தனது செல்லப் பிராணிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)!!
பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற, காதலாக இருக்குமோ? என்ற சந்தேகம் கூட வித்யா சார்ந்த சமூகத்தில் எழவில்லை.
ஆனால், பாதுகாத்திருக்க வேண்டிய பொலிஸிடமிருந்து கிடைத்த எதிரொலி விட்டேத்தியானதாகவும் பொறுப்பற்றதாகவும் காணப்பட்டதாகத் தாயார் கூறினார்………
மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை….
கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை.
பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது.
நீதிமன்றக் கட்டடத்தைத் தாண்டிய போதே வழமைக்கு மாறான இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
இராணுவ மயமான யாழ்ப்பாணக் கோட்டை, காலனித்துவ காலத்தினதாக மட்டுமல்லாது நிகழ்கால ஆக்கிரமிப்பின் சாட்சியமாகவும் நின்றது.
இராணுவ மற்றும் கடற்படைத் தளங்களையும் கடந்த எமது பயணத்தை உள்வாங்கிக்கொண்டது தீவகம்.
தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை) வெறுமையான அழகிய வீடுகள் மட்டுமல்லாது, வெறும் கட்டடங்களும், உடைந்துபோன வீடுகளின் கற்குவியல்களும் ஓடில்லாத வீடுகளும் தங்கள் குடும்பங்களை இழந்து போர், இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வின் மௌன சாட்சியங்களாகி நின்றன.
வீதிகளில் மிகமிகக்குறைவான மக்கள் நடமாட்டம் ஊரடங்கின் ஞாபகங்களை நினைவூட்டின.
வித்யா படித்த பாடசாலையைக் கடந்து செல்லும் போதுதான் அம்மாணவியின் வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையிலான பாதையின் வெறுமையினையும் மனித ஓலத்தை விழுங்கும் மௌன மரங்கள், பற்றைகள் அச்சுறுத்துவதனையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அரவங்களேதுமற்ற சாலையை நெருஞ்சி முட்களும் அலரி மரங்களும் கற்குவியல்களும் நிரப்பி நின்றன.
ஆனால், அந்தப் பாதையும் அது சார்ந்த போக்குவரத்தும் அவ்வூரின் வாழ்வியலோடு அவர்களுக்குப் பழக்கப்பட்டிருப்பினும் வித்யாவிற்கு நேர்ந்த அவலத்தின் காரணங்களுக்கான குறிகாட்டிகளாகவே அவை எமக்குத் தெரிந்தன.
வித்யாவின் தாயார், வித்யாவுக்கும் மனிதர்களுக்குமான உறவுநிலையை விட வித்யா தான் சார்ந்த சூழலுடன் இயைபாக்கம் அடைந்திருந்தமையைப் பிரதிபலிக்கும் ஞாபகங்களையே அதிகமாகப் பகிர்ந்தார்.
தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை) தினமும் பாடசாலைக்குச் செல்லுமுன்னர் வீட்டில் நிற்கும் ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் தன் உரையாடலை முடித்துவிட்டே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த வித்யா, அன்றும் அவ்வாறே இயற்கையுடனான உரையாடலை முடித்துவிட்டு, பாடசாலை சென்றவர் வீடு திரும்பவில்லை.
பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற காதலாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வித்யா சார்ந்த சமூகத்தில் எழவில்லை.
ஆனால், பாதுகாத்திருக்கவேண்டிய பொலிஸிடமிருந்து கிடைத்த எதிரொலி விட்டேத்தியானதாகவும் பொறுப்பற்றதாகவும் காணப்பட்டதாகத் தாயார் கூறினார்.
அடுத்த நாள் காலையில் வித்யாவின் வளர்ப்பு நாயுடன் தங்கையைத் தேடித் திரிந்த அண்ணனுக்கு, சில மனிதர்களால் குதறப்பட்டு அலரிப் பற்றையினுள் சிதறிப்போயிருந்த தங்கையின் உடலே கிடைத்திருக்கிறது.
அந்த இடத்தினைப் பார்வையிட்டபோது ஆத்மாவின் ஆழத்தினுள் எழுந்த வித்யாவின் வலியின் கதறலானது யாருக்கும் எட்டவில்லையே என்ற வேதனையின் உச்சம் அந்த இடத்தினைச் சூழ்ந்திருந்ததை உணர முடிந்தது.
முள்ளிவாய்க்காலில் இருந்து காப்பாற்றிய தனது பிள்ளையை, இவ்வாறு பலிகொடுத்ததென்பது தாயை அதிரவைக்க, தந்தையோ பாரிசவாதத்தின் இயலாமையிலும் மகளை இழந்த துயரத்திலும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு சென்றுவிட, தங்கை இறந்து இரு வாரங்களாகியும் உறக்கமற்றுத் தவிக்கும் அண்ணனும், வித்யாவுக்கு நீதி கிடைக்காது போய்விடுமோ என்ற ஆதங்கத்துக்குள் வித்தியாவின் உறவுகளும் தடுமாறி நிற்கின்றன.
வித்யா அனுபவித்த வேதனையின் ஆழமான அதிர்வலைகள் அலரிப்பற்றைகளை மட்டுமல்லாது வடக்கு கிழக்கு தாண்டி இலங்கை ஜனாதிபதி மாளிகையைக் கூட அசைத்திருக்கின்றன.
போருக்குப் பின்னர் ஆழங்களில் அடக்கிவைக்கப்பட்ட சமூக மௌனம் அரவமில்லாமல் அதிர்ந்திருக்கின்றது.
ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் வீதிகளில் நீதியைத் தேட, சிலர் நீதிமன்றக் கட்டடத்தின் முன்னால் நீதிமன்ற நீதிக்கும் அப்பாலான நீதியைத் தேட முற்பட்டனர்.
தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)
அமைதி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களாய் மாற, நீதிமன்ற வளாகத்தினை நீதிமன்ற நீதியின்பால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையினால் உடைத்தனர். இச்செயற்பாடு யாழ்ப்பாணத்தில், இல்லாத அமைதியைக் கேள்விக்குள்ளாக்கியதாகச் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் ஊடறுத்தல்களும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இது எதுவாக இருப்பினும் இவ்வாறான பின்புலங்களையும் நீதிமன்றத்தைக் கூட நியாயம் கேட்கும் மனநிலையை உருவாக்கிய அரசுசார் கட்டமைப்புக்கள் நிச்சயமாகப் பொறுப்புக் கூறவேண்டிய தேவைக்குள் தள்ளப்படுவது இன்னமும் உணர்ந்துகொள்ளப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் அமிழ்ந்துபோன உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கான தளமாகவும் இது பார்க்கப்பட முடியும்.
இந்த ஆரவாரங்களுக்குள் இயல்பாக வரவேண்டிய, உரிமைக்காகக் குரல்கொடுக்கும் வெளிகள், ஜனநாயகம் மற்றும் மாற்றம் என்ற போர்வைகளுக்குள் அதிகாரத்திலுள்ளவர்களால் தரப்பட்ட வெளிகள் என்பதை உணர முடியாமலேயே, ஜனநாயக வெளி காணப்படுகின்றதென்ற தொனியும் நீரோட்டத்தில் கலந்துகொண்டது.
அமைதி காப்பது என்ற வகையில் 129 பேரின் கைதும், இவ்வாறான போராட்டங்கள் நடத்துவதற்கான தொடர்ச்சியான நீதிமன்றத் தடையுத்தரவு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டமையும் நிகழ்ந்தன.
ஆனால், வித்தியா அனுபவித்த அவலத்தின் காற்று தமிழ்பேசும் சமூகங்களைத் தாண்டி சகோதர மொழி உறவுகளையும் கைகோர்க்க வைத்தது.
இங்கு வித்யாவின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்தபோதிலும் சுட்டிப்பாகச் சில விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.
தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை) குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சந்திரகாந்தன் என்பவர் அவரது மனைவியைத் துன்புறுத்தியதாக மனைவியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் பிரகாரம், அவரது மனைவி இன்னமும் அவருக்குப் பயந்து மறைவாகவே வாழ்ந்து வருகிறார்.
வித்யாவின் கொலையின் தொடர் தேடல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்பதுடன், வேறு சில வன்புணர்வுகள் தொடர்பான தகவல்களையும் போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பான புது தகவல்களையும் தருவதாக நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, நாட்டின் நீதியைக் காப்பதற்கு உறுதுணையாக நிற்க வேண்டிய பொலிஸிற்குத் தெரியாமல் இக்கொடுமைகள் நடைபெற்றிருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் இல்லை என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்துகிறது.
அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் பதவிசார்ந்த அரசியலுக்காக வழங்கப்படும் வித்யாவிற்கான ஆதரவுகள் அலைமோதத் தொடங்கின.
அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதிகளின் ஆரம்பப்புள்ளி வித்தியாவின் இறுதிப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறதா?
மூன்று மாதங்களுக்கு முன்னால் மல்லாவியில் பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவற்றினைக் காணொளிப் பதிவுகளாக்கி, பல அப்பாவிகளின் வாழ்க்கையினைக் கேள்விக்குள்ளாக்கிய அரசியல் கட்சியொன்றின் மல்லாவிப் பிரதேச சபை உறுப்பினரின் வெறித்தனத்தை வெளிக்கொணரும்படி அந்த அரசியல் கட்சியிடம் கேட்டபோது,
மௌனித்திருந்த அவர்களின் வாய்களும் பேனாக்களும் ஏனைய அரசியற்கட்சிகளும் இன்று வித்யாவை தமது அரசியல் மூலதனமாக்க முயல்வது வித்யாவின் ஆன்மாவை மீண்டும் ஒரு தடவை வலிக்க வைத்திருக்கும்.
நாட்டின் முதற்குடிமகன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் வித்யாவினுடைய குடும்பத்தினரைச் சந்தித்து தன் ஆறுதல்களைப் பகிர்ந்திருக்கிறார்.
தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)
வித்தியாவின் அம்மாவுடன் ஜெனாதிபதி…
பெண்கள் அமைப்புக்களும் மனித உரிமைகள் சார்ந்து பயணிக்கும் அமைப்புக்களும் நீதிக்கான பயணங்களைத் தொடர்கின்றன.
எல்லாமே வித்தியா என்ற மையத்தில் ஆரம்பித்தாலும் இதனுடைய ஒட்டுமொத்த பரிணாமத்தை விளங்கிக்கொண்டு அதன் மையத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை.
அத்தோடு, இதனை வித்யாவின் குடும்பம்சார் நோக்குநிலையிலும் சமூகஞ்சார் உள்ளகப் பரிமாணத்திலும் பார்ப்பதற்கான தடைகள் உள்ளன என்பது அக்குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்திய நெருங்கிய தொடர்பில் விளங்கிக்கொள்ளப்பட்டது.
வித்தியாவின் குடும்பத்தின் நுண் உளவியல்சார் விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுபவர்களும் மிகக்குறைவே. பேட்டிகள் கலந்துரையாடல்கள் என்ற பெயரில் கிடைக்கும் தகவல்கள் ஆழமான விடயங்களை வெளிக்கொண்டுவராத காரணங்களும் இன்னமும் விளக்கமின்றியே காணப்படுகின்றன.
சட்ட மற்றும் சமூக நீதிக்கான தேடுதலையும் தாண்டி, அக்குடும்பம் வித்தியா பட்ட வலிகளுக்கான பதிலையும் வேண்டி நிற்பது பதியப்பட வேண்டியதொன்றாகும்.
வித்தியாவின் வலி மாத்திரமல்ல செம்மணியின் வலியும், முள்ளிவாய்க்காலின் வலிகளும், உடைகள் களையப்பட்டு பாதுகாப்புப் பரிசோதனையில் தமிழ்ப் பெண்கள் பட்ட வலிகளும் மட்டுமல்லாது நீதிக்காகக் காத்துக்கிடக்கும் ஏனைய பெண்களின் வலிகளும் வித்தியாவின் வலியினூடாகப் பேசப்படுவது தொடருமா என்ற கேள்வியும் ஆழமாகவே காணப்படுகின்றது.
இப்போராட்டமானது பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டவர்களுக்காக மட்டுமல்லாது பாலியல் வன்புணர்வு உள உடல் சார்ந்த மற்றும் பாலியல் துபிரயோகங்கள் வீட்டு வன்முறைகள் பெண் மீதான பாரபட்சங்கள் மற்றும் உரிமை மீறல்கள் போன்ற பரந்துபட்ட தளத்தில் தொடர்ச்சியாக பேசப்படுவதாகவும் வரமுன் தடுப்பதாகவும் இருத்தல் அவசியமானதாகின்றது.
தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை) வித்தியாவுக்காக திரண்ட கூட்டத்தைப் பார்த்து இனிமேல் நாம் விழிப்பாகிவிடுவோம் என்ற ஆறுதலின் வீச்சம் அடங்கமுன்னரே பரந்தனில் வைகாசி 27ஆம் திகதி இன்னொரு சிறுமி வன்புணர்விற்குட்படுத்தப்பட்டமை எதனைச் சுட்டி நிற்கிறது என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். மறைக்கப்பட்ட நீதிகளின் மேல் நீதிக்கான பயணங்களிருப்பின் நீதியை எங்கே தேடுவது என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும்.
வித்தியாவின் மரணம் எமது விழிப்பிற்கான இறுதி எச்சரிக்கை ஒலியாக இருக்கவேண்டும்.
பெண்களை துன்புறுத்துபவர்கள், தற்கொலைக்குத் தூண்டுபவர்கள் என எல்லோரின் முகமூடிகளையும் கிழிப்பதற்கு நாம் தயாராக வேண்டும். சட்டத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தன் குற்றங்களை பணத்தினால் விலைக்கு வாங்க நினைப்பவர்களை சமூக நீதியின் பெயரால் தண்டனை பெற வைக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களின் வலிகளை உள்ளார்ந்து உணருபவர்களாக தனிமனிதன் ஒவ்வொருவனையும் மாற்ற வேண்டிய தேவை எம் சமூகத்திற்கு உண்டு.
அது தனிமனித முயற்சியினால் சாத்தியமாகக் கூடியதும் அல்ல. சமூகஞ்சார் கூட்டு உளவியலின் இணைப்பு அது. ஆயினும், தனியன்களாகிய எம் ஒவ்வொருவரும் கூட்டுப்பொறுப்பில் இணைவதன் மூலமே அது சாத்தியமாகும்.
காலத்துக்குக் காலம் இழப்புக்களை சந்திக்கும் போது மாத்திரம் சமூகஞ்சார் கூட்டுப் பொறுப்புக்கூறலைக் கையிலெடுத்துக் கூச்சலிட்டு, கூச்சல்களின் வீச்சங்கள் சிறிது சிறிதாக அடங்கிப்போக மீண்டும் பொறுப்பற்றவர்களாகாமலும், பெண்கள் சார்ந்தும் அவர்களது உரிமைகள் சார்ந்தும் பல்லாயிரக்கணக்கான பணச்செலவில் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருபவர்கள் வெறுமனே காகிதங்களில் மாத்திரம் அடைவுநிலைகளைக் காட்டாமலும் செயற்படுதல் அவசியமாகின்றது.
தொடரும் இந்த வன்முறைகளால் இன்று பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இயங்குவெளியின் அளவும் குறையக்கூடிய சாத்தியங்களே தென்படுகின்றன. குறுகிய வெளிக்குள் மட்டுப்பாடாக எம் குரல்களைக் கொடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுவோம்.
எமக்காகக் குரல்கொடுக்கும் உரிமையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த பிறகு ஆர்ப்பாட்டங்கள் செய்வதை விட வருமுன் காக்கும் வழிமுறைகள் மனித அவலங்களிற்கு நீதி கொடுக்கும் சாட்சியங்களாக மாறவேண்டும்.
இழந்த பிறகு, எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் தலைவர்கள் வருவார்கள். அவர்களால் எம் வலிகளை புரிந்துகொள்ளவும் முடியாது. எம் வலிகளின் மேல் அவர்கள் ஆசனங்களைப் போட்டிருக்கிறார்கள்.
கந்தகச் செருப்புக்களுக்கு அவர்கள் காவல் காக்க, கந்தகச் செருப்புக்கள் அவர்களைக் காவல் காக்கின்றன. பட்டினியின் வலி பட்டினியில் இருப்பவனாலேயே உணர்ந்துகொள்ள முடியும்.
பசியிலிருக்கும் பணக்காரனுக்கு பட்டினி தொடர்பான விளக்கத்தைக் கேட்க முடியுமே தவிர, அதனை உணர்வது யதார்த்தமானதாக இருக்க முடியாது.
இவ்வலிகளைப் புரிய மறுத்தலை விடுத்து புரிந்துகொள்ள முயற்சியாவது செய்வோம். பாதிக்கப்படக்கூடிய நிலையை மட்டுமல்லாது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையையும் சமூகமும் சமூகஞ்சார் கட்டமைப்புக்களும் உருவாக்குகின்றன என்பதும் உணரப்படவேண்டியதாகும்.
தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை) பகலவனின் ஒளியில் அழகாகத் தெரிந்த தீவகம் இருட்டில் மயான அமைதியில் சலனங்களற்று கிடந்தது.
அந்த மயான அமைதியில் மீண்டும் பயணிக்கும்போது உயிரின் வலியை உணர்ந்துகொள்ள முடிந்தது. குண்டூசியின் சத்தம் கூட இல்லாத அந்த அந்தகாரத்தில் யானை பிளிறினால் கூட குரல் கேட்டு ஓடி வர மனித சஞ்சாரமே இல்லை.
அந்த அந்தகாரத்தில் வித்தியாவின் ஒலியும் மரங்களை ஊடுருவி அந்த உப்புக் காற்றினுள் பரந்து கிடக்கின்றது. இதற்குச் சாட்சிகளாக மரங்களும் முட்களும் மௌனித்துப்போயிருக்கின்றன. அந்தச் சாட்சியங்களை உணர்ந்து கொள்ளக்கூடிய வலிமை மனிதர்களுக்கு எப்போது வரும்?
-நவரஞ்சினி நடராஜா மற்றும் தவச்செல்வி- (Thanks… ILAKKIYAA)
Average Rating