காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் நகரை சேர்ந்தவர் சோனாலி முகர்ஜி. பூத்துக் குலுங்கும் பருவத்தில்17 வயது இளம்பெண்ணாக இவர் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள் சோனாலியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடினர்.
இதற்கு முன்னர் டெல்லியில் வசித்தபோது தங்களது காதலை அந்த 3 பேரும் சோனாலியிடம் தனித்தனியாக தெரிவித்துள்ளனர். அவர்களின் காதலை சோனாலி நிராகரித்து விட்டார். இதனால் இந்த கொடூர முடிவை அந்த வாலிபர்கள் தேர்ந்தெடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஆசிட் வீச்சில் 70 சதவீத காயங்களுடன் முகம் முழுவதும் விகாரமாகி, இரு கண்களிலும் பார்வை பறிபோன நிலையில் இருந்த சோனாலி சிகிச்சைக்காக டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சாதாரண தொழிலாளியான சோனாலியின் தந்தையால் அவரது வருமானத்தை வைத்து சோனாலிக்கு தரமான சிகிச்சை அளிக்க இயலவில்லை.
எனவே, ஜார்கண்டில் இருந்த நிலம், கால்நடை, நகைகள் அனைத்தையும் விற்று டெல்லியிலேயே தங்கியிருந்து சோனாலியின் சிகிச்சைக்காக சுமார் 15 லட்சம் ரூபாய்வரை அவரது தந்தை சண்டிடாஸ் முகர்ஜி செலவழித்தார். சிதைந்துப்போன முகம் மற்றும் தாடை சீரமைப்புக்காக 28 ஆபரேஷன்கள் செய்யப்பட்ட பிறகு சோனாலியின் முகம் ஒரு உருவுக்கு வந்தது. எனினும், பழைய அழகையும், பொலிவையும் இழந்து, கண்பார்வையை பறிகொடுத்து, பிடித்து வைத்த சதைக்கோளமாகவே அவரது முகம் தோன்றியது.
இதற்கிடையில், கடந்த 2012-ம் ஆண்டு தனியார் இந்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்திய ’கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்று சிக்கலான கேள்விகளுக்கு சாதுர்யமாக பதில் அளித்த சோனாலி 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வென்றார். அவரது விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் அமிதாப் பச்சன் வெகுவாக பாராட்டிப் புகழ்ந்தார்.
இதனையடுத்து, பல ஊடகங்களின் பார்வை சோனாலியின் பக்கம் திரும்பியது. அவை அத்தனையும் அனுதாபப் பார்வையாகவும், ஆறுதல் பார்வையாகவும் மட்டுமே இருந்தது. ஆனால், ஊடகவியலாளரான சிதரஞ்சன் திவாரி(29) என்பவர் அவர் மீது வைத்திருந்தப் பார்வையோ.., நேசப் பார்வையாகவும், பாசப் பார்வையாகவும் அமைந்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஒரு பேட்டிக்காக சோனாலியை சந்தித்தப் பின்னர்.., அந்தப் பார்வை அன்புப் பார்வையாகவும், அன்பு கனிந்த காதல் பார்வையாகவும் மாறியது.
அடிக்கடி கைபேசியில் தொடர்பு கொண்டு, சோனாலிக்கு ஆறுதல் மொழியும், தைரியமும் அளித்துவந்த சிதரஞ்சன் திவாரி, கடந்த ஆண்டு தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியபோது அதிர்ச்சியடைந்த சோனாலி பேச்சிழந்து, வாயடைத்துப் போனார். என் முகம் இத்தனை விகாரமாகிப் போயுள்ளது. இரண்டு கண்களும் வேறு தெரியாது. என்னை திருமணம் செய்து கொண்டு நீங்கள் என்ன சுகத்தை காண முடியும்? என்று மடக்குக் கேள்வி கேட்டு வாதம் செய்தார்.
நாம் இருவருமே நல்ல நிலையில் இருந்து திருமணம் செய்து கொள்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு விபத்தில் நாம் இருவரும் சிக்கிக் கொள்கிறோம். அப்போது உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் நான் பிரிந்து விடுவேனா? நிச்சயமாக பிரிய மாட்டேன் அல்லவா? அதுபோல்தான், என் கண்களுக்கு நீ முழுமையான பெண்ணாக காட்சியளிக்கிறாய். உன்னிடம் நான் ஒரு குறையையும் காணவில்லை. எனவே, எனது காதலை நீ ஏற்றுக் கொண்டு என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வேண்டும் என பலவந்தப்படுத்திய சித்ரஞ்சன், சோனாலியின் இதயத்தை தனது எதிர்வாதத்தால் வென்று விட்டார்.
இதற்கிடையே, ஜார்கண்ட் மாநில அரசிடம் நீண்ட காலமாக போராடி, பொக்காரோ நகர துணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நலத்துறை அலுவலகத்தில் ஒரு எழுத்தர் பணியையும் பெற்றுவிட்ட சோனாலிக்கு இரு குடும்பத்தார் முன்னிலையில் கடந்த புதன்கிழமை மாலையிட்ட சித்ரஞ்சன் திவாரி, அவரை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார்.
அப்போது, உணர்ச்சிவசப்பட்ட சோனாலி, ’எனது தந்தைக்கு பிறகு வேறொரு ஆண்மகனை நம்ப முடியும் என நான் நினைத்துகூட பார்த்ததில்லை. என் மீது ஆசிட் வீசப்பட்ட நாளில் இருந்து அவர் என்னை அத்தனை அன்போடும், அரவணைப்போடும் பார்த்துக் கொண்டார். இப்போது என் தந்தைக்கு ஓய்வு அளிக்க என்னை நான் சிதரஞ்சனிடம் ஒப்படைத்துள்ளேன்.
விரைவில் நாங்கள் தேன்நிலவுக்காக மும்பை செல்கிறோம். அதற்குப் பின்னர் எங்கே வாழ்வது? என்பது பற்றி என் கணவருடன் ஆலோசித்து முடிவு செய்வேன்’ என்று கூறும் கருவிழிகளை இழந்த சோனாலியின் கண்களில் இருந்து வெளியேறிய கண்ணீருடன் கலந்து ஓராயிரம் பட்டாம்பூச்சிகளும் சிறகடித்துப் பறந்தன.
Average Rating