அரசியல் சாணக்கியமும், நிர்வாகத் திறனுமற்ற த.தே.கூ..! -பண்டாரவன்னியன் (கட்டுரை)
காலாகாலமாக விடுதலைப் புலிகளினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகம் விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் வடக்கு மாகாண சபையும், பின்பு 2015 ஆம் ஆண்டு சரணாகதி அரசியல் மூலம் கிழக்கு மாகாண சபையும் கைப்பற்றப்பட்டது யாவரும் அறிந்ததே.
இலங்கை அரசியல் வரலாற்றினை எடுத்து நோக்குவோமாயின் குறிப்பாக அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் சட்டத்தரணிகளாக இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்குரிய முக்கிய காரணம் அரசியல் சாணக்கியம் மற்றும் நிர்வாகத் திறமை என்பவை சட்டவல்லமை பொருந்தியதாக காணப்பட்டதே ஆகும்.
ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த விகிதாசார தேர்தல் முறைமை இந்தக் கோட்பாட்டினை தவிடுபொடியாக்கியது. கேட்பவரெல்லாம் வெல்லலாம் என்ற கோதாவில் பாராளுமன்றம் ஏறியவர்கள் பலர். சுகபோகங்கள் அனுபவித்தவர்கள் பலர். பாராளுமன்றத்தில் மக்கள் நலன்சார்ந்த கருத்துக்களை கூறியவர்கள் ஒருசிலர்.
ஏனெனில் அரசியல் சாணக்கியமும், தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் பேணக்கூடிய நெருக்கமும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அற்றுக்காணப்பட்டது. ஒருசிலர் மட்டும் இணக்க அரசியல் மூலம் தமிழ் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
பாராளுமன்றத்தில் செங்கோலை தூக்கிக்கொண்டு ஓடும் ரவுடித்தனம் பொருந்தியவர்களும், பாராளுமன்றத்தில் சட்டையை கழட்டிவிட்டு முட்டிக்குமுட்டி மோதும் சண்டியர்களும் தமிழர்களுடைய பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்தமை தமிழர்கள் செய்த பாவங்களில் ஒன்று.
வெளிப்படையாக இவ்வாறு தமிழ்ச்சண்டியர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தாலும், தமிழர்களுக்கே உரித்தான வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் இவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்த மூத்ததலைவர்களும் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இருந்தமையை ஒருகணம் தமிழ்மக்கள் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது.
இதுபோதாதென்று தமிழர்களுக்கு உரிய தீர்வென்று சிங்கள ஆட்சியாளர்கள் எந்தவொரு நகலைக் கொண்டு வந்தாலும் அதைப்படித்து பார்க்காமலேயே நாடாளுமன்றத்தில் தீமூட்டி வேடிக்கை பார்த்த தமிழ்த்தலைவர்கள் அன்றும், இன்றும் பாராளுமன்றத்தில் தமிழர்களுடைய பிரதிநிதிகளாக உள்ளமை தமிழர்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்காதென்பதற்குரிய ஓர் நல் உதாரணமாகும்.
காலாகாலமாக எதிர்அணி வரிசையிலேயே இருந்து சண்டைப்பயிற்சி, வில்லத்தனம், ரவுடித்தனம் ஆகியவற்றை செய்து தமிழ்மக்கள் மத்தியில் பிரபல்யமாகிய அனைவரும் இன்று ஒன்றுசேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என வடிவெடுத்து இருப்பது தமிழ்மக்களை ஏமாற்றும் வரிசையில் புதிய பரிமாணம்.
மைத்திரி யுகத்தினுடைய திரைக்கதை வசனம் எழுதியவர்கள் என்ற வகையிலும், கிழக்கு மாகாண சபையினுடைய ஆட்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் தாங்களும் பங்குபற்றுகின்றோம் என்ற வகையிலும், வடமாகாண சபையின் மேய்ப்பர்கள் என்ற வகையிலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை தன்னகத்தே வைத்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதிய மாற்றம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மாற்றம் வேண்டுமாயின் அவர்கள் மாற வேண்டும், புலிகளை மறக்க வேண்டும், எதிர்ப்பு அரசியலை மறக்க வேண்டும், இனவாதத்தை அடியோடு வெறுக்க வேண்டும், வடக்கிலும் தெற்கிலும் ஒரே கருத்தினை வெளியிட வேண்டும், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒரேசாரப்பட பேச வேண்டும், மக்கள் நலன்சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட வேண்டும், தேர்தல் மேடைகளில் கூறும் கருத்தினை செயலாக்க வேண்டும், எல்லோரும் இலங்கையரே என்ற கோட்பாட்டினை ஏற்க வேண்டும். இதனை அவர்கள் செய்வார்களா?
இவற்றிற்கெல்லாம் கட்டியம் கூறுவதுபோல வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மைத்திரியுடன் உறவையும், பிரதமர் ரணிலுடன் கசப்பையும் கொண்டு நாளாந்தம் வெளியிடும் கருத்துக்கள் வடமாகாண சபையினுடைய வீழ்ச்சிக்கான அத்திவாரம்.
இதேபோல பதியப்படாத கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ; பிரேமச்சந்திரன் எடுத்திருக்கின்ற போர்க்குற்ற விசாரணை என்ற பதம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் முன்னர் இருந்த ஆட்சியும் முஸ்லிம் ஆட்சி, தற்போதிருக்கின்ற ஆட்சியும் முஸ்லிம் ஆட்சி. அங்கே தமிழர்களுக்கு என்று ஒன்றுமில்லை என்று கூவிக்கொண்டே 2 அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே ஒரு இனக்கலவரத்தை தூண்டி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை சூறையாடுவதற்கு முயற்சிப்பது பெரும்பாலும் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேனிலவை முடிவுக்கு கொண்டுவந்து விடும்.
வடமாகாண சபையை பொறுத்தவரையில் 30 உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு தனிப்பெரும் கட்சியாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களில் கூடுதலானவர்கள் அரசியலுக்கு புதியவர்கள், பெரும்பாலானவர்கள் 13 வது சட்டத்திருத்தம்கூட சரியாகத் தெரியாதவர்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் முதலமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களும் தங்களுக்கு கீழ் உள்ள திணைக்களத் தலைவர்களையோ அல்லது அமைச்சின் செயலாளர்களையோ கட்டுப்படுத்துவதற்கு திராணி அற்றவர்கள். ஏனெனில் அவர்களுக்கு அரசியல் சாணக்கியமோ அல்லது நிர்வாகத்திறனோ இல்லை.
அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக அலுவலர்கள் அந்தோ பரிதாபம், சொந்தம் பந்தமென அவர்களும் வாகனங்களில் வலம் வருவதும், கதிரைகளில் சுழலுவதுமாக இருக்கிறார்கள். இதன்காரணமாக வடமாகாணசபை பிரேரணைகளை நிறைவேற்றும் சபையாக மட்டுமே உள்ளது.
மைனாரிற்ரி எதிர்க்கட்சி உறுப்பினர்களில் தலைவராக இருக்கின்ற சி.தவராசா சிலசந்தர்ப்பங்களில் ஆளும் கட்சியை வலுப்படுத்துகிறார் அல்லது வழிப்படுத்துகிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தவராசாவிடம் இருக்கின்ற அரசியல் சாணக்கியம், நிர்வாகத்திறமை ஆகியன அவரை தானே ராசா தவராசா என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கூறும் அளவிற்கு மாற்றியுள்ளது.
இதனைவிட எந்தவிதமான மாற்றுக்கருத்துமின்றி ஏதோவொரு வகையில் வடமாகாணசபை ஓடுகிறது என்று கூறுமளவிற்கு வடமாகாணசபை வகுப்பறையினுடைய மாணவ முதல்வர் திரு.சி.வி.கே.சிவஞானம் கொண்டு நடத்துகிறார் என்றால் அது அவருடைய அரசியல் அனுபவம் மற்றும் நிர்வாகத்திறமை.
சாதாரண கணக்கு பதியுனராக தனது அரசாங்க சேவையினை ஆரம்பித்து கணக்காளராகப் பதவியுயர்ந்து முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸவின் தயவினால் இலங்கை நிர்வாக சேவைக்கு உள்வாங்கப்பட்டு நீண்டகாலமாக யாழ் மாநகரசபையில் ஆணையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றமை திரு.சி.வி.கே.சிவஞானத்தின் நிர்வாக அனுபவம்.
இடைக்கால நிர்வாக சபையில் தமிழ்ப்பிரதிநிதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் திரு.சி.வி.கே.சிவஞானம் நியமிக்கப்பட்டதும், ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி பின்பு தமிழ்க்காங்கிரஸ் பின்பு மீண்டும் தமிழரசுக்கட்சி என பல அரசியல் முகமூடிகளைப் போட்டதும் சிவஞானத்தின் அரசியல் அனுபவம்.
இதனைவிட யாழ்மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல்கள் பலவற்றில் உள்ளடி வேலைகள் செய்து சிவஞானம் தோற்கடிக்கப்பட்டதும், அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்த சூடு.
கடந்த மாகாணசபை தேர்தலிலும் சிவஞானத்தை தோற்கடிக்க வைப்பதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயன்றாலும் தன்னுடைய சொந்தச் செல்வாக்கில் சிவஞானம் வென்றமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுக்க முடியாது.
ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்களை ஆட்சி செய்ய வேண்டுமெனில் மக்கள் ஆட்சி தத்துவத்தில் இருக்கின்ற ஒரு விடயமாகிய நிர்வாக முறைமையை நன்கு கரைத்து குடித்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மக்கள் பணி செய்ய முடியாது.
அரசியல் தலைமைத்துவத்தில் இருக்கின்ற முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ நிர்வாகத்தலைமைத்துவத்தில் இருக்கின்ற அதிகாரிகளை வைத்துத்தான் மக்கள் ஆட்சி செய்ய முடியும். ஆனால் வடமாகாணசபையில் இருக்கின்ற அதிகாரிகள் அரசியல் தலைமைத்துவத்தில் இருக்கின்ற அதிகாரிகளை வைத்து தாங்கள் ஒரு அரசியல் செய்யக்கூடியதை காணக்கூடியதாக உள்ளது.
அரசியல் சாணக்கியமும், நிர்வாகத்திறமையும் உள்ள திரு.சி.வி.கே.சிவஞானம் போன்றவர்களுக்கு மாகாணசபைக் காலத்தில் இறுதி வருடங்களிலாவது ஏதாவதொரு அமைச்சுப்பதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வடமாகாணசபை இயக்கமற்ற சபையாகமாறி மக்கள் நலன்சார்ந்த பணிகள் கிடப்பில் போடப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ஏகாதிபத்தியத்தை கைவிட்டு அரசியல் சாணக்கியம் மற்றும் நிர்வாகத்திறன் உள்ளவர்களை முன்னிலைப்படுத்த தவறினால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற அவர்களுடைய மக்களை ஏமாற்றும் புதிய பால்மா மக்கள் பயன்படுத்தாமலேயே பழுதடைந்துவிடும்.
–பண்டாரவன்னியன்–
Average Rating