பாமக மகளிர் அணி நிர்வாகி கைது எதிரொலி: போலி சான்றிதழ்கள் மூலம் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் கலக்கம்!!
கோவை காந்திபுரம் 3–வது தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரி(வயது32).
பா.ம.க. மாநில மகளிர் அணி துணைத் தலைவியான இவர் ஹைமாக் எஜுகேசனல் இன்ஸ்டிடியூசன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். கோவை காந்திபுரத்தில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது.
இந்தநிறுவனத்தில் போலியாக வக்கீல், டாக்டர் உள்ளிட்ட படிப்பு சான்றிதழ்களை அச்சிட்டு லட்சக் கணக்கில் விற்றுள்ளனர். இவர்களிடம் வக்கீல் படிப்புக்கு போலி சான்றிதழ்கள் வாங்கிய சென்னையை சேர்ந்த அருண்குமார்(36), அழகிரி மற்றும் மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தனர். அப்போது இவர்களது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சணாமூர்த்தி சென்னை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகசுந்தரி, அருண்குமார் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த சேலம் குரங்குச்சாவடியை சேர்ந்த கணேஷ்பிரபு (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த மோசடி கும்பலுக்கு சண்முகசுந்தரி தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார். பள்ளி பருவத்தில் சிறந்த மாணவியாக திகழ்ந்த இவர் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வில் கோவை மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவர்.
பின்னர் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மைசூரில் உள்ள பல்கலைகழகத்தில் எல்.எல்.பி. படித்தார். அப்போது கணேஷ்பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டு இவரது வாழ்க்கை திசை மாறியது. இதனால் எல்.எல்.பி. தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகவே சண்முகசுந்தரி மனமுடைந்து போனார். அப்போது தான் ஏன் நாமே போலி சான்றிதழ் தயாரிக்க கடாது என்ற எண்ணம் தோன்றி உள்ளது. நினைத்தபடி டெல்லியை சேர்ந்த ஒருவர் மூலம் போலி சான்றிதழ்களை அச்சிடித்து தன்னை வக்கீல் என அடையாளப்படுத்திக் கொண்டார். பின்னர் தமிழகம் முழுவதும் நிறுவனங்கள் தொடங்கி விளம்பரபடுத்தினார்.
8–ம் வகுப்பு படித்தவர் பட்டதாரி ஆகலாம், பட்டதாரி வக்கீல் ஆகலாம், கல்லூரிக்கு போகாமலேயே 3 மாதத்தில் விரும்பிய பட்டங்களை பெறலாம் என இவர் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பி பட்டதாரிகள் பலரும் சண்முகசுந்தரியை நாடிச் சென்றனர். அவர்களிடம் டாக்டர், வக்கீல் படிப்பு சான்றிதழ்களுக்கு ரூ.5 லட்சம், என்ஜினீயரிங் படிப்பு சான்றிதழுக்கு ரூ.2 லட்சம் என வாங்கி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
குறிப்பாக அரசு அதிகாரிகள் பலரும் பதவி உயர்வுக்காக லட்சக்கணக்கில் பணத்தை வாரி இரைத்து உயர் படிப்பு சான்றிதழ்களை வாங்கி உள்ளதும், அந்த சான்றிதழ்கள் மூலம் பதவி உயர்வு பெற்றதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. எனவே, கடந்த 2 ஆண்டுகளாக சண்முகசுந்தரி மூலம் போலி சான்றிதழ்களை பெற்ற அரசு அதிகாரிகள் யார்–யார்? என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் உள்ள சண்முகசுந்தரியின் தலைமை அலுவலகத்ததில் சோதனை நடத்தினால் இந்த மோசடி தொடர்பான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் கருதுகின்றனர். எனவே சண்முகசுந்தரியின் அலுவலகத்தில் விரைவில் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் சண்முகசுந்தரியிடம் போலி சான்றிதழ்கள் வாங்கி பதவி உயர்வு பெற்ற அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் பதவிக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டு மல்லாமல் மோசடியில் ஈடுபட்டதற்காக கைது நடவடிக்கை வரை செல்லும் வாய்ப்பு உள்ளதால் போலி சான்றிதழ் வாங்கிய அதிகாரிகள் கலக்கத்ததில் உள்ளனர்.
Average Rating