36 வயதினிலே (திரைவிமர்சனம்)!!
ஜோதிகா அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ரகுமான் எப்.எம். வானொலியில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளான அமிர்தா பள்ளியில் படித்து வருகிறாள்.
ஜோதிகா 36 வயது நிரம்பியும் அப்பாவியாகவும், ரொம்பவும் வெகுளித்தனமாகவும் இருக்கிறார். இது அவரது கணவரான ரகுமானுக்கு பிடிப்பதில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜோதிகா மீது எந்த மதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் தான் பார்க்கும் வேலை பிடிக்காததால் அயர்லாந்து சென்று அங்கு வேலை பார்க்க எண்ணுகிறார். குடும்பத்துடன் அயர்லாந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்.
இந்நிலையில் ஒருநாள் ஜோதிகாவின் மகள் படிக்கும் பள்ளிக்கு குடியரசுத்தலைவர் வருகை தருகிறார். அப்போது அவரிடம் தன்னுடைய அம்மா, தங்களிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னார் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் அமிர்தா.
அந்த கேள்வியை கேட்டு வியக்கும் குடியரசு தலைவர், அவளிடம் உன் அம்மாவை என்னை வந்து பார்க்கச் சொல். அவரிடம் இதற்கு விடை கூறுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறார்.
உடனே ஜோதிகாவை சந்திக்க குடியரசுத்தலைவர் விருப்பப்படுகிறார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிடுகிறது. ஜோதிகாவுக்கு இதில் கர்வம் இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கிறது. அவ்வாறு பயம் கலந்த பீதியுடன் தன்னை சந்திக்கும் ஜோதிகாவை குடியரசுத்தலைவர் நலம் விசாரித்ததுமே, ஜோதிகா மயங்கி கீழே விழுந்து விடுகிறார்.
இது அங்குள்ள அனைவருக்கும் சிரிப்பலையை உண்டாக்குகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரவிவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவை கேலி செய்து, நிறைய கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதனால் ஏற்கனவே ஜோதிகா மீது மதிப்பு இல்லாமல் இருந்து வரும் கணவர் ரகுமானுக்கும், பள்ளியில் கிண்டலுக்கு உள்ளாவதால் மகள் அமிர்தாவுக்கும் ஜோதிகா மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
பள்ளியில் தொடர்ந்து நண்பர்கள் கிண்டலடிப்பதால் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள் அமிர்தா. இதற்குள் அயர்லாந்து வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்த ரகுமானுக்கு அங்கு செல்ல விசா கிடைத்துவிடுகிறது. கூடவே அரவது மகளுக்கும் விசா கிடைத்துவிடுகிறது.
ஆனால் ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை. ஜோதிகாவுக்கு 36 வயது ஆகிவிட்டபடியால் 36 வயது நிரம்பிய பெண் அயல்நாட்டில் வேலைக்கு செல்ல முடியாது என்ற விதிமுறையின் படி இவருக்கு மட்டும் விசா ரத்தாகிவிடுகிறது.
எனவே ஜோதிகாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு ரகுமானும், அவரது மகளும் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். இந்த நிலையில்தான் ஜோதிகாவின் கல்லூரி தோழியான அபிராமி ஜோதிகாவை சந்திக்கிறார். அவளது நிலைமையைக் கண்டு வருத்தமடைகிறாள்.
ஆனால் உண்மையில் ஜோதிகா கல்லூரி பருவத்தில் புரட்சிகரமான, துடிதுடிப்பான பெண்ணாகவும், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை என ஆனபிறகு அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அடக்க ஒடுக்கமாக மாறிவிட்டாள். ஆனால் அது அவளை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை அபிராமி அவளுக்கு புரிய வைக்கிறார்.
மேலும், அவளுடைய தூண்டுதலான வார்த்தைகளால்தான் தான் பெரிய நிலையில் இருப்பதையும் அபிராமி, ஜோதிகாவிடம் எடுத்துக் கூறுகிறார். மீண்டும் பழைய ஜோதிகாவாக மாற வேண்டும் என்று அவளை வற்புறுத்துகிறார்.
இறுதியில் ஜோதிகா பழைய ஜோதிகாவாக மாறினாரா? பிரிந்துபோன இவரது குடும்பம் இவருடன் மீண்டும் சேர்ந்ததா? குடியரசுத்தலைவரிடம் இவர் கேட்ட கேள்வி என்ன? என்பதே மீதிக்கதை.
36 வயது நிரம்பிய பெண்ணாக ஜோதிகா பளிச்சிடுகிறார். தலையில் சிறிது நரைத்த முடியை வைத்து இவரை மற்றவர்கள் கிண்டலடிக்கும் காட்சிகளில் அழகான முகபாவணைகளை கொடுத்திருக்கிறார்.
மேலும், தான் குடியரசுத்தலைவரை சந்திக்கப் போவதை மற்றவர்களிடம் சொல்லி பந்தா செய்யும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தாலும், அதே பளபளப்பு, துள்ளலான நடிப்பு, வித்தியாசமான முகபாவணைகள் என எதையும் மறந்துவிடாமல் அதே இளமையுடன் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.
படம் முழுக்க ஜோதிகாவுக்குத்தான் நடிக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், அவ்வப்போது சிறுசிறு காட்சிகளில் வந்துபோகும் ரகுமான், நாசர், அபிராமி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே கொடுத்திருக்கிறார்கள். ஜோதிகாவின் மகளாக நடித்திருக்கும் அமிர்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்றாலும், தமிழுக்கு ஏற்றார்போல் அழகான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ். ஆனால், படம் மெதுவாக செல்வதுதான் படத்திற்கு சற்று தொய்வைத் தருகிறதே தவிர, காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் அசத்தல். பின்னணி இசையிலும் கோலோச்சியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் திவாகரனின் ஒளிப்பதிவு. இவரது கேமரா கண்கள், ஒவ்வொரு காட்சியையும் நம்மை படத்தோடு ஒன்றும்படி செய்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘36 வயதினிலே’ பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
Average Rating