சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் மீட்பு!!
சென்னை போரூர் மாங்காடு மதனந்தபுரம் குருசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அரவிந்த்ராஜ் (வயது 11) அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு பள்ளியில் இருந்து வீடு திரும்ப வேண்டிய மாணவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவரை பெற்றோர் பல இடங்களில் தேடினார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 அளவில் பாலாஜியின் செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம மனிதன் ஒருவன் பேசினான். அவன், “உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்து இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் உங்க மகனை உயிருடன் ஒப்படைப்போம். பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
இதனால் மாணவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாணவரின் தந்தை பாலாஜி மாங்காடு போலீசில் புகார் அளித்தார். பணம் கேட்டு மாணவர் கடத்தப்பட்ட விவகாரம் போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்தது. கடத்தல் கோஷ்டியை பிடிக்க துணை கமிஷனர்கள் ஜெயக்குமார், சுதாகர், மயில்வாகனன் ஆகியோரை கொண்ட சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பாலாஜியிடம் மர்ம மனிதன் பேசிய செல்போன் எண்ணை வாங்கினார்கள். கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் சிக்னல் எந்த டவரில் இருந்து வந்தது என்பது பற்றி ஒரு பக்கம் போலீசார் கண்காணித்தனர். மறுபக்கம் மர்ம மனிதன் பேசிய செல்போனில் மாணவரின் தந்தையை பேச வைத்தனர். அவரிடம் “நான் பணத்தை கொண்டு வருகிறேன். எங்கே வந்து உங்களுக்கு பணத்தை தந்து எனது மகனை அழைத்து வரவேண்டும்” என்று கேட்க சொன்னார்கள்.
அதன்படி மாணவரின் தந்தை பாலாஜி அவருக்கு வந்த போனில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த எதிர்முனையில் பேசிய ஆசாமியிடம், “நான் பணத்தை தயார் செய்து விட்டேன். பணத்தை எங்கே கொண்டு வந்து தரவேண்டும்” என கேட்டார்.
அதற்கு அந்த ஆசாமி, “ஆவடி அருகே இந்து கல்லூரி மேம்பாலத்திற்கு பணத்துடன் வந்ததும், அங்கிருந்து எங்களுடன் பேசவேண்டும் அப்போது பணத்தை எங்களிடம் தருவது பற்றியும் மகனை உங்களிடம் ஒப்படைப்பது பற்றியும் தெரிவிப்பேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
உடனே போலீசார் கூறிய ஆலோசனையின்படி ரூ.5 லட்சம் பணத்தை பாலாஜி தயார் செய்து, அதை ஒரு பேக்கில் வைத்து மர்ம ஆசாமிகள் கூறியபடி ஆவடி அருகே உள்ள இந்து கல்லூரி மேம்பாலத்தின் மேலே நேற்று இரவு 9.20 மணி அளவில் சென்று நின்றார்.
அவர் சென்ற இடத்துக்கு மாறுவேடத்தில் போலீஸ் படையும் சென்றது. மர்ம ஆசாமி மேம்பாலத்திற்கு வருமாறு கூறியதால் போலீசார் மேம்பாலத்திலும், மேம்பாலத்திற்கு கீழேயும் தயார் நிலையில் மறைந்து இருந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்தபடி இருந்தனர்.
இந்து கல்லூரி மேம்பாலத்தில் இருந்தபடி பாலாஜி, கடத்தல் ஆசாமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். போனை எடுத்த ஆசாமியிடம், “நான் இந்து கல்லூரி மேம்பாலத்தில் பணத்துடன் நிற்கிறேன். நீங்கள் வந்து பணத்தை பெற்றுக்கொண்டு, எனது மகனை ஒப்படையுங்கள்” என கூறினார்.
ஆனால் அதற்கு கடத்தல் ஆசாமி, “நீங்கள் மேம்பாலத்தில் இருந்து பணப்பையை கீழே போடுங்கள்” என கூறினான். அதற்கு பாலாஜி எனது, “மகனை என்னிடம் காட்டி ஒப்படையுங்கள், அதன்பின்னர் பணத்தை போடுவேன். இல்லாவிட்டால் பணத்தை கீழே போட மாட்டேன்” என்று கூறினார். உடனே அந்த ஆசாமி, “நீங்கள் பணத்தை கீழே போட்டு விட்டு, அந்த பகுதியில் உள்ள சி.பி.எச் ரோட்டில் நிற்கும் ஒரு காரில் இருக்கும் உங்கள் மகனை அழைத்துச்செல்லுங்கள்” என்றான்.
உடனே பாலாஜி தான் கொண்டு வந்திருந்த ரூ.5 லட்சம் பணப்பையை கீழே போட்டார். அப்போது கீழே தயாராக மறைந்து நின்ற கடத்தல் ஆசாமி பணத்தை எடுக்க வெளியே வந்தான்.
பணத்தை எடுக்க முற்படும்போது, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த போலீசார் அவனை சூழ்ந்து கொண்டு மடக்கிப்பிடித்தனர். பணத்தையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ஆசாமி பெயர் பாலா என விசாரணையில் தெரியவந்தது.
உடனே கடத்தல் ஆசாமி கூறியபடி அந்த பகுதியில் நின்ற காரில் கடத்தப்பட்ட மாணவன் இருக்கிறாரா என போலீசார் தேடினார்கள். அப்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் கடத்தப்பட்ட மாணவர் அரவிந்தராஜ் இருந்தார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
இந்த கடத்தல் கோஷ்டியில் தொடர்புடைய சிலர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவரை மீட்க போலீசார் வகுத்து கொடுத்த தந்திர திட்டம் அவரை பத்திரமாக மீட்கவும் கடத்தல் ஆசாமியை பிடிக்கவும் பெரிதும் பயன்பட்டது.
Average Rating