செம்மரம் கடத்தல் நடிகை மூலம் பணம் பரிமாற்றம் நடந்தது எப்படி? போலீசார் அதிரடி விசாரணை
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் தப்பிய கூலித் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் செம்மரக்கட்டை கடத்தலில் பல முக்கிய புள்ளிகள் சங்கிலி தொடர்போல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது.
அரசியல்வாதிகள், திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இந்த வியாபாரத்தில் ரகசியமாக செயல்பட்டு கோடி கோடியாக சம்பாதித்து பெரும் புள்ளிகளாக வலம் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கடத்தல் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த சினிமா நடிகர் சரவணனை சித்தூர் போலீசார் கைது செய்தனர்.
அவர் மூலம் கர்னூல் மாவட்டம் சாசலமரியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், படத்தயாரிப்பாளருமான மஸ்தான் வலி, அவரது சகோதரர் பாபாவலி ஆகியோர் பிடிபட்டனர்.
செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தை மஸ்தான் வலி தனது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் வங்கி கணக்கில் போட்டு வைத்து அவர் மூலம் வட மாநில செம்மரக் கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்து உள்ளார்.
நீத்து அகர்வால் மஸ்தான் வலியுடன் அவரது கர்னூல் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்து உள்ளார். மஸ்தான் வலியை கைது செய்யும் போது வீட்டில் அவரும் இருந்தார்.
நீத்து அகர்வால் வங்கி கணக்கில் இருந்துதான் பலருக்கு பணம் சப்ளை செய்தது தெரிய வந்ததும் போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அதற்குள் தலைமறைவாகி விட்டார்.
அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர். இந்தி மொழி தெரிந்தவர். எனவே அவர் மூலம் மஸ்தான் வலி டெல்லி, குஜராத், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் கடத்தல் தொழிலை விரிவுபடுத்தி உள்ளார்.
நீத்து அகர்வால் வங்கி கணக்கை முடக்கிய போலீசார் அவரது வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்தனர்.
அப்போது குறுகிய காலத்தில் பாலுநாயக் என்பவருக்கு பெரிய அளவிலான தொகை அனுப்பப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அதே போல் பாலுநாயக்கும் பெரிய தொகையை நீத்து அகர்வால் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்.
இதையடுத்து பாலு நாயக்கை பிடிக்க போலீசார் வலை விரித்து உள்ளார். பாலுநாயக் வங்கி கணக்கில் தற்போது ரூ.70 லட்சம் வரை உள்ளது தெரியவந்து உள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் செம்மரக்கடத்தலில் தொடர்புடைய 15 முக்கிய புள்ளிகள் பட்டியலை சேகரித்து உள்ளனர். இவர்களில் 5 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.
அதில் ஒருவர்தான் மேற்கு வங்காளத்தில் கைதான சவுந்தரராஜன். சென்னையை சேர்ந்த இவர் தமிழ் தவிர ஆங்கிலம், தெலுங்கு, பெங்கால், இந்தி ஆகிய மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.
மேற்கு வங்காள அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி அவர்களது வீட்டிலேயே செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து பூடான் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தி வந்து உள்ளார்.
சவுந்தரராஜனுடன் தொடர்புடைய மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.
Average Rating