குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான ஆண்மகனை கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா?: பெண் நீதிபதி நச் கேள்வி!!
கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய பெண் என்று குறிப்பிடுவதுபோல் கற்பழிப்பு வழக்கில் இருந்து நிரபராதியாக விடுவிக்கப்பட்ட ஆணையும் கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா? என்று பெண் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் 7 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை விவாகரத்து செய்து விட்டு, டெல்லி பகுதியில் வீட்டு வேலைகள் செய்தபடி, 3 குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஒருவர், தனது உடலை மட்டும் பயன்படுத்தி கொண்டு தன்னை கைவிட்டு விட்டதாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த மார்ச் மாதம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
‘என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டியவர் எனது ஊரை சேர்ந்தவர் என்பதால் அவரது வலையில் நான் விழுந்து விட்டேன். எனக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என தனது புகார் மனுவில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் அந்த நபரை கைதுசெய்த போலீசார், அவர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருந்த காலகட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் தன்னுடன் உடல்ரீதியான தொடர்பு வைத்திருக்கவில்லை என புகார்தாரர் பல்டி அடித்தார். குற்றம்சாட்டிய நபரையே திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போது அவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருவதாகவும், அதனால் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து விடும்படியும் அந்தப் பெண் கேட்டுக்கொண்டார்.
இவ்வழக்கை விசாரித்துவரும் பெண் நீதிபதியான நிவேதிதா அனில் ஷர்மா இவ்விவகாரத்தில் தனது அதிருப்தியையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
“கற்பழிப்பு வழக்கில் கோர்ட்டுகள் உரிய தண்டனை வழங்குவதில்லை என நாடு முழுவதும் கூக்குரல் எழுந்து வருகின்றது. ஆனால், இந்த வழக்கில் புகார் அளித்த பெண்ணே, பிறழ்சாட்சியாக மாறியதுபோல், கற்பழிப்பு வழக்குகளில் போலீஸ் தரப்பு சாட்சியங்களுடன் கோர்ட்டில் நீதிபதியின் முன்னிலையில் அளிக்கப்படும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஒத்துப்போகாத பட்சத்தில், கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு ஆணுக்கு எளிதில் தண்டனை விதித்துவிட முடியாது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கற்பழிப்பு குற்றச்சாட்டுகளின்கீழ் கைதாகி, குறிப்பிட்ட காலம்வரை விசாரணை காவல் மற்றும் நீதிமன்ற காவலின்கீழ் சிறை தண்டனை அனுபவித்து, புகார் அளித்த பெண்ணால் ‘இவர் என்னை கற்பழிக்கவில்லை. நானும் சம்மதித்தே இருவரும் உடல் ரீதியான உறவு வைத்து கொண்டோம்’ என அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த குற்றம்சாட்டப்பட்ட நபர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இந்நிலையில், கற்பழிப்பில் இருந்து தப்பிய பெண்ணை ஆங்கிலத்தில் ‘ரேப் சர்வைவர்’ என்று அழைப்பதுபோல், கற்பழிப்பு வழக்கில் இருந்து தப்பிய ஆணும் ‘ரேப் கேஸ் சர்வைவர்’ என்று அழைக்கப்பட வேண்டுமா? என்ற நிலையில் இன்றைய கற்பழிப்பு வழக்குகளின் நிலைமை மாறியுள்ளது” என தனது தீர்ப்பில் கண்டனம் தெரிவித்த நீதிபதி நிவேதிதா அனில் ஷர்மா, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
Average Rating