கோட்டயத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட்டம்!!
கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்ட எல்லையில் அஷ்டமுடி அருகே வாளையில் பகுதியில் வசிப்பவர் ரம்யா (வயது 31). இவரது மகன் அபிமன்யு(1). வாளையில் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளதால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ரம்யா வீட்டின் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அவரது குழந்தை அபிமன்யு முன்கூடத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். ரம்யாவின் தாய் ராகிணி உள்அறையில் வேலையாக இருந்தார். அப்போது அந்த பகுதிக்குள் ஒரு சிங்கவால் குரங்கு நுழைந்தது. அந்த நேரத்தில் ரம்யாவின் வீட்டு கதவு திறந்து கிடந்ததால் அந்த குரங்கு வீட்டுக்குள் நுழைந்தது.
பின்னர் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை அபிமன்யுவை தூக்கிக்கொண்டு குரங்கு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது. குழந்தை அழும் சத்தம் கேட்டு ரம்யா வெளியே வந்து பார்த்தார். அப்போது குழந்தையை குரங்கு தூக்கிக்கொண்டு ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம்கேட்டு அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று குரங்கை துரத்தினர். இதனால் பயந்து போன குரங்கு குழந்தையை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தது. ஆனால் பொதுமக்கள் விடாமல் குரங்கை துரத்தினர்.
ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்த வலைகளை பயன்படுத்தி அந்த குரங்கை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவரின் வலையில் குரங்கு சிக்கிக்கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் பிராகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பிடிபட்ட குரங்கை பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த குரங்கை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதற்கிடையில் குரங்கின் கால்நகம் பட்டதால் குழந்தையின் தலையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து குழந்தைக்கு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் சிங்கவால் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை குரங்கு தாக்கியதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தற்போது வீட்டுக்குள் புகுந்த குரங்கு, குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடி உள்ளது. எனவே நாங்கள் அச்சத்தில் உள்ளோம். இது போல் ஊருக்குள் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating