கூடங்குளம் அருகே தாய்–மகன் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது!!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள காடுதுளா குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் மற்றும் சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்.பி.விக்ரமன், வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி, கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், உவரி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்த பெண் மற்றும் சிறுவனின் முகம் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டிருந்தது. இதனால் 2 பேரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் யார், அவர்களை கொன்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர்கள் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் டி.சி.நகரை சேர்ந்த சகாய ஆரோக்கியம் என்பவரின் மனைவி லதா (வயது 32) மற்றும் அவர்களது மகன் டேனியல் (7) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படையினர் கோவளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது லதாவுக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்(34) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவே அவர் லதாவையும், டேனியலையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
எனது சொந்த ஊர் கூடுதாழை. எனது மனைவியின் சொந்த ஊர் கோவளம். இதனால் திருமணமானதும் கோவளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். மேலும் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்தேன். இந்நிலையில் எனக்கும் லதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. லதாவின் கணவர் சகாய ஆரோக்கியம் துபாய் நாட்டில் மீனவராக வேலை செய்து வருவதால் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தோம். அப்போது உல்லாசமும் அனுபவித்தோம்.
நேற்று முன்தினம் காலை லதா என்னிடம் உவரி கப்பல் மாதா ஆலயம், காடுதுளா குழந்தைஇயேசு ஆலயம் ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நான் அவரையும், அவரது மகன் டேனியலையும் உவரிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றேன். முதலில் காடுதுளா குழந்தைஇயேசு ஆலயத்திற்கு சென்றோம். அங்கு பிரார்த்தனை செய்து விட்டு வெளியே வந்த லதா, என்னை உல்லாசத்துக்கு அழைத்தார்.
ஆனால் நான் மறுத்து விட்டேன். அப்போது அவர், நீ வரவில்லையென்றால் உன்னை வெளியில் சொல்லி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் லதாவை சரமாரி தாக்கி கீழே தள்ளினேன்.
பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கினேன். இதில் லதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதனை லதாவின் மகன் டேனியல் பார்த்து கொண்டிருந்தான். அவனை விட்டால் வெளியில் சொல்லிவிடுவான் என்று எண்ணி அவனது தலையிலும் கல்லால் தாக்கினேன். இதில் அவனும் இறந்து விட்டான். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கூறியது உண்மைதானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating