பாகிஸ்தான் பயங்கர குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பெனாசிர் : பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ சென்ற பாதையில் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் எவ்வித காயமுமின்றி பெனாசிர் உயிர்தப்பினார். இந்த பயங்கர சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. அதிபர் முஷாரப்பின் வேண்டுகோள், பயங்கரவாதிகளின் மிரட்டல் ஆகியவற்றை புறக்கணித்து விட்டு, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று நாடு திரும்பினார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய அவரை வரவேற்க பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கராச்சி விமான நிலையத்தை சுற்றி குவிந்தனர். பெனாசிர் நாடு திரும்பியதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க எட்டு ஆண்டுகளுக்கு முன், பெனாசிர் புட்டோ, பாகிஸ்தானில் இருந்து வெளியேறினார். இதுநாள் வரை லண்டன் மற்றும் துபாயில் மாறி மாறி தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் அவர் நாடு திரும்புவதை உறுதி செய்தது. அவர் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்கி சில நாட்களுக்கு முன் அதிபர் முஷாரப் உத்தரவு பிறப்பித்தார். எனினும், நாடு திரும்புவதை சிறிது காலத்துக்கு ஒத்திபோட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இது தவிர, பெனாசிர் நாடு திரும்பினால், அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் என அல்குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு பெனாசிர் புட்டோ நேற்று காலை துபாயில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டார். அவரது கணவர் அசீப் அலி ஜர்தாரி உடன் வரவில்லை. துபாயிலேயே இருந்து விட்டார். சகோதரி சனாம், இரண்டு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அவருடன் விமானத்தில் வந்தனர். கராச்சி விமான நிலையத்தில் பெனாசிர் புட்டோவை வரவேற்க பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமி இருந்தனர்.
விமானம் தரையிறங்கி அதில் இருந்து பெனாசிர் வெளிப்பட்டதும், தொண்டர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி ஓடு தளத்துக்குள் நுழைந்தனர். நடனமாடினர். எங்கும் உற்சாகம் கரைபுரண்டது. விமானத்தில் இருந்து வெளியானதும், பெனாசிர் கண்கலங்கியபடி பிரார்த்தனை செய்தார். பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்துக்குள் அழைத்து செல்லப்பட்டார். புல்லட் புரூப் வசதி கொண்ட மேடை அமைக்கப்பட்ட டிரக் மூலம் அவர் முகமது அலி ஜின்னா கல்லறைக்கு சென்றார். பின்னர் கராச்சியில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பெனாசிர், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மக்களுக்காக நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். எங்கள் கொள்கை பாகிஸ்தானின், ஏழை மக்களின் கொள்கையாக இருக்கும். எனக்கு எதுவும் நடக்காது. பிரார்த்தனைகளும், கட்சி தொண்டர்களும் தான் எனது பலம். மிரட்டல் குறித்து நான் கவலைப்படவில்லை. மக்களை குறித்தே சிந்தித்து வருகிறேன்’ என்றார்.
பகல் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷத்துடன் வலம் வந்து கொண்டிருந்த பெனாசிர், இரவு நேரத்தில் பிலாவால் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கார் அணிவகுப்புடன் சென்றபோது கர்சாஸ் பகுதியில் 2 இடங்களில் அணிவகுப்பு பாதையில் குண்டு வெடித்தது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 150 பேர் பலியாகியுள்ளனர். 400 பேர் வரை காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணம் அல்குவைதா தீவிரவாத அமைப்புதான் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அல்குவைதா அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படையினர்தான் இந்த பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னாள் பிரதமர் பெனசிரை குறி வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறினர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பெனாசிருக்கு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளித்து வருவதாக அந்நாட்டு காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
பெனாசிரை குறிவைத்து நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் அதிபர் முஷாரப், பிரதமர் சவுகத்அஜீஸ் ஆகியோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பெனாசிர் நாடு திரும்பினால், அவரை கொலை செய்வோம் என பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்திருந்தன. இதனால், அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் தீவிரவாதிகள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.