கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு!!
கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது என்று கூறிய மும்பை ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மும்பையில் பஞ்சாப் நேசனல் வங்கியின் குர்லா கிளைக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி முன்ஷி முகமது ஷேக் என்ற வாடிக்கையாளர் வந்தார். அவர் வங்கியில் ரூ.500 மதிப்புள்ள 17 நோட்டுகள், ரூ.1000 மதிப்புள்ள ஒரு நோட்டு என மொத்தம் ரூ.9,500-யை டெபாசிட் செய்தார். அதில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக காசாளர் சந்தேகப்பட்டார்.
உடனே முன்ஷி முகமது ஷேக்கை, சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிய காசாளர் அந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு வங்கி மேலாளரிடம் சென்றார். வங்கி மேலாளர் அந்த நோட்டுகளை ஆய்வு செய்தபோது, அவை கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. இந்த நிலையில் அங்கு நின்று கொண்டு இருந்த வாடிக்கையாளர் முன்ஷி முகமது ஷேக்கை காணவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீசார் வங்கிக்கு விரைந்து வந்தனர். அந்த நேரத்தில் முன்ஷி முகமது ஷேக்கும் வங்கிக்கு திரும்பி வந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். கள்ள நோட்டுகள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் அவர் மீது மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்ட முன்ஷி முகமது ஷேக்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து முன்ஷி முகமது ஷேக் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன்னிலையில் வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ஒருவர் கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் அவர் குற்றவாளி ஆகி விட முடியாது என்று கூறி, கீழ்கோர்ட்டில் 5 ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட முன்ஷி முகமது ஷேக்கை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-
தண்டிக்கப்பட்ட நபர் தான் கையில் வைத்திருந்தது கள்ள நோட்டுகள் தானா? என்பதை அறிந்து இருந்தாரா? என்பதை அரசு தரப்பில் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. கள்ள நோட்டுகளை பயன்படுத்துவதும், வைத்திருப்பதால் மட்டுமே குற்றத்துக்கு போதுமான ஆதாரம் என்று கூறி விட முடியாது. அது கள்ள நோட்டுகள் தானா? என்பதை சம்பந்தப்பட்ட நபர் அறிந்து இருந்தால் மட்டுமே அவரை குற்றவாளி என கருத முடியும். கள்ள நோட்டுகள் என சந்தேகம் இருப்பதாக காசாளர் சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தபோதிலும், அந்த நபர் மீண்டும் வங்கிக்கு திரும்பி வந்து உள்ளார். அவர் தப்பி ஓடவில்லை. எனவே கீழ்கோர்ட்டில் தண்டிக்கப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
Average Rating