திருவட்டாருக்கு கைக்குழந்தையுடன் தேடிவந்த காதல் கணவரை விரட்டியடித்த இளம்பெண்!!
திருவட்டாரை அடுத்த கல்லுக்கூட்டம் விளையை சேர்ந்தவர் சுதாராணி (வயது 26).
இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நர்சு வேலையில் சேர்ந்தார். அப்போது அந்த ஆஸ்பத்திரிக்கு புதுச்சேரி காட்டேரி குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார்.
அவருக்கு நர்சு சுதாராணி தேவையான உதவிகளை செய்தார். இதில், இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்து காதலாக மாறியது. சிகிச்சை முடிந்து சென்ற பின்பும், வேல்முருகன் சுதாராணியை சந்தித்தார். இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றனர்.
பின்னர் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 2013–ம் ஆண்டு ஜூன் மாதம் 13–ந்தேதி கடலூரில் நண்பர்கள் துணையுடன் மணமுடித்துக்கொண்டனர். இதனை கடலூர் பதிவு அலுவலகத்திலும் முறைப்படி பதிவு செய்துக்கொண்டனர்.
திருமணம் முடிந்த பின்பு இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இதில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 6 மாதம் ஆன நிலையில், சுதாராணி கடந்த டிசம்பர் மாதம் குழந்தையை கணவர் வேல்முருகன் தாயாரிடம் கொடுத்து விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. கணவரையும் தொடர்பு கொள்ளவில்லை.
இதனால் பதறிப்போன வேல்முருகன் இதுபற்றி புதுச்சேரி போலீசில் புகார் செய்தார். அவர்கள் சுதாராணியை காணவில்லை என வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேல்முருகனும் சுதாராணியை உறவினர்கள் துணையுடன் பல்வேறு இடங்களில் தேடினார். இதில் அவர், சொந்த ஊரான திருவட்டார் கல்லுக்கூட்டம் பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
இங்கு வந்து விசாரித்தப்போது, சுதாராணி, வேல்முருகனை திருமணம் செய்த விவரத்தை பெற்றோரிடம் மறைத்திருப்பதும், எனவே அவர்கள் இங்கு சுதாராணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்திருப்பதும் தெரிய வந்தது.
சுதாராணிக்கு இன்னொருவருடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து, வேல்முருகன் நேற்று கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் திருவட்டார் வந்தார். சுதாராணியின் வீட்டுக்குச்சென்று அவரை தன்னோடு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு சுதாராணி மறுத்தார்.
எனவே அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரச்சனை திருவட்டார் போலீஸ் நிலையம் சென்றது. அங்கிருந்த போலீசாரிடம் வேல்முருகன், தனக்கும், சுதாராணிக்கும் கடந்த 2013 ஜூன் மாதமே திருமணம் நடந்த விவரத்தையும், அதற்கான திருமண பதிவு சான்றிதழையும் கொடுத்ததோடு, வேல்முருகன்–சுதாராணி இருவரும் கைக்குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் கொடுத்து தங்களை சேர்த்து வைக்கும் படி கூறி மன்றாடினார்.
அப்போது அங்கிருந்த சுதாராணி கணவருடன் செல்ல மாட்டேன் என கூறியதோடு, குழந்தையையும் பார்க்க மறுத்து அவர்களை வெட்டி விடுவதிலேயே குறியாக இருந்தார். இதனால் வேல்முருகனும், அவரோடு வந்த உறவினர்களும் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர்.
இருந்தும் சுதாராணி மனம் இரங்கவில்லை. இதையடுத்து வேல்முருகன் அங்கிருந்து கண்ணீருடன் புறப்பட்டுச்சென்றார். சுதாராணியை காணவில்லை என புதுச்சேரி போலீசில் புகார் இருப்பதால் அவர்கள் மூலம் மேல் நடவடிக்கையில் இறங்குவேன், இப்பிரச்சனைக்கு கோர்ட்டு மூலம் தீர்வு காண்பேன் என்று கூறிச்சென்றார்.
இதனால் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating