வேளச்சேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பெண் என்ஜினீயர் படுகொலை: கொள்ளையர்கள் கைவரிசையா?
வேளச்சேரி அருகே பெரும்பாக்கத்தில் நடந்த இக்கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
பெரும்பாக்கம் அந்தோணியார் நகர் 2–வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜீவ். கம்ப்யூட்டர் என்ஜீனியரான இவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (30).
இவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்தான். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆர்த்தியும், ராஜீவும் உறவினர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஆர்த்தி சில மாதங்களாக குழந்தையை கவனிப்பதற்காக வேலையில் இருந்து நின்று விட்டார்.
நேற்று ராஜீவ் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். ஆர்த்தியும், குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்தனர். இரவு 11 மணி அளவில் ராஜீவ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த ராஜீவ் கடும் அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள், ஆர்த்தி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வாயில் நுரை தள்ளி இருந்தது. ஆர்த்தியை கழுத்தை நெரித்து யாரோ கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதைப் பார்த்ததும் ராஜீவ் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் திரண்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென் சென்னை இணை கமிஷனர் அருண், பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் நடராஜனும் போலீஸ் படையுடன் விரைந்தார். கொலையுண்ட ஆர்த்தி அணிந்திருந்த தாலி செயின் மாயமாகி இருந்தது. இதையடுத்து நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இது தொடர்பான தடயங்களை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
ஆர்த்தியின் உடலில் வேறு எங்காவது காயங்கள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஆர்த்தியின் மேல் உள்ளாடைக்குள் (பிரா) ஒரு சிறிய பாலித்தீன் கவர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து போலீசார் பிரித்து பார்த்தனர்.
அப்போது அதில் தாலியும், 2 பக்கங்களில் எழுதப்பட்ட கடிதமும் இருந்தது. ‘‘ஓம் நமசிவாய….தாலி எனக்கு வேண்டும்…. அன்புக்காக ஏங்குகிறேன். என்னை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன்’’ என்பது போன்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. தனக்கு திருமணமானதில் தொடங்கி தொடர்ந்து கணவன்–மனைவிக்குள் நிலவி வந்த பிரச்சினைகள் பற்றியும் அதில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. கொள்ளையடிக்கப்பட்டதாக கருதப்பட்ட செயினில் மாட்டப்பட்டிருந்த தாலி டாலர் கிடைத்ததால் நகைக்காக ஆர்த்தி கொலை செய்யப்படவில்லை என்று கருதி போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து தாலிச் செயின் வீட்டில் எங்காவது வீசப்பட்டிருக்கலாம் என நினைத்து போலீசார் தேடிப் பார்த்தனர். ஆனால் செயின் கிடைக்கவில்லை. அதனை கொலையாளி திருடிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதே நேரத்தில் அவரது ஆடைக்குள் தாலியும் கடிதமும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் புதிய குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து ஆர்த்தியின் கொலையில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. அதில் நீடிக்கும் மர்ம முடிச்சுகளுக்கு விடை காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜாக்கெட்டுக்குள் நகையை மறைத்து வைத்ததுடன், பரபரப்பான கடிதத்தையும் ஆர்த்தி எழுதி வைத்திருப்பதால், நிச்சயம் அவரது மரணத்துக்கு பின்னால் குடும்ப பிரச்சினையும் பூதாகரமாக இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஆர்த்தியின் கணவர் ராஜீவ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். ஆர்த்தியின் கழுத்து இறுக்கப்பட்டு வாயிலும் நுரை தள்ளி காணப்பட்டதால் கொலையாளி, அவரை கழுத்தை நெரித்ததுடன், வாயிலும் விஷத்தை ஊற்றியிருக்கலாமோ? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இக்கொலை சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆர்த்தியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் இருந்து அவரது பெற்றோர் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்களிடம் ஆர்த்தியின் குடும்ப பிரச்சினை குறித்து போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்த்தியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பின்னரே, ஆர்த்தியின் கொலையில் நீடிக்கும் மர்மங்கள் விலகி, கொலையாளியும் சிக்குவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தாயை இழந்து தவித்து வரும் 10 மாத பெண் குழந்தை மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் கொலையாளி கொள்ளையனா? அல்லது குடும்ப பிரச்சினையில் ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றிய உறுதியான முடிவுக்கு போலீசாரால் வரமுடியவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.
Average Rating