நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் குழந்தை திருட்டு: டாக்டர்–நர்சு மீது 2 பிரிவுகளில் வழக்கு!!
இரணியல் அருகே வில்லுக்குறி அப்பட்டு விளையை சேர்ந்தவர் ஆன்றோ சிறில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுசுதா (வயது 25).
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுசுதாவை பிரசவத்திற்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அவருக்கு நேற்று முன்தினம் மாலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க கடந்த 2 நாட்களாக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்து சென்றனர்.
குழந்தையை படம் பிடித்து வெளிநாட்டில் உள்ள ஆன்றோ சிறிலுக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அனுசுதா இருந்த அறைக்கு சுடிதார் அணிந்த ஒரு பெண் வந்தார். அவர் குழந்தையின் எடையை பார்க்க வேண்டும் என்று கூறி குழந்தையை எடுத்துச்சென்றார். அந்த பெண் ஆஸ்பத்திரி ஊழியர் என நினைத்து அனுசுதாவும் குழந்தையை கொடுத்து அனுப்பினார். நீண்ட நேரமாகியும் குழந்தையை கொண்டு வராததால் அனுசுதாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் யாரும் குழந்தையை எடை போட எடுத்துச்செல்லாதது தெரிய வந்தது. இதனால் பதறிப்போன அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடினார்கள். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
இதையடுத்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். குழந்தையை திருடிச்சென்ற பெண்ணின் அடையாளங்களை கேட்டு அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
குழந்தை திருடப்பட்ட நேரத்தில் சுடிதார் அணிந்த ஒரு பெண் கையில் பெரிய பையை வைத்தபடி, ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்ற காட்சி, ஆஸ்பத்திரியின் எதிர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
எனவே அவர்தான் குழந்தையை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. உடனடியாக நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ் நிலையங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் குழந்தையை கடத்திச்சென்ற பெண் சிக்கவில்லை.
இதற்கிடையில் அனுசுதாவின் தாயார் அன்ன செல்வம், நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் டாக்டர் மற்றும் நர்சுகள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஈஸ்வரன் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே மதுரை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆஸ்பத்திரியில் இதைபோல் குழந்தை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. எனவே அதில் ஈடுபட்ட கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். குழந்தை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை போலீசார் அந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அந்த புகைப்படங்களை அனுசுதா மற்றும் அவரது உறவினர்களிடம் காட்டி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Average Rating