகுளம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் குருவிகுளம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த வக்கீல் ஆகியோர் நேற்றிரவு குளக்கட்டா குறிச்சி கிராமத்திற்கு சென்றனர். அவர்கள் மாலாவின் பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் திருமணத்தை தடுக்கக்கூடாது. நாங்கள் அனைவரும் உறவினர்கள். இத்திருமணத்தின் மூலம் எந்த பிரச்சனையும் வராது. எனவே இங்கிருந்து திரும்பி செல்லுங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறிது நேரத்தில் திடீரென திருமண வீட்டார் மற்றும் அப்பகுதி கிராம மக்கள், சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அவருடன் வந்த காவலர் மற்றும் வக்கீல் ஆகிய 3 பேரையும் அங்குள்ள ஒரு வீட்டில் பூட்டி சிறை வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி. லட்சுமணன் தலைமையில் போலீசார் குளக்கட்டா குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அறையில் பூட்டி சிறை வைக்கப்பட்டிருந்த சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரையும் மீட்டனர்.
தொடர்ந்து மாணவி மாலாவுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. 18 வயது நிரம்பிய பிறகு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதனை மீறி திருமணம் நடந்தால் இரு வீட்டார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குளக்கட்டா குறிச்சி கிராமத்தை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக குருவிகுளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க குருவிகுளம் போலீஸ் நிலையம் முன்பு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
Average Rating