திருச்சியில் ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்: கைதான 5 பேரும் சிறையில் அடைப்பு!!
திருச்சி புத்தூர் அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் செந்தில் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்திய போலீசார் அதில் இருந்த 5 பேர் கும்பலை கீழே இறங்குமாறு கூறினர். இதில் போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சப்–இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீஸ்காரர் செந்திலை சுற்றி வளைத்து சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிசென்றது. இதில் போலீஸ்காரர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து ஆட்டோவில் தப்பிய 5 பேர் கும்பலையும் அழகர் மற்றும் செந்தில் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றனர். ஆட்டோ பஞ்சராகியதால் கனரா பாங்கி காலனி பகுதியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது.
இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன், உறையூர் இன்ஸ்பெக்டர்கள் சீத்தாராமன், மலைச்சாமி, கென்னடி ஆகியோர் காயமடைந்த அழகர், செந்திலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று உதவி கமிஷனர் கபிலன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆட்டோ டிரைவரான தில்லை நகரை சேர்ந்த காதர் மொய்தீன், குழுமணி பேரூர் பகுதியை சேர்ந்த மனோகர் மகன் மனோஜ்குமார் (20), உறையூர் வடக்கு எடத்தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் பக்கி என்ற பாலகிருஷ்ணன்(21), பாண்டமங்கலத்தை சேர்ந்த குமார் மகன் விஜி என்ற மணிகண்டன் (20), உறையூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் ஆனந்த் (19) ஆகிய 5 பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து 5 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, 5 பேரும் சேர்ந்து மது அருந்த அந்த பகுதிக்கு ஆட்டோவில் சென்றபோது போலீசார் தடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் போலீசாரை தாக்கியதும், மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் வாக்கிங் சென்ற சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வேல்முருகன் என்பவரை தாக்கியதும் இந்த கும்பல்தான் என்பதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது காதர் மொய்தீன் மீது தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் அடி–தடி வழக்கு மற்றும் குடிபோதையில் சுற்றி திரிந்ததாக ஒரு வழக்கும், பால சுப்பிரமணியன் மீது வழிப்பறி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை 5 பேரையும் கைது செய்த போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கிறார்கள். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அழகர் மற்றும் செந்தில் ஆகியோர் நேற்றிரவு வீட்டுக்கு திரும்பினர்.
Average Rating