கர்நாடகா கவர்னர் முன் 126 எம்.எல்.ஏ.,க்கள் மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ.,-ம.ஜ.த., அணி
கர்நாடக அரசியலில் நிலவி வரும் பரபரப்பு நேற்றும் தொடர்ந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், பா.ஜ., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 126 பேர், கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர் முன்பாக அணிவகுப்பு நடத்தினர். ஆட்சியமைக்க இவர்களை கவர்னர் அழைப்பாரா அல்லது சட்டசபையை கலைப்பாரா என்பது குறித்து இழுபறி நீடிக்கிறது. கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான அரசு அமைய மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளித்துள்ளது. இதற்கு ம.ஜ.த., மூத்த தலைவர் பிரகாஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலருடன் அவர் காங்கிரசுக்கு தாவப்போவதாக கூறப்பட்டது. அவரது பிடியில் சிக்காமல் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க, முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடியாக செயல்பட்டார். 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களை பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு நாட்களாக தங்க வைத்திருந்தார். பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுத்து விட்ட நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த 80 பேர், மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 46 பேர் உட்பட 126 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
ஆட்சி அமைக்க பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் முன்பாக அணிவகுப்பு நடத்தினர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான எண்ணிக்கையை விட 13 எம்.எல்.ஏ.,க்கள் அதிகமாக உள்ளதால், பா.ஜ., தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. எனினும், கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என கூறமுடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, சட்டசபையை கலைக்கும்படி ஏற்கனவே கவர்னரிடம் அறிக்கை அளித்துள்ளார். இதுபோலவே, பா.ஜ.,வும், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என கவர்னரிடம் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ளது. தற்போது, இக்கட்சிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கவர்னர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. எனவே, கர்நாடகாவில் அடுத்த ஆட்சி அமையப் போவது குறித்து இழுபறி நிலை நீடிக்கிறது.
மாநில பா.ஜ., தலைவர் சதானந்த கவுடா கூறுகையில், “கவர்னரை சந்திப்பதற்கு முன்பாக இரு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்ட கூட்டு கூட்டம் நடந் தது. இதில், எடியூரப்பாவை முதல்வராக ஏற்றுக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது,” என்றார். இதற்கிடையே, ம.ஜ.த., அதிருப்தி தலைவர் பிரகாஷை, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து சமரசப்படுத்த முயற்சித்தனர். பிரகாஷ் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர், கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரை நேற்று சந்தித்தார். ம.ஜ.த.,வைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும் உடன் இருந்தனர்.
சந்திப்பின் போது, `ம.ஜ.த., கட்சி எம்.எல்.ஏ.,க் கள் கூட்டம் சட்டப்படி செல்லத் தக்கது அல்ல. எனவே, ஆட்சி அமைக்கும் படி பா.ஜ.,விற்கு அழைப்பு விடுக்க வேண் டாம். சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும்’ என்பதை விளக்கும் அறிக்கையை கவர்னரிடம் அவர்கள் அளித்தனர்.பிரகாஷ் கூறுகையில், “காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தொடர்ந்து முயற்சி மேற் கொண்டு வருகிறோம்,” என்றார்.
காங்., செய்தி தொடர் பாளர் அபிஷேக் சிங்வி டில்லியில் கூறுகையில், “கர்நாடகா சட்டசபையை மத்திய அரசு உடனடியாக கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில், கர்நாடகாவில் குதிரை பேர நடவடிக்கைகள் துவங்கும்,” என்றார்.