காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!!
சென்னை ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ரூபஸ்ரீ(வயது 21). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னை தியாகராயநகரில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்தார்.
நேற்று காலை 9 மணி அளவில், ரூபஸ்ரீ தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு, தியாகராயநகர், தியாகராயர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். குளோபல் துணிக்கடை அருகில் போகும் போது வாலிபர் ஒருவர் வழிமறித்து அவரிடம் சண்டை போட்டார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். திடீரென்று அந்த வாலிபர், ரூபஸ்ரீயை தாக்கத் தொடங்கினார். ரூபஸ்ரீ நிலை குலைந்தார்.
அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரூபஸ்ரீயின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் ரூபஸ்ரீ ரோட்டில் சாய்ந்தார்.
உடனே பொதுமக்கள் ரூபஸ்ரீயுடன் சண்டை போட்ட வாலிபரை மடக்கிப் பிடிக்க விரட்டினார்கள். என்னை பிடித்தால் குத்தி விடுவேன் என்று வாலிபர் கத்தியை சுழற்றினார். இதனால் பொதுமக்கள் அவரை நெருங்க முடியவில்லை.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், கத்தி வாலிபரை விரட்டி பிடித்து கைது செய்தனர். பாண்டிபஜார் போலீஸ் நிலையத்துக்கு அந்த வாலிபரை அழைத்துச் சென்றனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரூபஸ்ரீயை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கத்தி வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
அவரது பெயர் ஹேமந்த்குமார்(24). தாம்பரம் சேலையூர், மாணிக்கவாசகர் நகரைச் சேர்ந்தவர். அவரும் பட்டதாரி தான். ரூபஸ்ரீயை கத்தியால் குத்தி கொல்ல முற்பட்டது ஏன்? என்று அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
நானும், ரூபஸ்ரீயும் முதலில் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தோம். அப்போது அவர் மீது நான் அளவில்லாத காதல் கொண்டேன். அவர் என்னிடம் சிரித்து பேசுவார். அதன் அர்த்தம் புரியாமல் நான் அவரை காதலிப்பதாக சொன்னேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்கவில்லை. சிரித்து பேசியது நட்பாகத்தான், காதலால் இல்லை, என்று எளிதில் எனது காதலை தூக்கிப்போட்டு விட்டார்.
ஆனால் அவரை என்னால் எளிதில் மறக்க முடியவில்லை. தொடர்ந்து எனது காதலை வலியுறுத்தி வந்தேன். எனது தொல்லை பொறுக்காமல், ரூபஸ்ரீ எனது காதலை உதறியது போல,வேலையையும் உதறி விட்டு போய் விட்டார். அதன் பிறகு அவர் தியாகராயநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.
அங்கும் வந்து அவருக்கு தொல்லை கொடுத்தேன். அவரை மறக்க முடியாமல் தவித்தேன். எப்படியும் அவரை என் வழிக்கு கொண்டு வந்து விடலாம், என்று நினைத்தேன். இந்த நிலையில் அவர் வேறொரு வாலிபருடன் சிரித்து பேசியபடி செல்வதை பார்த்தேன். அதை கூட எனது மனது ஏற்கவில்லை. நமக்கு சொந்தமான ரூபஸ்ரீ எப்பபடி இன்னொருவருடன் சிரித்துப்பேசுவது, என்று என்மனம் பொறுமியது.
இதுபற்றி ரூபஸ்ரீயை நேரில் சந்தித்து கேட்டபோது, அவர் என்னை கண்டித்தார். சிரித்து பேசினால் காதலிப்பதாக தப்பாக அர்த்தம் செய்வது உனது வேலையாக உள்ளது. தயவு செய்து என்னை விட்டு, விடு, நான் யாரையும் காதலிக்கவில்லை. உன்னையும் காதலிக்கவில்லை. உன்னை காதலிக்கும் பெண்ணை, நீ காதலி என்று வசனம் பேசினார் ரூபஸ்ரீ.
காதலிக்க வேண்டாம். என்னை திருமணம் செய்து கொள், என்று கெஞ்சினேன். திருமணம் சொர்க்கத்தில் நியமிக்கப்படுவது. நீயோ, நானோ தீர்மானிக்க முடியாது, என்று அவர் திருமணத்துக்கும் மறுத்தார்.
இதனால் வேதனைப்பட்ட நான், எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று என்னிடம் இருந்த கத்தியால் ரூபஸ்ரீயை குத்தி விட்டேன்.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் ஹேமந்த்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை முயற்சி உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் ஹேமந்த்குமார் மீது போலீசார் வழக்கு போட்டுள்ளனர். அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Average Rating