ஆந்திராவில் ஐம்பொன் சிலையை திருடிய கல்லூரி மாணவர்கள் 11 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் வெங்கிடகிரி காசி விஸ்வநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி ஐம்பொன் சிலை இருந்தது.
வெங்கிடகிரி மகாராஜா 1760–ம் ஆண்டு பிரதிஷ்டை செய்து வழங்கிய இந்த சிலை 75 கிலோ எடை கொண்டதாகும். உள்நாட்டு சந்தையில் இந்த சிலையின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.
கடந்த ஏப்ரல் மாதம் 10–ந் தேதி இந்த ஐம்பொன் சிலை கொள்ளை போனது. கோவிலை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் சிலையை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குண்டூர் அருகே பேரேசரளா பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் அந்த வழியாக வந்தது. அந்த காரை போலீசார் வழி மறித்து நிறுத்தினர்.
காருக்குள் 12 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது 11 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. எங்கு செல்கிறீர்கள்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்திய போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காருக்குள் ஐம்பொன் சிலை இருப்பது தெரியவந்தது. அது பற்றி விசாரித்தபோது அவர்களிடம் சரியான பதில் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 12 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த ஐம்பொன் சிலை வெங்கிடகிரி காசி விஸ்வநாதர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரில் வந்த இடிகட்லா சீனவாசலு, நரசிம்மலு, ஸ்ரீகாந்த், செங்கல்ராயலு, கேத்திநேனிநாயுடு, பென்சலயா (வயது 72) உள்பட 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் பென்சலயா தவிர மற்ற அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள்தான் வெங்கிட கிரி காசி விஸ்வநாதர் கோவி லில் தட்சிணாமூர்த்தி ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துள்ளனர்.
கோவிலில் ஐம்பொன் சிலை இருப்பதை தெரிந்து கொண்ட அவர்கள் கோவில் அருகே லாட்ஜ் எடுத்து தங்கி திட்டமிட்டு இரும்பு கம்பியால் கோவில் கதவை உடைத்து சிலையை கொள்ளையடித்துள்ளனர்.
அந்த சிலையை வெளிநாட்டில் விற்க திட்டமிட்ட அவர்கள் இங்கு புரோக்கராக செயல்பட்ட பென்சலயாவை அணுகியுள்ளனர். சிலையை கொள்ளையடித்த பின்னர் பென்சலயாவை தொடர்பு கொண்ட கல்லூரி மாணவர்கள் சிலை பற்றி கூறி உள்ளனர்.
மாதிரிக்காகவும் ரேட் பேசுவதற்காகவும் அந்த சிலையில் 800 கிராம் அளவுக்கு உடைத்து பென்சலயா வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் சிலையை வாங்க பென்சலயா துபாயில் ஆள்பிடித்து வைத்திருந்ததாக தெரிகிறது.
வெளிநாட்டு சந்தையில் சிலை ரூ.100 கோடி வரை விலை போகும் என்று கூறப்படுகிறது. எனவே கல்லூரி மாணவர்களிடம் விலை பேசி சிலையை வாங்க பென்சலயா முடிவு செய்தார்.
இதற்காகவே கல்லூரி மாணவர்களும், பென்சலயாவும் சிலையுடன் பேரேசரளா பஸ் நிலையம் அருகே காரில் வந்துள்ளனர். துபாயில் சிலையை விற்பதற்காக பேரம் பேசியபடியே காரில் வந்தபோதுதான் போலீசில் 12 பேரும் சிக்கி உள்ளனர்.
Average Rating