போலீஸ் பாதுகாப்பு கேட்டு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்டிரைக்!!
தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சில சமயங்களில் இறக்க நேரிடும் போது ஆஸ்பத்திரி மீதும், டாக்டர்கள் மீதும் உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
சமீபத்தில் ஈரோட்டில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் இறந்ததால் டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது டாக்டர் தாக்கப்பட்டார்.
இதுபற்றி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணம் பறிக்கும் நோக்கத்தில் டாக்டர்களையும், ஆஸ்பத்திரியையும் மிரட்டுவதாக புகாரில் தெரிவித்து இருந்தனர்.
டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், தனியார் ஆஸ்பத்திரிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், மருந்து கடைகளில் டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணிப்பதாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 3750 சிறிய, பெரிய தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளும், ஏராளமான சிறிய ஆஸ்பத்திரிகளும் உள்ளன. இங்கு பணியாற்றும் 30 ஆயிரம் டாக்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை சார்பில் நடக்கும் இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் தாக்கும் சமூக விரோதிகள் மீது குண்டர் பாதுகாப்பு சட்டத்தில் ஜாமீனில் வெளி வராதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
போராட்டம் காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட வில்லை. ஆனால் அவசர சிகிச்சை, ஆபரேஷன் போன்றவை வழக்கம் போல் நடந்தன. ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் முன் வாசல் மூடப்பட்டு இருந்தது.
இன்று பெரிய, சிறிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவசர சிகிச்சை பெற முடியாமல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ கழகத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறியதாவது:–
தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று முழு அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ மனைக்கும் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் டாக்டர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும். அவசர மற்றும் முக்கியமான அறுவை சிகிச்சைகள் எவ்வித பாதிப்பின்றி இன்று நடந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரம்பூர் ஜூலியன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜூலியன் கூறியதாவது:–
எந்த நேரத்திலும் மருத்துவ பணியாற்றுவதுதான் ஒரு டாக்டரின் கடமை. சில நேரங்களில் நோயின் தன்மை, நோயாளிகள் அனுமதி தாமதம் காரணமாக உயிர் இழப்பு ஏற்படுகிறது. அதற்கு டாக்டர்தான் காரணம் என்று கூறி மருத்துவரையும், மருத்துவமனையையும் தாக்குவது நியாயமற்ற செயல்.
உயிரை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்களை தாக்குவது வேதனையளிக்கிறது. சமீபகாலமாக ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலை நீடித்தால் டாக்டர்கள் முழுமையாக பணியாற்ற முடியாது. மருத்துவர்களின் பாதுகாப்பு கருதி நோயாளிகளை பார்ப்பதை தவிர்க்கும் நிலை உருவாகும். அதனால் அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating