காதலிக்க மறுத்ததால் பெண்ணை தாக்கிய வாலிபர் படுகொலை: பெண்ணின் தந்தை குத்திக்கொன்றார்!!
கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வல்லபராவ். இவர் ஐதராபாத் அருகே உள்ள புக்கட்பள்ளியில் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு துளசம்மா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இளைய மகள் நீரஜா கிருஷ்ணவேணி (22) அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கிறார்.
இவர் வேலை பார்த்த வணிக வளாகத்தில் சேவல்லாவை சேர்ந்த ராஜு (25) என்பவர் வேலை பார்த்தார். நீரஜா அழகில் மயங்கிய ராஜு அவரை காதலித்தார். ஆனால் அவரது காதலை நீரஜா ஏற்க மறுத்து விட்டார்.
இருந்தாலும் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து நீரஜாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
ஒரு வருடத்துக்கு முன்பு ராஜு நேரடியாக நீரஜா வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் நீரஜாவை எனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். அதற்கு வல்லபராவ் மறுத்து விட்டார்.
இருந்த போதிலும் ராஜுக்கு நீரஜா மீதான காதல் மோகம் தீரவில்லை. நீரஜாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்த போதெல்லாம் அந்த வரனிடம் நானும் நீரஜாவும் காதலிக்கிறோம் என்று கூறி அவளது திருமணத்தை தடுத்து வந்தார். இதனை நீரஜாவின் தந்தை கண்டித்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ராஜு நீரஜா வீட்டுக்குள் பெரிய கத்தியுடன் புகுந்தார். ‘‘தனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது’’ எனக்கூறி அவளை கத்தியால் சரமாரியாக வெட்டினார். நீரஜாவின் கழுத்து, கை, மார்பு ஆகிய பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனை தடுக்க முயன்ற நீரஜாவின் தாய் துளசம்மா, சித்தப்பா மகன் கங்காதரர் ஆகியோரையும் அவர் வெட்டினார்.
அவர்களது கூச்சல் கேட்டு மாட்டு தொழுவத்தில் நின்ற வல்லபராவ் ஓடி வந்தார். ஆனால் கதவு உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. ஓங்கி மிதித்து கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ராஜு கத்தியுடன் வெறி பிடித்து நின்றார். வல்லபராவையும் அவர் வெட்ட பாய்ந்தார்.
லாவகமாக செயல்பட்ட வல்லபராவ் ராஜுவின் கையில் இருந்த கத்தியை பிடுங்கினார். சற்றும் தாமதிக்காமல் ராஜுவை சரமாரியாக வெட்டி சாய்த்தார்.
இதில் ராஜு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார். பின்னர் குற்றுயிராக கிடந்த மகள் நீரஜா, மனைவி துளசம்மா, கங்காதரர் ஆகியோரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண் அடைந்தார்.
வல்லபராவ் கூறும் போது சைக்கோவாக இருந்த ராஜு எனது மகளை விரட்டி விரட்டி காதலித்தார். பின்னர் அவரை கொல்லவும் துணிந்தார். அவனை உயிரோடு விட்டால் எனது குடும்பத்தினரையே கொன்று இருப்பான் அதனால் நானே அவனை வெட்டி கொன்றேன், என்றார்.
வல்லபராவின் செயலுக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளது. ஈவ்டீசிங் செய்யும் ஆண்களுக்கு இதுதான் சரியான தண்டனை தனது குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே அவர் இந்த கொலையை செய்து உள்ளார். எனவே வல்லபராவை விடுவிக்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள நீரஜா உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கத்தியால் குத்தியதில் அவரது கழுத்து நரம்பு அறுபட்டு இருப்பதாகவும் ரத்தம் அதிகமாக வெளியேறி இருப்பதாகவும் 24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் கூற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating