போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்த பா.ம.க. மகளிர் அணி துணை தலைவி கைது!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் தெட்சிணா மூர்த்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் 3 பேரின் எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி சான்றிதழ்களை கொடுத்த சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி மற்றும் மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்வதற்கு போலியான ஆவணங்களை கொடுத்த இந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன் பேரில் ஐகோர்ட்டு போலீஸ் உதவிக் கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கோவை காந்திபுரத்தை சேர்ந்த பா.ம.க. மாநில மகளிர் அணி துணைத் தலைவி சண்முக சுந்தரி (32) மற்றும் சேலத்தை சேர்ந்த கணேஷ்பிரபு (28), பெரம்பூர் பேப்பர்மில்ஸ் ரோட்டைச் சேர்ந்த அருண்குமார் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சண்முக சுந்தரி வக்கீல் தொழிலுக்கான எல்.எல்.பி. சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி அருண்குமாரிடம் 3½ லட்சம் ரூபாய் பெற்றது தெரிய வந்தது. பின்னர் பணம் கொடுத்த ஒரு மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டுகள் அருண்குமார் எல்.எல்.பி. படித்தது போன்ற போலிச் சான்றிதழை சண்முகசுந்தரி வாங்கிக் கொடுத்துள்ளார்.
சண்முகசுந்தரியும் அவர் கணவரும் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 15–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு அவர் என்ஜினீயர், வக்கீல் மற்றும் பி.காம், பி.ஏ.பி.எஸ்.சி., பாராமெடிக்கல் படிப்பு தொடர்புடைய சான்றிதழ்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இது தவிர பள்ளி இறுதிச் சான்றிதழ்கள் மற்றும் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வாங்கிக் கொடுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
சண்முகசுந்தரி செய்த போலி ஆவண மோசடிகளுக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்த பலர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாடெங்கும் உள்ள பிரபல பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களின் போலி சான்றிதழ்கள், முத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் உள்பட நூற்றுக் கணக்கானவர்களுக்கு சண்முகசுந்தரி போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி தீவிர விசாரணை நடக்கிறது.
கான்பூர் பல்கலைக்கழகம், லக்னோ மாநில டெக்னிக்கல் எஜிகேசன் போர்டு, டெல்லி போர்டு ஆல் சீனியஸ் செகண்டரி ஆப் எஜிகேசன், மேகாலயா டெக்னோ குளோபல் சென்டர் உள்ளிட்ட பல வெளி மாநில கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்களையும் இந்த கும்பல் துணிச்சலாக தயாரித்து மோசடி செய்துள்ளது.
வக்கீலுக்கான எல்.எல்.பி. சான்றிதழ்களை மட்டும் சென்னையில் 10 பேர் பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் சமீபத்தில் வக்கீலாக பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கைதான சண்முகசுந்தரி உள்ளிட்ட 3 பேரும் இன்று ஜார்ஜ்டவுண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிறகு அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மோசடி கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்கலைக்கழக சான்றிதழ்கள் முத்திரைகள் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதை இணைக் கமிஷனர் சண்முகவேல் பார்வையிட்டு மோசடி பற்றி நிருபர்களுக்கு விளக்கி கூறினார்.
Average Rating