முஷாரப் ராணுவ தளபதியாக தொடரலாமா? முழு பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்தபடியே மீண்டும் அதிபர் தேர்தல் போட்டியிடுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி தலைமையிலான முழு பெஞ்ச் விசாரிக்கும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. கோர்ட் உத்தரவு தனக்கு எதிராக வருமானால், ராணுவ சட்டத்தை அமல்படுத்த முஷாரப் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் அதிபர் மற்றும் ராணுவ தலைமை தளபதி பதவியில் நீடித்து வரும் முஷராப் மீண்டும் அதிபராக முயற்சி செய்தார். இதற்கான தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. ஆனால், ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து முஷாரப்புக்கு எதிராக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி பகவான்தாஸ் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை செய்து தள்ளுபடி செய்தது. இதன் பிறகும் ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி ஜாவித் இக்பால் தலைமையிலான 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை செய்தது. அதிபர் தேர்தல் நடக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அக்டோபர் 17ம் தேதி( நேற்று) மீண்டும் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 6ம் தேதி தேர்தல் நடந்தது. இதை பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நவம்பர் 15ம் தேதி ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகி விடுவதாக சுப்ரீம் கோர்ட்டில் முஷராப் உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதன் பிறகு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு இதைப்பற்றி முடிவு செய்வேன் என்றும் தெரிவித்தார்.
முழு பெஞ்சுக்கு மாற்றம் : பரபரப்பான சூழலில் நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட பின் 20 நிமிடங்களுக்கு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான முழு பெஞ்சுக்கு மாற்றப்படுவதாக உத்தரவு பிறப்பித்தனர். இதுப்பற்றி சட்ட வல்லுனர்கள் கூறுகையில், 13 அல்லது 15 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச்சை தலைமை நீதிபதி ஏற்படுத்தலாம். ஆனால், அதற்கு அவர் தலைமை ஏற்பாரா என்பது சந்தேகமே என்று தெரிவித்தனர். தனக்கு சாதமான தீர்ப்பு வராவிட்டால், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை பிரகனடப்படுத்தும் திட்டத்திலும் முஷாரப் இருக்கிறார். அதிபராக முஷாரப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தால், ராணுவ ஆட்சி அமலாக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என பார்லிமென்ட் விவகார அமைச்சர் ஷீர் ஆப்கன் கான் நியாசி கூறியுள்ளார்.
அவமதிப்பு வழக்கு : இதற்கிடையில், நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கோர்ட் அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் நேற்று பிற்பகல் விசாரணை செய்தது. இதை முன்னிட்டு நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் கோர்ட் முன் கூடியிருந்தனர்.
இன்று நாடு திரும்புகிறார் பெனாசிர் : எட்டு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, இன்று நாடு திரும்புகிறார். அவரை வரவேற்க கராச்சி நகர் முழுவதும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தொண்டர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெனாசிர் போட்டோ அடங்கிய பேனர்கள் எங்கும் காணப்படுகின்றன. கராச்சி நகரில் பல தெருக்களில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று வருகின்றனர். பெனாசிரை வரவேற்க 10 லட்சம் பேர் திரண்டு வருவர் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பும் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முஷாரப் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை பெனாசிர் நிராகரித்து விட்டார். துபாயில் நேற்று அவர் பேட்டியளிக்கும் போது திட்டமிட்டபடி அக்டோபர் 18ம் தேதி(இன்று) நாடு திரும்புவேன். கொலை மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.