3-வது இடத்துக்கான போட்டி: போர்ச்சுக்கல்லை ஜெர்மனி வீழ்த்தியது

Read Time:5 Minute, 15 Second

Foot.gifஉலககோப்பை கால்பந்து இறுதி போட்டி நடக்கின்ற நிலையில் 3-வது இடத்துக்கான போட்டி ஸ்டட்கர்ட் நகரில் நடந்தது. அரை இறுதி போட்டியில் தோற்று போன ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இறுதி போட்டி கனவில் இருந்த ஜெர்மனிக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போனதால் ஜெர்மனி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர். 3-வது இடமாவது நமக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெர்மனி ரசிகர்கள் மைதானம் முழுவதும் அமர்ந்திருந்து ஜெர்மனி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜெர்மனி நட்சத்திர வீரர் பல்லாக் காயம் காரணமாக ஆடவில்லை. ஆனாலும் ரசிகர்களின் உற்சாக குரலால் ஜெர்மனியின் மற்ற வீரர்கள் துடிப்பாக ஆடினார்கள்.
போர்ச்சுக்கல் கேப்டன் பிகோ போட்டி தொடக்கத்தில் களம் இறங்கவில்லை. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனாலும் போர்ச்சுக்கல்லும் ஈடு கொடுத்து ஆடியது. 5-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்க முயன்ற ஜெர்மனியின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

அதன் பின் 14-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல்லுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்டு வீரர் பலேட்டா பந்தை வேகமாக கடத்தி வந்து கோல் கம்பத்தை நோக்கி அருமையான `ஷாட்’ அடித்தார். ஆனால் ஜெர்மனியின் தடுப்பு தூண் என்று அழைக்கப்படும் கோல் கீப்பர் ஆலிவர்கான் அதை தடுத்து விட்டார். அதேபோல 25-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பொடோலஸ்கி பிரிகிக் மூலம் பந்தை கோலாக்க முயன்றார். அதை பாய்ந்து சென்று போர்ச்சுக்கல் கோல் கீப்பர் ரிக்கார்டோ தடுத்து விட்டார்.

முதல் பாதி ஆட்டம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளை முடிந்து அடுத்த பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் முன்பை விட இளமை துடிப்புடன் ஆடினார்கள்.

இதன் விளைவாக ஜெர்மனி முதல் கோலை அடித்தது. 56-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பாஸ்டியன் போர்ச்சுக்கல்லில் 2 வீரர்களை ஏமாற்றி பந்தை கடத்தி வந்து முதல் கோலை அடித்தனர். கோல் கீப்பரின் தலைக்கு மேலாக சென்று வலைக்குள் நுழைந்தது. இதன் மூலம் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அடுத்த 4-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு இன்னொரு அதிர்ஷ்டம் கிடைத்தது. பிரிகிக் வாய்ப்பில் கிடைத்த பந்தை ஜெர்மனி வீரர் பாஸ்டியன் கோல் நோக்கி அடிக்க போர்ச்சுக்கல் வீரர் பெடிட் அதை தலையால் முட்டி தடுக்க முயன்றார். ஆனால் குறி தவறி பந்து வலைக்குள் விழுந்து சேம்சைடு கோல் ஆகி விட்டது. இதன் மூலம் ஜெர்மனி 2-0 என்று முன்னிலை பெற்றது.

78-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு இன்னொரு கோலை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் கோலை அடித்த அதே பாஸ்டியன் 3-வது கோலை அடித்தார். போர்ச்சுக்கல் வீரர்களை ஏமாற்றி விட்டு 25 மீட்டர் தூரத்தில் இருந்து ஓங்கி உதைக்கப்பட்ட பந்து அருமையாக வலைக்குள் புகுந்து கோல் ஆக மாறியது. இதன் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அசைக்க முடியாத இடத்தில் இருந்தது.

இடையில் போர்ச்சுக்கல் கேப்டன் பிகோ களம் இறங்கி உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தார். 88-வது நிமிடத்தில் பிகோ பந்தை கடத்தி வந்து தூக்கி கொடுக்க அதை போர்ச்சுக்கல் வீரர் நுனோ சோமஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.

அதன் பிறகு யாரும் கோல் போடவில்லை. ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வென்று 3-வது இடத்தை தட்டி சென்றது. போர்ச்சுக்கல்லுக்கு 4-வது இடம் கிடைத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரஷிய விமானம் விழுந்து 150 பேர் பலி: தரை இறங்கும்போது விபத்து
Next post 5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளூசுக்கு `தங்க காலணி’