காதலியை கொன்று 40 நாளாக மாயம்: வாலிபர் தினேஷ் உயிருடன் இருக்கிறாரா?
சென்னை சூளையை சேர்ந்த கல்லூரி மாணவி அருணா கடந்த மார்ச் மாதம் 9–ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் அருணாவை காதலித்து உல்லாசம் அனுபவிப்பதற்காக அவரை ஏமாற்றி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்ற அருணா துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் இளம் பெண்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
அருணாவை கொன்று விட்டு மாயமான தினேஷ், போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே உஷாராகவே செயல்பட்டார்.
தனது செல்போனை, தாயின் கைப்பையில் அவருக்கு தெரியாமலேயே வைத்து விட்டு தப்பிச் சென்றார். எப்போதுமே போலீசுக்கு வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு செல்போன்கள் தான் பெரிதும் உதவி செய்து வருகின்றன.
இந்த வழக்கில் தினேஷ் திட்டமிட்டே செல்போனை தன்னுடன் எடுத்து செல்லாதது போலீசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் கடந்த 40 நாட்களாக தினேஷ் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
தினேஷ் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து வருவதாகவும், அதனை வைத்து பிடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை போலீசார் மறுத்தனர்.
சென்னையை விட்டு தப்பிச்சென்ற தினேஷ் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவர் இருக்கும் இடம் பற்றிய எந்தவித தகவல்களும் கிடைக்காததால் போலீசார் குழம்பி தவிக்கின்றனர்.
தினேசை பிடிப்பதற்காக வாட்ஸ்–அப் உதவியையும் போலீசார் நாடினர். தினேசின் போட்டோக்களை தமிழகம் முழுவதும் வாட்ஸ்–அப்பில் பரவவிட்டனர். அனைத்து காவல் நிலையங்களுக்கும் போட்டோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதிலும் துப்பு துலங்கவில்லை.
கடந்த 40 நாட்களாக தினேசை பிடிப்பதற்காக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை வைத்து அவரை பிடிக்க திட்டமிட்டனர். வெளியிடங்களில் இருந்து யாருடைய செல்போன் நம்பர் அல்லது டெலிபோன் நம்பர்களுக்காவது தினேஷ் நிச்சயம் போன் செய்வார். அதனை வைத்து அவரை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
ஆனால் தினேஷ் இதுநாள் வரையில், யாரிடமும் எந்தவித போன் தொடர்பை கூட ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதுபோன்று பேசினால் எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்பதாலேயே தினேஷ் இப்படி செயல்படுவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இத்தனை நாட்களும், தினேஷ் யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதால் அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போலீசுக்கு பயந்து தினேஷ் தற்கொலை செய்திருக்கலாமா? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating