அவுஸ்திரேலிய பயணத்தை தவிர்க்குமாறு அர்ஜுனா கூறியதை ஏற்க மறுத்தார் முரளிதரன்
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை தவிர்க்கும்படி அர்ஜுன ரணதுங்க கூறிய அறிவுரையை ஏற்க முரளிதரன் மறுத்துவிட்டார். சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது சில ஆட்டங்களில் அவுஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை ரசிகர்கள் `குரங்கு’ என்று இனவெறி தூண்டும் வகையில் கிண்டல் செய்ததாக பலத்த சர்ச்சை கிளம்பியது. ஐ.சி.சி. தலையிடும் அளவுக்கு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. போட்டியை விட இனவெறி சர்ச்சையே பெரிதாக பேசப்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம் இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது அந்த நாட்டு ரசிகர்களும் இதேபோல் நடந்து கொள்ளலாம் என்ற ஒரு வித அச்சம் நிலவுகிறது. இதற்கு மத்தியில், இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் 2 டெஸ்டில் விளையாடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி 8 ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் ஏற்கனவே அவுஸ்திரேலிய ரசிகர்களால் சீண்டப்பட்டவர். 1995-96 ஆம் ஆண்டு அவர் அங்கு சென்றபோது பந்தை எறிவதாக நடுவர், திரும்பத் திரும்ப குற்றம்சாட்டினார். ரசிகர்களும் முரளிதரனுக்கு தொந்தரவு கொடுத்தனர். இதனால் 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முரளிதரன் தவிர்த்தார். இருப்பினும் அதன் பிறகு உலக அணிக்காக சிட்னியில் நடந்த போட்டியில் பங்கேற்றார்.
35 வயதான முரளிதரன் இதுவரை 113 டெஸ்டில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இன்னும் 9 விக்கெட்டுகள் எடுத்தால், டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னின் (708 விக்கெட்) சாதனையை முறியடித்து விடுவார்.
தற்போதைய பயணத்தில் அந்தச் சாதனை முறியடிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்புள்ளது. அவ்வாறு நடக்கும்போது அந்த நாட்டு ரசிகர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்குமென்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு இந்தப் பயணத்தை தவிர்க்கும் படி இலங்கை அணியின் முன்னாள் கப்டன் அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது; அவுஸ்திரேலியாவில் பெருமளவு தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை தவிர்க்கும்படி முரளிதரனிடம் நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர் அங்கு போக விருப்பமுடன் இருக்கிறார். இது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அவர் அங்கு போகக்கூடாது. என்றாலும் அங்கு நடப்பதை எதிர்கொள்ளக்கூடியவர் முரளிதரன். அதனை அவர் பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.
ரணதுங்க தெரிவித்தது குறித்து முரளிதரன் கூறுகையில், `நான் எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்தவன். எனக்கு சவால்கள் ஏற்படும்போது, மேலும் அது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் தான் ஏற்படும். அவுஸ்திரேலிய மண்ணில் வோர்னின் சாதனையை முறியடிக்க விரும்புகிறேன். அது முடியாவிட்டால் சொந்த மண்ணில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடக்கும்’ என்றார்.
ரணதுங்க கருத்தில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்ட் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்; `மற்றவர்களின் முடிவை கேட்காமல் சொந்தமாக முடிவு எடுக்கக்கூடியவர் முரளிதரன். அவர் இதற்கு முன் அவுஸ்திரேலியா வந்திருக்கிறார். அவரது வருகை கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம்.நாங்கள் அவரை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
இந்த நிலையில் கப்டன் மஹேல ஜெயவர்தன, ஜயசூரியா, முரளிதரன், அத்தபத்து உள்ளிட்ட 17 பேர் கொண்ட இலங்கை அணி நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. இலங்கை அணி இதுவரை அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்டிலும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.