மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது!!
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மர்ம நபர்கள் சிலர் அவரது அறைக்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, பீரோவில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவம் பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வங்காள தேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க பின்னர் அவர் சிபாரிசு செய்தார்.
பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், சம்பவத்தன்று மர்ம நபர்கள் 4 பேர் அங்கு வந்த காட்சி பதிவாகி இருந்தது. அதை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள நாக்படா என்ற இடத்தில் சிக்கந்தர் ஷேக் என்ற சலீம் என்பவன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டான். மும்பை போலீசாரின் உதவியுடன் மேற்கு வங்காள சி.ஐ.டி. போலீசார் அவனை கைது செய்தனர். இவன் அண்டை நாடான வங்காளதேசத்தைச் சேர்ந்தவன் ஆவான்.
பின்னர் சலீமை சி.ஐ.டி. போலீசார் விமானம் மூலம் மேற்கு வங்காளத்துக்கு கொண்டு வந்து ரானாகாட் கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பபியா தாஸ் முன்பு நேற்று ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டில் சலீமுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. சி.ஐ.டி. தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, சலீமை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு பபியா தாஸ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் அவனை தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சலீம் கொடூர குற்றத்தை செய்து இருப்பதால் அவனுக்கு ஆதரவாக யாரும் ஆஜராவது இல்லை என முடிவு செய்து இருப்பதாக ரானாகாட் வக்கீல்கள் சங்க செயலாளர் மிலன் சர்க்கார் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சலீம் கைதானதை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை, மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள ஹப்ரா என்ற இடத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் கோபால் சர்க்கார். இவனும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவன். மேற்கு வங்காள மாநிலத்துக்கு சட்ட விரோதமாக வந்து கடந்த 2002-ம் ஆண்டு முதல் அங்கு வசித்து வரும் கோபால் சர்க்கார் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மேற்கு வங்காள சி.ஐ.டி. ஐ.ஜி. திலீப் ஆதக் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய பிற குற்றவாளிகள் யார் என்பது குறித்து கைதான கோபால் சர்க்காரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், அதுபற்றிய விவரங்களை தற்போது வெளியிட இயலாது என்றும் அப்போது அவர் கூறினார். கோபால் சர்க்கார் இன்று (வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Average Rating