கதவுகளை திறக்கும் அமெரிக்கா!!
பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது.
அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய அமெரிக்க கடற்படையின் சி-2 ரக போக்குவரத்து விமானம்.
அமெரிக்க கடற்படையினரின் பயன்பாட்டுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட அந்த விமானத்தில், இரண்டு விமானிகள், இரண்டு விமானப் பணியாளர்கள், மற்றும் சில அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர். ஆனால் அவர்கள், அதிலிருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் நுழையவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்ததாக உள்ள, விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானம், குறுகிய நேர ஓய்வுக்குப் பின்னர், இலங்கையின் தென்கிழக்குத் திசையில் விரிந்து கிடக்கும் இந்தியப் பெருங்கடல் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.
அந்த விமானத்தில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா மற்றும் நான்கு இலங்கைக் கடற்படை அதிகாரிகள் பயணத்தை மேற்கொண்டனர்.
இலங்கைத் தீவின் கரையில் இருந்து சுமார் 225 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலுக்குள் இருந்த, குறுகிய மிதக்கும் ஓடுதளம் ஒன்றில் அந்த விமானம் தரையிறங்கியது.
அங்கு கால் வைத்ததுமே, அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தனர். அதற்குக் காரணம், அந்த விமானம் தாங்கிக் கப்பலின் பிரமாண்டம் தான்.
333 மீற்றர் நீளத்தையும், 6062 மாலுமிகள் மற்றும் பணியாளர்களையும் கொண்டதே, அமெரிக்க கடற்படையின், யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற அந்த விமானம் தாங்கிக் கப்பல். அதனை ஒரு மிதக்கும் தீவு என்றே கூறலாம். சுமார் 90 போர் விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானம்தாங்கி கப்பல், அணுசக்தியில் இயங்கும் திறன் கொண்டது.
பாகிஸ்தானில் கொல்லப்பட்டு அமெரிக்க கொமாண்டோக்களால் எடுத்துச் செல்லப்பட்ட அல்கைதா தலைவர் பின்லேடனின் உடல் இந்தக் கப்பலில் இருந்தே, கடலினுள் மூழ்கடிக்கப்பட்டது. பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன், தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஹவாய் தீவு நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் தான், அங்கு அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு பயணம் செய்திருந்தது.
அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களுக்கு மாலுமிகளை ஏற்றிச் செல்வது, பொருட்களையும் அஞ்சல்களையும் கொண்டு செல்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட சி-2 விமானத்தை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி, அவர்களை தமது கப்பலுக்கு அழைத்துச் சென்றிருந்தது அமெரிக்க கடற்படை.
அங்கு, அவர்களுக்கு விமானந்தாங்கி கப்பலை சுற்றிப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதன் செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டன.
அதுமட்டுமன்றி, விமானந்தாங்கி கப்பலில் தரித்து நின்ற, போர் விமானங்களும், நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகொப்டர்களும், ஒத்திகையில் ஈடுபட்டு, தமது திறனை வெளிப்படுத்தின. அதனைப் பார்வையிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இது ஒரு அசாதாரணமான வாய்ப்பு என்றும், இதற்கு முன்னர் இதுபோன்ற காட்சிகளை திரைப்படங்களில் தான் பார்த்ததாகவும், அதை நேரில் காணும் போது நெகிழ்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை, இலங்கை அரசாங்கம் கூறவில்லை. யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் கப்பல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தான் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க – இலங்கைக் குழுவினருக்கு இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து, இலங்கைக் குழுவினரை, மீண்டும் கட்டுநாயக்காவில் கொண்டு வந்து தரையிறக்கியது சி-2 விமானம். மீண்டும், அது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்குத் திரும்பிய போது, அந்தக் கப்பல் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க்கப்பலுக்கு வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கடற்படைத் தளபதி ஆகியோர் மேற்கொண்ட பயணம் குறித்து சில நாட்களுக்குப் பின்னர் தான் வெளியே தெரியவந்தது.
யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் சார்பில் ஏப்ரல் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தப் பயணம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்ட பின்னரே, இலங்கைக் கடற்படையின் ஊடகப் பிரிவு அதுபற்றிய தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களை வெளியிட்டது.
கடற்படை வெளியிட்ட அந்தச் செய்தியை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டதோடு சரி, வெளிவிவகார அமைச்சோ, பாதுகாப்பு அமைச்சோ இதுகுறித்து தனியாக எந்த அறிவிப்பையும் விளக்கத்தையும் அளிக்கவில்லை. யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு, வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட பயணம், சாதாரணமானதொன்று அல்ல.
ஆனால், இது இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும், அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பல்களின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் ஒரு நடவடிக்கை என்று அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது இலங்கைத் தரப்புக்கு ஒரு புதிய அனுபவம் என்றே கூறலாம்.
இதுபோன்ற சந்தர்ப்பம், இலங்கையின் எந்தவொரு கடற்படைத் தளபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ இதற்கு முன்னர் கிட்டியிருக்கவில்லை.
இலங்கைக் குழுவினர் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் ரிச்சரிட் வர்மா மற்றும் இந்தியக் கடற்படை அதிகாரிகளின் குழுவொன்றும் அங்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
ஆனாலும், இலங்கைக் குழுவினர் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு மேற்கொண்ட பயணத்துக்கு அமெரிக்கத் தரப்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை, யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, தெளிவாக காட்டியிருக்கிறது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய சூழலில், இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்கா புதிய கதவுகளைத் திறக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமாக இதனைக் கருதலாம். அதுவும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, இரண்டு வாரங்கள் முன்னதாகவே யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கான இலங்கைக் குழுவின் பயணம் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் அமெரிக்கா, பாதுகாப்பு மற்றும் ஏனைய துறைகளிலும் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி இருந்த காலகட்டத்தில், அமெரிக்க – இலங்கை உறவுகள் குறுகிக் கொண்டே வந்தன.
இப்போது அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கூட, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில், பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், அவை வெறும் மனிதாபிமான உதவித் திட்டங்களை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராஜாங்க உறவுகளில் ஏற்பட்டுள்ள துளிர்ப்பைப் போலவே, பாதுகாப்பு உறவுகளும் புதிய பரிமாணங்களை எட்டுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு இலங்கைக் குழு மேற்கொண்ட பயணமே அதற்கான சான்றாகும்.
ஐ.தே.க. ஆட்சிக்காலங்களில், எப்போதுமே அமெரிக்க – இலங்கை உறவுகளில், குறிப்பாக பாதுகாப்பு உறவுகளில் நெருக்கம் அதிகம் இருப்பதுண்டு. ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியில் இருந்த போதும் சரி, 2002ல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்த போதும் சரி, பாதுகாப்பு ரீதியாக அமெரிக்க உதவிகள் இலங்கைக்கு நிறையவே கிடைத்திருந்தன.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், அமெரிக்கா வழங்கிய எஸ்.எல்.என்.எஸ் சமுத்திர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடற்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியதை நினைவில் கொள்ளத்தக்கது. எனினும், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில், முற்றாகவே சீனாவின் நிழலுக்குள் ஒதுங்கிக் கொண்ட, இலங்கையையும் அதன் படைகளையும் இப்போது மெதுவாக, தன் கைக்குள் கொண்டு வரத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா.
அதன் வெளிப்பாடு தான் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கான இலங்கைக் குழுவின் பயணம்.
உயர் பாதுகாப்பு இரகசியங்கள் பேணப்படும் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு இலங்கைக் குழுவினரை அழைத்துச் சென்று காண்பித்ததன் மூலம், அமெரிக்கா தனது படைபலத்தை வெளிப்படுத்த முயற்சித்ததாக கருத முடியாது. மங்கள சமரவீரவுக்கோ, ருவான் விஜேவர்த்தனவுக்கோ அவ்வாறு படைபலத்தை காட்டி பிரமிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை.
ஒருவேளை இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில், அமைச்சர்களாக இருந்திருந்தால் அவ்வாறு செய்ததில் நியாயம் இருந்திருக்கும். இந்தப் பயணத்தின் மூலம், அமெரிக்கா வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞை என்னவென்றால், இலங்கையுடனான பாதுகாப்பு விடயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் அமெரிக்கா இருக்கிறது என்பதைக் காட்டுவதேயாகும்.
இது உறவின் நெருக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு நம்பிக்கையூட்டும் நடவடிக்கை.
அடுத்து வரும் வாரங்களிலோ, மாதங்களிலோ, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படலாம்.
ஏனென்றால், இந்தியப் பெருங்கடலில், சீனாவின் அசைவியக்கத்தை முடக்குகின்ற முக்கியமான மூலோபாயப் பங்காளியாக, இலங்கையை அமெரிக்கா கருதுகிறது.
இலங்கைக் குழுவினர் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் ரிச்சர்ட் வர்மா மற்றும் இந்தியக் கடற்படை அதிகாரிகளின் குழுவொன்றும் அங்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
ஆனாலும், இலங்கைக் குழுவினர் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு மேற்கொண்ட பயணத்துக்கு அமெரிக்கத் தரப்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை, யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, தெளிவாக காட்டியிருக்கிறது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய சூழலில், இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்கா புதிய கதவுகளைத் திறக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமாக இதனைக் கருதலாம்.
அதுவும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, இரண்டு வாரங்கள் முன்னதாகவே யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கான இலங்கைக் குழுவின் பயணம் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் அமெரிக்கா, பாதுகாப்பு மற்றும் ஏனைய துறைகளிலும் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி இருந்த காலகட்டத்தில், அமெரிக்க இலங்கை உறவுகள் குறுகிக் கொண்டே வந்தன.
இப்போது அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் கூட, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில், பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், அவை வெறும் மனிதாபிமான உதவித் திட்டங்களை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராஜாங்க உறவுகளில் ஏற்பட்டுள்ள துளிர்ப்பைப் போலவே, பாதுகாப்பு உறவுகளும் புதிய பரிமாணங்களை எட்டுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு இலங்கைக் குழு மேற்கொண்ட பயணமே அதற்கான சான்றாகும். ஐ.தே.க. ஆட்சிக்காலங்களில், எப்போதுமே அமெரிக்க – இலங்கை உறவுகளில், குறிப்பாக பாதுகாப்பு உறவுகளில் நெருக்கம் அதிகம் இருப்பதுண்டு.
ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சியில் இருந்த போதும் சரி, 2002இல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்த போதும் சரி, பாதுகாப்பு ரீதியாக அமெரிக்க உதவிகள் இலங்கைக்கு நிறையவே கிடைத்திருந்தன.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், அமெரிக்கா வழங்கிய எஸ்.எல்.என்.எஸ் சமுத்திரா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடற்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியதை நினைவில் கொள்ளத்தக்கது.
எனினும், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில், முற்றாகவே சீனாவின் நிழலுக்குள் ஒதுங்கிக் கொண்ட, இலங்கையையும் அதன் படைகளையும் இப்போது மெதுவாக, தன் கைக்குள் கொண்டு வரத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. அதன் வெளிப்பாடு தான் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கான இலங்கைக் குழுவின் பயணம்.
உயர் பாதுகாப்பு இரகசியங்கள் பேணப்படும் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு இலங்கைக் குழுவினரை அழைத்துச் சென்று காண்பித்ததன் மூலம், அமெரிக்கா தனது படைபலத்தை வெளிப்படுத்த முயற்சித்ததாக கருத முடியாது.
மங்கள சமரவீரவுக்கோ, ருவன் விஜேவர்தனவுக்கோ அவ்வாறு படைபலத்தை காட்டி பிரமிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை.
ஒருவேளை, இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில், அமைச்சர்களாக இருந்திருந்தால் அவ்வாறு செய்ததில் நியாயம் இருந்திருக்கும்.
இந்தப் பயணத்தின் மூலம், அமெரிக்கா வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞை என்னவென்றால், இலங்கையுடனான பாதுகாப்பு விடயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் அமெரிக்கா இருக்கிறது என்பதைக் காட்டுவதேயாகும்.
இது உறவின் நெருக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு நம்பிக்கையூட்டும் நடவடிக்கை.
அடுத்து வரும் வாரங்களிலோ, மாதங்களிலோ, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படலாம்.
ஏனென்றால், இந்தியப் பெருங்கடலில், சீனாவின் அசைவியக்கத்தை முடக்குகின்ற முக்கியமான மூலோபாயப் பங்காளியாக, இலங்கையை அமெரிக்கா கருதுகிறது.
– சுபத்ரா –
Average Rating