சுனந்தாவின் சாவை இயற்கை மரணம் என்று அறிவிக்க நெருக்கடி கொடுத்தனர்: டாக்டர்கள் திடுக்கிடும் தகவல்!!
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் 52 வயது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கடந்த செப்டம்பர் மாதம் பிரேத பரிசோதனையின் மீதான இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், சுனந்தாவின் மரணம் விஷத்தால் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனினும் சுனந்தாவின் உடலில் எவ்வாறு விஷம் கலந்தது? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்காமல் டெல்லி போலீசார் திணறி வருகின்றனர். சுனந்தா இறந்து கிடந்த ஓட்டலின் ஊழியர்கள், சசிதரூர், அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் வழக்கின் இன்னொரு திருப்பமாக சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் இருவர் சுனந்தாவின் சாவை இயற்கை மரணமாக அறிவிக்கும்படி தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக நேற்று பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதிர் கே.குப்தா தலைமையில் மூத்த டாக்டர் ஆதர்ஷ்குமார், டாக்டர் ஷசாங் புனியா ஆகியோர் கொண்ட குழுவினர் சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இவர்களில் ஆதர்ஷ் குமார், சுதிர் குப்தா இருவரும்தான் புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
இது தொடர்பாக டாக்டர் ஆதர்ஷ்குமார், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘‘சுனந்தாவின் சாவை இயற்கை மரணமாக அறிவிக்கும்படி எங்கள் குழுவுக்கு நெருக்கடி தரப்பட்டது. எனினும் நாங்கள் தொழில் ரீதியான கொள்கை நிலைக்கு உட்பட்டு எந்த அழுத்தத்துக்கும் அடி பணியாமல் விஷத்தால் சுனந்தாவின் மரணம் நிகழ்ந்தது என்ற பிரேத பரிசோதனையின் உண்மை முடிவை வெளியிட்டோம்’’ என்று கூறி இருக்கிறார்.
இதேபோல் டாக்டர் சுதிர் குப்தாவும், மத்திய மந்திரி நட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
டாக்டர் எம்.சி. மிஸ்ரா(எய்ம்ஸ் இயக்குனர்) என்னிடம் சுனந்தாவின் சாவு இயற்கை மரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கொடுக்கும்படி வற்புறுத்தினார். இது எங்களின் பரிசோதனை முடிவில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை திட்டமிட்டதாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்ட சில இ-மெயில்கள் பரிமாற்றம் எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சசிதரூர் இடையே நடந்தன.
எனினும், எவ்வித அழுத்தத்துக்கும் அடிபணியாமல் பிரேத பரிசோதனையின்போது என்ன முடிவு கிடைத்ததோ அதையே அதிகாரபூர்வமாக வெளியிட்டேன். இதன் காரணமாக எனக்கோ, எங்களுடைய தடய அறிவியல் துறைக்கோ எய்ம்ஸ் இயக்குனர் கடந்த ஓராண்டாக போதிய ஒத்துழைப்பு தருவதில்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை நடத்திய எய்ம்ஸ் டாக்டர்களின் புதிய குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரை இணைத்து குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால் சுனந்தா மரணமடைந்த வழக்கு சூடு பிடித்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் சுனந்தாவின் மரணம் குறித்த வழக்கை டெல்லி போலீசார் விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Average Rating